You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோஜா பேட்டி: "ஆந்திராவில் அமைச்சரானாலும் மாமியார் வீடு தமிழ்நாடுதான்!"
நான் அமைச்சராகியிருப்பது ஆந்திர பிரதேசத்தில் என்றாலும் என்னுடைய மாமியார் வீடு தமிழ்நாடுதான். இதன் பெருமையை மெச்சும் வகையில் தாய் வீடான ஆந்திராவில் பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றுள்ள ரோஜா.
சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சராக ரோஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அமைச்சர் ரோஜா தரிசனம் செய்ய சனிக்கிழமை (ஏப்ரல் 16) வந்தார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றிய பிறகு வெளியே வந்த ரோஜாவை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களில் பலருடன் ரோஜா செல்ஃபி படம் எடுத்துக் கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, தாய் வீடான ஆந்திராவில் நான் சுற்றுலா, கலாசாரம், விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
"மாமியார் வீடான தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நான் அமைச்சராக வர வேண்டும் என வேண்டிக் கொண்டனர். எனக்காக பிரார்த்தனை செய்த தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்," என்று ரோஜா குறிப்பிட்டார்.
"ஆண்டுதோறும் காமாட்சி அம்மனை வந்து தரிசனம் செய்து வருகிறேன். எந்தவொரு காரியமாக இருந்தாலும் காமாட்சி அம்மனிடம் நான் வேண்டிச் செல்வது வழக்கம். குழந்தையே பிறக்காது என ஆரம்பகாலங்களில் சொன்னார்கள். காஞ்சி காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்ட பிறகு எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ,அதனால் காமாட்சி அம்மன் மீது பக்தி அதிகமாகியது," என்று ரோஜா தெரிவித்தார்.
தற்போது அமைச்சர் ஆகி விட்டதால் காமாட்சி அம்மனை தரிசித்து, குங்கும அர்ச்சனை செய்து ஆசிகளை பெற்றுக்கொண்டு, இரட்டை மகிழ்ச்சியோடும், இரட்டை புத்துணர்ச்சியோடும் மக்களுக்கு சேவை செய்ய சென்று கொண்டிருக்கிறேன். எனக்காக யார் யார் வேண்டிக் கொண்டார்களோ,ஆசி வழங்கினார்களோ, அவர்களுக்கெல்லாம் மறுபடியும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரோஜா கூறினார்.
மாமியார் வீடான தமிழ்நாட்டின் பெருமையை மெச்சும் வகையில் தாய் வீடான ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் அமைச்சர் ரோஜா தெரிவித்தார்.
யார் இந்த ரோஜா?
சுமார் இருபது ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருபவர் ரோஜா செல்வமணி. ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவை ஏப்ரல் 10ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்ட (ஞாயிற்றுக்கிழமை) போது புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட 14 பேரில் இவரும் ஒருவராக இருந்தார்.
ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் நாகராஜா ரெட்டி, லலிதா தம்பதிக்கு மகளாகப் பிறந்த ரோஜா, ஸ்ரீபத்மாவதி பெண்கள் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் இளங்கலை பட்டம் முடித்தார். தெலுங்கு பட உலகில் அறிமுகமாகியிருந்தாலும், அவர் தமிழில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் செம்பருத்தி படத்தில் கதாநாயகன் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சரத்குமாருடன் அவர் நடித்த சூரியன் படம் வெற்றி பெறவே அடுத்தடுத்து வந்த தமிழ், தெலுங்கு பட உலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக 2012ஆம் ஆண்டுவரை கொடிகட்டிப் பறந்தார் ரோஜா. மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்த பின் எழுச்சி
இதற்கு மத்தியில் 1999இல் அவர் ஆந்திர பிரதேச அரசியலிலும் ஈடுபட்டார். திரையுலக புகழ் காரணமாக தெலுங்கு தேசம் கட்சி தனது மகளிர் அணி தலைவியாக ரோஜாவை நியமித்தது. 2009இல் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக தேர்தல் களம் கண்ட ரோஜா அதில் தோல்வியைத் தழுவினார். இதைத்தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து விலகிய ரோஜா, அப்போது புதிதாக துவங்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014 மற்றும் 2019ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நகரி தொகுதியில் களம் கண்ட ரோஜா தொடர் வெற்றி பெற்றார்.
ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் முன்பே நடிகை ரோஜா அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கேபினட் அமைச்சராக உயர்த்தப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைந்த ரோஜா, "ஜெகன் மோகன் ரெட்டி என்னை அமைச்சரவையில் சேர்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் சட்டசபைக்கு வருவதை தெலுங்கு தேசம் கட்சி விரும்பவில்லை, ஆனால் ஜெகன் இரண்டு முறை எம்.எல்.ஏ ஆக்கி இன்று என்னையும் அமைச்சராக்கியுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த அரசுக்கும், எனது குடும்பத்துக்கும் பெயர் சேர்க்க பாடுபடுவேன்" என்றார்.
திரையுலகில் பிரபலமாக இருந்தபோதே ரோஜா, தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்