வைகோவின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் மாவட்ட செயலாளர்கள்: காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோவுக்கு எதிராக 4 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது மதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை கழக செயலாளர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று திங்கள்கிழமை தொடங்கியது. ஏற்கனவே தலைமை கழக செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டு உள்ளார். இது மதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மதிமுகவின் வாரிசு அரசியலுக்கு தென் மாவட்டங்களில் எதிர்ப்பு
சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் அணி செயலாளர், உள்ளிட்டோர் துரை வைகோ கட்சிப் பணிக்கு கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் சிவகங்கையில் அமைந்துள்ள மதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் வைகோவின் முடிவுக்கு எதிராக தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணி செயலாளர் பாரத மணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல், கட்சி விதிகளின்படி நடத்தப்படவில்லை, கட்சியில் ஜனநாயகம் இல்லை சர்வாதிகாரம் மட்டுமே உள்ளது, வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கி விட்டு அதே வாரிசு அரசியலை நாமும் வரவேற்பதா?, மறைமுக பேரம் பேசி மதிமுகவை, திமுகவுடன் இணைக்க முயற்சி நடந்து வருகிறது என்றெல்லாம் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே மதிமுகவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக கூறி முன்னாள் தேர்தல் பணிக்குழு செயலாளர் பாலுச்சாமி, மாவட்ட துணைசெயலாளர், நகரச் செயலாளர் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் அதிருப்தி குழுவினரை அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினரிடம், கட்சியில் இருந்து நீக்கப்படாதவர்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என கூறியதால் எதிர்ப்பு கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

மதிமுகவில் ஜனநாயகம் இல்லை
இது குறித்து பிபிசி தமிழிடம் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் விரிவாக பேசினார், 'நான் கடந்த 28 ஆண்டுகளாக, எனது வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்தேன். மதிமுகவில் உண்மையாக பணியாற்றி வந்தேன்.
கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி வந்துள்ளேன். மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க அறப் போராட்டங்கள் மூலமாகவும், சட்டப் போராட்டங்கள் மூலமாகவும் தொடர்ந்து போராடி வந்தேன். பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இத்தனை ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மதிமுக மதிப்புக் கொடுக்கவில்லை. மதிமுக கட்சியில் ஜனநாயகம் இல்லை.
கடந்த 2 ஆண்டு காலமாக கட்சி விதிகளை மீறி சர்வாதிகார போக்கில் கட்சி நடத்தப்பட்டு வருகிறது. கலிங்கப்பட்டியில் கடந்தாண்டு அக்டோபர் 20ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வைகோ அவரது மகன் துரை வைகோவை மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்தார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவசரமாக கூட்டம் நடத்தி துரை வைகோவை மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக தேர்வு செய்ததால் 8க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தாக செவந்தியப்பன் தெரிவித்தார்.
துரை வைகோ வின் பிடியில் மதிமுக என குற்றச்சாட்டு
தொடர்ந்து பேசிய செவந்தியப்பன், வைகோ எங்களை தொடர்பு கொண்டு இவ்வாறு தவறுகள் மீண்டும் நடைபெறாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். அடுத்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு சமரச படுத்தினார்.
மீண்டும் நாங்கள் தலைவர் வைகோவை தொடர்பு கொண்டபோது எங்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்கு முழு காரணம் துரை வைகோ தான்.

மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நபர்களை உடனடியாக கட்சியை விட்டு நீக்குங்கள் என துரை வைகோ கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் எங்களுடன் பேச மறுத்துவிட்டார்.
உடனடியாக உயர்மட்ட குழுவை கூட்ட வேண்டும் என வைகோவுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். கடிதத்திற்கு பதில் எதுவும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.
கட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வேண்டும் என நான் கேட்டதற்கு இதுவரை கொடுக்கவில்லை. இது தான் சர்வாதிகாரம்.
இத்தனை ஆண்டுகள் நான் கட்சிக்காக கடும் பணியாற்றி உள்ளேன், என அனைத்தையும் சுட்டிக்காட்டி வரும் கட்சி தேர்தலில் நான் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என கேட்டதற்கு இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் கட்சி தலைமையிடம் இருந்து வரவில்லை என்றார் செவந்தியப்பன்.
கலைஞரின் வாரிசு அரசியலுக்கு எதிரானவர் வைகோ
தொடர்ந்து பேசிய செவந்தியப்பன், ஈழ பிரச்சினையை மையப்படுத்தி மட்டுமே வைகோவின் பின்னால் சென்றோம். ஆனால் எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு கலைஞரின் குடும்ப அரசியலுக்கு எதிராக விமர்சனம் செய்து அரசியல் செய்தார். ஆனால் இன்று அவருடைய மகனை சத்தமில்லாமல் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளார்.
இதுவரை மறைமுக அரசியலில் இருந்து வந்தவரை திடீரென அழைத்து வந்து கட்சியின் உயர் பதவி அளித்து அதற்கு நாங்கள் பின் நிற்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. எனவே இந்த உட்கட்சி ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து போராடி வருகிறோம்.
மறைமுக பேரம் பேசி மதிமுகவை, திமுகவுடன் இணைக்க முயற்சி நடந்து வருவதாக சமீபத்தில் ஒரு ஊடகத்தின் வாயிலாக அறிந்தோம், அந்த செய்தி உண்மையெனில் நேரடியாக இணைத்துவிடுங்கள். அப்படி செய்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பிழைப்பார்கள் இல்லை என்றால் எங்களை போல் ஏமாற்றப்படுவார்கள் என்றார் செவந்தியப்பன்.
நியாயத்தை தட்டி கேட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை
இது குறித்து விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்தது. கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்திவிட்டு துரை வைகோவிற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
மதிமுகவின் கொள்கைகளில் முக்கிய கொள்கையே கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது என்பது தான். அதனை மீறி வைகோ அவரது மகனை கட்சியின் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்தது அர்த்தமற்றது. இதனை தட்டி கேட்ட கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை கட்சியில் இருந்து நீக்க முயற்சி செய்து வருகின்றனர்.
எதற்கும், யாருக்கும் அஞ்சாத வைகோ தற்போது அவரது மகன் பிடியில் உள்ளார். துரை வைகோவின் பேச்சை கேட்டுக் கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களை வைகோ புறம் தள்ளிவிட்டு கட்சி நடத்தி வருகிறார்.
நியாயத்தை தட்டி கேட்டதற்காக நாங்கள் பழிவாங்க பட்டுள்ளோம். மதிமுகவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் கட்சியின் நிலைமை என்னவாகும் என தெரியாத சூழ்நிலை ஏற்படும் என்கிறார் சண்முக சுந்தரம்.
பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இவ்வளவு பெரிய குற்றச்சாட்டா?

மதிமுகவின் மூத்த உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோவிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக சில மூத்த உறுப்பினர்கள் கட்சியின் மீது வீண் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக அண்ணன் செவந்தியப்பன் தலைமையிடம் சீட்டு கேட்டிருந்தார். ஆனால் கூட்டணியில் சிவகங்கை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தபோதிலும் மதிமுகவிற்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதியை ஒதுக்க தலைவர் வைகோ கடைசி வரை பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் சிவகங்கை தொகுதி கிடைக்கவில்லை.
இதனால் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக செவந்தியப்பன் மற்றும் சில கட்சி மூத்த உறுப்பினர்கள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். தலைவர் வைகோ பலமுறை அண்ணன் செவந்தியப்பன் உள்ளிட்ட பலரிடம் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் அவர்கள் யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனால் நானும், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதனும், அண்ணன் செவந்தியப்பன் வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்ல வாய்ப்புகள் வழங்கப்படும் காத்திருங்கள் என்று கூறினோம். ஆனால் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்ற கோபத்தால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக வேலை செய்யாமல் வெற்றிக்கு இடையூறாக பல இடங்களில் செயல்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக செவந்தியப்பனை நீக்க வேண்டும் என கட்சியினர் தொடர்ந்து தலைமைக்கு புகார் அளித்தனர். ஆனால் தலைவர் வைகோ செவந்தியப்பன் நீண்ட காலமாக தன்னுடன் பயணித்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இவர்கள் கட்சி வலுவிழக்க பல இடங்களில் வேலை செய்துள்ளனர். கடந்த 9 மாதங்களில் மூன்று முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இவர்கள் தனியாக ஒரு இடத்தில் கூட்டம் போட்டு அந்தக் கூட்டத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட முடிவு செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
கருத்து வேறுபாடுகள் இருந்தால் நேரடியாக என்னிடம் வந்து சொல்லுமாறு தலைவர் சொல்லியும் இதுவரை தலைவரை சந்திக்க வில்லை. எம்எல்ஏ பதவி கிடைக்கவில்லை என்ற ஒரே காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இன்று நான் கட்சி பதவிக்கு வர கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கும் விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம்தான் துரை வைகோவால் மட்டுமே மதிமுகவின் தலைமை பொறுப்பேற்று கட்சியை வழி நடத்த முடியும் என கட்சிக்கு வருமாறு என்னை அழைத்தார் என்கிறார் துரை வைகோ.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












