பீஸ்ட்: விஜய் அரசியலுக்கு வருவீர்களா? நெல்சன் கேள்விக்கு என்ன பதில் சொன்னார்?

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

'பீஸ்ட்' திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸால் வெளியிடப்பட்ட அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் விஜய்.

பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சில காரணங்களால் நடக்காமல் போனது.

இதனை சமன் செய்யும் விதமாக பத்து வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். விஜய்யை இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நேர்காணல் செய்திருக்கிறார்.

'பீஸ்ட்' படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்ற போது அங்கு சர்ச்சுக்கு சென்று நடிகர் விஜய் வழிபட்ட சம்பவத்தை குறிப்பிட்ட நெல்சன் அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டப்போது கடவுள் நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது என பதிலளித்தார் விஜய்.

மேலும், 'சர்ச், கோவில், தர்கா என எங்கு சென்றாலும் எனக்கு ஒரே மாதிரியான பக்தி நிலை தான் இருக்கும். அம்மா இந்து அப்பா கிறித்துவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் மதம் குறித்தோ வழிபாடு பற்றியோ எனக்கு எந்த விதமான தடையும் இருந்தது இல்லை' என்று தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் மனஸ்தாபம் இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட விஜய் மக்கள் இயக்கத்தை எஸ்.ஏ.சி. விஜய்யின் ஒப்புதல் இல்லாமலே அரசியல் கட்சியாக பதிவு செய்தார். இதனை விஜய் கடுமையாக எதிர்த்து எஸ்.ஏ.சி.க்கு எதிராக அறிக்கை ஒன்றை பொது வெளியில் வெளியிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து அப்பா என்பவர் குடும்பத்தில் எப்படி பட்டவர் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை நெல்சன் தயக்கத்துடனே விஜய்யிடம் கேட்டார்.

'ஒரு மரத்தை பார்க்கும் போது அதன் பூக்கள் தான் நம் கண்களுக்கு முதலில் தென்படும். வேரின் உழைப்பை யாரும் அறிவதில்லை. அது போல, ஒவ்வொரு குடும்பத்தின் வேர் தான் அப்பா. நாம் மகனாக இருக்கும் போது கூட அப்பாவின் அருமை தெரியாது. நமக்கு ஒரு மகன் வரும் போது தான் அது புரியும். கடவுளுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் கடவுளை பார்க்க முடியாது; ஆனால், அப்பாவை பார்க்கலாம்' என்றார்.

அடுத்து மகன் சஞ்சய்க்கு நடிப்பில் ஆர்வம் இருக்கிறதா எப்போது திரையில் பார்க்கலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டது, "அதை சஞ்சய்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். 'கேமராவுக்கு முன்னால், கேமராவுக்கு பின்னால் என எந்த துறையில் பணிபுரிவார் என்பதையும் சஞ்சய்தான் முடிவு செய்யவேண்டும்,; என்றார் விஜய்.

சமீபகாலமாக விஜயின் நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் என்று சில கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில், விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் இந்த நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டது.

'தளபதி விஜய் எப்போது தலைவர் விஜய்யாக மாறுவார்?' என நெல்சன் கேட்டதற்கு, "மக்களும் காலமும் தான் அதை முடிவு செய்ய வேண்டும். ரசிகர்களின் விருப்பமே என் முடிவு. ஆனால், நான் எப்போதும் விஜய்யாக இருக்கவே விரும்புகிறேன்," என்றார்.

தேர்தல் சமயத்தில் வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்புக்கு மறைமுகமாக அவர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என அன்றைய நாளில் அது வைரல் செய்தி ஆனது. இதை குறிப்பிட்டு நெல்சன் 'வீட்டுல நாலு கார் இருக்கும் போது ஏன் சைக்கிள்ள போனீங்க. அன்னைக்கு வைரல் ஆன செய்தி கேள்விப்பட்டீங்களா?' என கேட்டார்.

இதற்கு விஜய் சிரித்து கொண்டே, 'ஓட்டு போடும் பள்ளி என் வீட்டிற்கு பின்னால் தான். கீழே வரும் போது என் மகன் சைக்கிள் இருந்தது. அவன் நியாபகம் வந்ததால் அன்று சைக்கிளில் போனேன். வேறு எதுவும் இல்லை' என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :