வைகோ மகனுக்கு எதிராக வாக்களித்த 2 பேர்: மதிமுக ரகசிய வாக்கெடுப்பில் என்ன நடந்தது?

வையாபுரி
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

ம.தி.மு.கவின் தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். ` கூட்டத்தில் பங்கேற்ற 106 பேரில் 104 பேர் வையாபுரிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பேர் யார் எனத் தெரியவில்லை' என்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகிகள். என்ன நடந்தது?

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.கவின் தலைமைக் கழகமான தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. `ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்கலாமா.. வேண்டாமா?' என்பது தொடர்பாக மட்டுமே இந்தக் கூட்டம் நடைபெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, `வையாபுரி கட்சிப் பதவியில் நியமிக்கப்படலாம்' என்ற குரல்கள் எதிரொலித்தபோது, ` அரசியல் வாழ்வில் நான் அடைந்த துயரங்களை என் பிள்ளைகளும் பெற வேண்டுமா?' எனக் கூறி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு வைகோ செவிசாய்க்காமல் இருந்தார்.

இந்நிலையில், புதன்கிழமையன்று கூடிய கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கூட்டம் கூடியதும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் உள்பட ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் பங்கேற்கவில்லை. தனது உடல்நிலை காரணமாக கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை எனக் கூறி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் கடிதம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களைத் தவிர, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில இளைஞரணி செயலாளர் கோவை ஈஸ்வரன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ம.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

``கூட்டத்தில் என்ன நடந்தது?" என ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பேட்ரிக்கிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இன்று நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, `தொடக்ககாலம் முதலே இந்த இயக்கத்துக்குள் துரை வரக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. இந்த இயக்கத்தில் நிர்வாகிகள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதுதான் இறுதி. அந்த முடிவுக்கு நான் தடை போட முடியாது. கடந்த பொதுக்குழு கூட்டம் வரையிலும், துரை வரக் கூடாது என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன். பெரும்பான்மையான பொறுப்பாளர்களின் எண்ணம் எதுவோ அதன்படிதான் நடக்கும். ஏனென்றால், இது ஜனநாயக இயக்கம். மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்துத்தான் செயல்பட முடியும்' என்றார்.

வையாபுரி

தொடர்ந்து, "ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வைகோ கூறியபோது, `அவ்வாறு செய்ய வேண்டாம்' என கணேசமூர்த்தி கூறினார். இதனை ஏற்காத வைகோ, `என்னுடைய நிர்பந்தத்தால் பதவி வழங்கப்பட்டதாக நாளைக்கு யாரும் கற்பித்துவிடக்கூடாது' எனக் கூறிவிட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கூறினார். பின்னர், `துரை அரசியலுக்கு வரலாமா, பதவி கொடுக்கலாமா?' என ஒரு தாளும், `வேண்டாம்' என ஒரு தாளும் கொடுக்கப்பட்டது. அந்தத் தாளை பூர்த்தி செய்துவிட்டு பெட்டியில் நிர்வாகிகள் போட்டனர். முடிவில், 106 பேரில் 104 பேர் துரை வையாபுரிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு தெரிவிக்காத 2 பேர் யார் எனத் தெரியவில்லை. அவர்கள் கை தவறிக்கூட வாக்களித்திருக்கலாம்" என்கிறார்.

``கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியது என்ன?" என்று கேட்டோம்.

"சில மாவட்ட செயலாளர்கள் பேசும்போது, `பொதுச் செயலாளருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனால், அவர் செயல்படாமல் இல்லை. அவருக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. எனவே, கட்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக துரையை போன்ற ஒருவர் தேவை. மாவட்டங்களுக்கு துரை சுற்றுப்பயணம் வரும்போது 93 ஆம் ஆண்டு இருந்த எழுச்சியைப் பார்க்க முடிகிறது' என்றனர்"

"வேறு சிலர் பேசும்போது, `அண்மைக்காலங்களில் துரை பங்கேற்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் தொண்டர்கள் பெருவாரியாக பங்கேற்றனர். அவர் சுற்றுப்பயணம் வரும்போது மாவட்ட செயலாளர் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள்கூட, துரையை பார்ப்பதற்காக திரண்டனர். அவர் வருவதே சிறப்பாக இருக்கும்' என்றனர். முடிவில் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஆதரவு இருந்ததால், அவருக்குப் பதவி வழங்கப்பட்டது" என்கிறார்.

``ம.தி.மு.க கூட்டத்தில் பங்கேற்காததற்கு என்ன காரணம்?" என அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கோவை ஈஸ்வரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இதுகுறித்து இப்போது பேச விரும்பவில்லை. நாளை பேசுகிறேன்" என்றார்.

வைகோவின் மகனுக்கு பதவி கொடுக்கப்பட்டதில் ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் உள்ளதாலேயே, தலைமைக் கழக கூட்டத்தை அவர்கள் புறக்கணித்துள்ளதாகத் தெரிகிறது. `வரும் நாள்களில் பெரும் பூசலாகவும் இது வெடிக்கலாம்' என்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகிகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :