You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை கடன் நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு - கோட்டாபய ராஜபக்ஸ
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை அடுத்து, அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்களை ஆய்வு செய்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட தான் முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
நாட்டு மக்களுக்கு இன்று (16) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இலங்கையின் கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து தாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய (15) கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது என ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
அந்த கலந்துரையாடல் மூலம் இலங்கை எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இன்றைய பிரச்சினைகளுக்கு மூல காரணம் அந்நிய செலாவணி நெருக்கடி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும். கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும்.
அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத் துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக் கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.
இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.
ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார்.
இதேவேளை, இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.
எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.
நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம். கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார்.
பிற செய்திகள்:
- காஷ்மீர் ஃபைல்ஸ்: இவ்வளவு சர்ச்சை ஏன்? படத்தை பாஜக ஆதரிப்பதன் காரணம் என்ன?
- சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்-2’ நிச்சயம் இருக்காது- இயக்குநர் பாண்டிராஜ்
- கர்நாடகா ஹிஜாப்: கல்வித்துறை அரசாணை செல்லும் என தீர்ப்பு
- சூரியன் கருந்துளையாக மாறி பூமியை விழுங்கி விடுமா? - அறிவியல் சொல்வது என்ன?
- "இங்கு நடப்பது காட்டாட்சியா? உடனே ஆளுநரை மாற்றுங்கள்" - மக்களவையில் டி.ஆர். பாலு
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்