You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை பொருளாதார நெருக்கடி: 7500 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் இந்தியா - முக்கிய தகவல்கள்
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "இந்தியா இலங்கையுடன் துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 7500 கோடி) மதிப்பிலான கடனுதவிகள் வழங்க கையெழுத்தாகியுள்ளது," என்று தெரிவித்திருந்தார்.
இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கான திட்டங்கள் முன்னெடுப்பு குறித்து பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் உரையாடினார்.
இந்தியாவின், பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் அண்டை நாடுகள் கொள்கையில் இலங்கை முக்கிய பங்காற்றுவது குறித்தும் இந்திய பிரதமர் பேசினார்.
மேலும் இலங்கையின் மக்களுடன் இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை பிரதமர் மோதி மீண்டும் வலியுறுத்தினார்.
அதேபோல, இருநாட்டு சுற்றுலாப் போக்குவரத்துகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் மோதி உரையாடினார்," என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, "இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்ததில் மகிழ்ச்சி, இருநாட்டு பொருளாதார கூட்டு நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் முதலீடு வலுப்பெறுவதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, பசில் ராஜபக்சவுடனான சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பொருளாதார கூட்டணி குறித்து பயனுள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து செயாலாற்றும்" என்று தெரிவித்திருந்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி
இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது.
இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் முதல் சமையல் எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
பெட்ரோல், டீசலின் விலை 250 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், இலங்கைக்குக் கூடுதலாக சுமார் ரூ.7,500 கோடி கடனுதவி வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமா? - அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்
- "புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன் - சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?
- ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் அனுமதி மறுப்பா? - ட்விட்டரில் குவிந்த கண்டனம்
- எங்கள் வானத்தை காப்பாற்றுங்கள் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உருக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்