விருதுநகர் தலித் பெண் வன்புணர்வு குற்றச்சாட்டு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

விருதுநகரில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 22வயதான தலித் பெண்ணை திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் உட்பட 8 பேர் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சி செய்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, புதன்கிழமை சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் சம்பவத்திற்கு கிடைக்கும் நீதி பிற வழக்குகளில் இந்தியாவுக்கு முன் மாதிரியாக இருக்கும். நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்குபோல இல்லாமல் இந்த அரசு குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்," என்று பேசியுள்ளார்.

வழக்கின் பின்னணி

காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி நீண்ட நாள்களாக பாலியல் வன்புணர்வு செய்ததாக காதலன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேரை கைது செய்துள்ளதாக விருதுநகர் ஊரக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திமுக நிர்வாகி. அவர் தற்போது கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களை மதுரை சரக டிஐஜி பொன்னி கூறியிருக்கிறார்.

"விருதுநகர் மாவட்டத்தில் தனது தாயாருடன் குடியிருந்து வரும் இளம் பெண்ணிற்கு ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்." என்று பொன்னி கூறினார்.

"பின்னர் அதை அந்த பெண்ணிற்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ள ஹரிஹரனை வலியுறுத்திய போது திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.

மறுத்ததன் காரணமாக அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்த போது மீண்டும் அந்த பெண்ணை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஹரிஹரன் அந்த வீடியோவை அவனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து ஜுனைத் அகமது, பிரவீன் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதனை அறிந்த மாடசாமி அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

பின்னர் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் மார்ச் மாதம் 20ஆம் தேதி விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் குற்ற எண் 42/2022 பிரிவு 376(2) (n), 354 C, 354 D IPC r/w 66E IT Act and 3 (1)(w)(I), 3 (2)(v) SC/ST (POA) Act 1989 இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது ஆகியோர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 4 பேர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று பொன்னி கூறினார்.

பொன்னி - விருதுநகர் பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, மதுரை சரக டிஐஜி பொன்னி

கைது செய்யப்பட்டவர்களில் ஜூனைத் அகமது திமுக நிர்வாகி. அவரை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"இளம் பெண்ணை சீரழித்த மனித மிருகங்கள் அனைவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும். இதுபோன்ற கொடூரமான குற்ற வழக்குகளை, கால தாமதமின்றி விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும்." என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, அமைதி வேண்டி கண்ணீருடன் பாடிய யுக்ரேனிய சிறுமி - வைரலான பாடல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: