You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்யா திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி: ''எதற்கும் துணிந்தவன்-2’ நிச்சயம் இருக்காது'
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
"ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எதை நினைத்தோமோ, யாருக்கு என்ன சொல்ல வேண்டும் என நினைத்தோமோ அது அவர்களை மிக சரியாக போய் சேர்ந்திருக்கிறது. 'எதற்கும் துணிந்தவன்' படம் பார்த்து விட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் எனக்கு மட்டுமல்ல படக்குழுவுக்கே மகிழ்ச்சி தான்" என உற்சாகமாகத் தொடங்கினார் இயக்குநர் பாண்டிராஜ்.
'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கான பரபரப்பு, ரசிகர்கள் படம் பார்த்து விட்டு கொடுத்த வரவேற்பு, அடுத்தடுத்த பேட்டிகள் என பாண்டிராஜின் சென்னை அலுவலகம் அவரது படம் போலவே ஆட்கள் நிறைந்து கலகலப்பாக இருந்தது. பிபிசி தமிழுக்காக அவருடைய நேர்காணலில் இருந்து,
நீங்களும் நடிகர் சூர்யாவும் இணைந்து கமர்ஷியலாக ஒரு படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்ததும் இந்த கதைக்களத்தை குறிப்பிட்டு தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
"கமர்ஷியல் என்பது கதையில் போக போக சேர்ந்த ஒரு விஷயம். சமூகத்தில் உள்ள இந்த பிரச்சனையை சொல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த கதைக்களத்தை ஒரு டாக்குமெண்ட்ரி போல மிக தீவிரமாக வேறொரு கோணத்திலும் சொல்லியிருக்க முடியும். ஆனால், இதை எப்படி பார்வையாளர்களுக்கு கடத்த போகிறோம் என்பதும் முக்கியம்.
அதனால், கமர்ஷியலாக விஷயங்கள் சேர்த்து நிறைய பார்வையாளர்களை அடைய போகிறோமோ அல்லது எதுவும் இல்லாமல் டாக்கு டிராமா போல ரசிகர்களை சென்றடைய போகிறோமா என்ற விஷயமும் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
நான் 'பசங்க' போல ஒரு படமும் செய்து பார்த்து விட்டேன். 'கடைக்குட்டி சிங்கம்' போன்ற படத்தையும் செய்து விட்டேன். இப்படி ஒவ்வொரு படமும் பார்வையாளர்களை எப்படி போய் சேர்ந்திருக்கிறது என்பதும் தெரியும். அதனால், 'எதற்கும் துணிந்தவன்' கதையை ஒரு மாஸ் ஹீரோவை வைத்து கொண்டு கமர்ஷியலாக இளைஞர்களுக்கு, சண்டை காட்சிகள் பிடிக்கும் என்பவர்களுக்கு, குடும்பத்தோடு வருபவர்களுக்கு காமெடி என ஜனரஞ்சகமான விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கும்".
'சூரரைப்போற்று', 'ஜெய்பீம்' மாதிரியான தீவிர கதைக்களத்துக்கு பிறகு கமர்ஷியலான இந்த கதைக்கு நடிகர் சூர்யாவை ஒப்புக்கொள்ள வைக்கும் போது அவரை முந்தைய படங்களின் கதைகளில் இருந்து வெளியே எடுத்து வர ஏதும் சவால்கள் இருந்ததா?
"'எதற்கும் துணிந்தவன்' கதையில் சூர்யா ஒப்புக் கொண்ட போது, 'சூரரைப்போற்று' படம் வெளியாகவே இல்லை. 'ஜெய்பீம்' படப்பிடிப்பே அப்போது அவர் போகவில்லை. நான் சூர்யாவுக்கு இந்த கதை சொல்லும் போது 'சூரரைப்போற்று' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்திருந்தது. எனக்கு இந்த 'சூரரைப்போற்று', 'ஜெய்பீம்' படங்கள் எப்படி வர போகிறது என்பதே தெரியாது.
இந்த கதை கேட்டுவிட்டு, ''ஜெய்பீம்' படத்திலும் வழக்கறிஞராக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன். இரண்டும் ஒன்று போல இருந்து விடாதே?' என்று சூர்யா கேட்டார். 'அது உங்களுக்குதான் சார் தெரியும்' என்று சொன்னேன். 'சூரரைப்போற்று' படம் தயாரானதும் முன்பே எனக்கு போட்டு காண்பித்தார்கள். அந்த படம் பார்த்ததும் அது ஒரு பயோகிராஃபி என்பது தெளிவாக தெரிந்து விட்டது. 'ஜெய்பீம்' படமும் பார்த்தேன். ஆனாலும் எனக்குள் ஒரு பயம் இருந்தது. 'எதற்கும் துணிந்தவன்', 'ஜெய்பீம்' வழக்கறிஞர் இரண்டையும் ஒப்பிடுவார்களோ என்று. ஆனால், பார்வையாளர்கள் இரண்டிற்குமான வேறுபாடுகளை புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
ஓடிடி பார்வையாளர்கள் பத்து சதவீதம் தான். என்னுடைய பார்வையாளர்கள் மீதம் 80 சதவீதம். அதனால் அவர்களை திருப்தி படுத்துவதுதான் என்னுடைய நோக்கம்".
'சந்தோசத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவன சந்தோஷ படுத்தி பாக்கறதுதான்' என இயக்குநர் பாக்கியராஜ் அவருடைய வசனம் படத்தில் வைத்திருந்தீர்கள். இந்த காட்சி பார்த்துவிட்டு பாக்கியராஜ் எதுவும் பேசினாரா?
"நான் என்னுடய ஆரம்ப காலத்தில் 'பாக்யா' பத்திரிக்கையில் ஆஃபிஸ் பாயாக வேலை பார்த்தேன். 'பாக்யா' புத்தகத்தில் வரும் எனக்கு மிகவும் பிடித்த வாசகம். பாக்யராஜ் சாருடைய ஸ்டைலும் அதுதான். என்னுடயதும் அதுதான்.
அதனால், படத்தில் அதை சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அதை சொன்னாலும் அவர் எதுவும் சொல்ல போவதில்லை. இதை பார்த்துவிட்டு சாந்தனு ட்வீட் செய்திருந்தார். அவர் நிச்சயம் இதை பாக்கியராஜ் சாரிடம் கொண்டு போய் சேர்த்து விடுவார்.
திரையரங்குகளுக்கு வரும் மக்களை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும். அதில் அவர்களுக்கு பொருந்தும்படி நல்ல கருத்துகளை கொடுக்க வேண்டும்".
சூர்யா முருகர் வேஷத்தில் இந்த படத்தில் ஒரு பாடலில் வருவது யாருடைய ஐடியா?
"கதைக்குள்ளேயே அது வரும். இன்னொன்று 'கந்தன் கருணை' படத்திலேயே சிவக்குமார் சாரையும் முருகர் வேஷத்தில் பார்த்திருப்போம். அதனால், சூர்யா சாருக்கும் அப்படி வைத்தால் என்ன என்று தோன்றியது. பாடல் முழுவதும் முருகர் வேஷத்திலேயே சூர்யா வருவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என தெரியவில்லை. அதனால் முருகர், வேடர், அரசர் என வெவ்வேறு வேடங்களில் கொண்டு வந்தோம்".
'மணி ஹெய்ஸ்ட்' இணைய தொடரில் வருவது போல டைனிங்கில் கதாநாயகியை கடத்த ஜாலியாக திட்டமிடுவது, அதன் பின்னணியில் 'பெல்ல சியோ' பாடல் ஒலிப்பது என பல ரெஃபரன்ஸ் இருந்ததே?
"ஆமாம்! நான் 'மணி ஹெய்ஸ்ட்' இணைய தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இளைஞர்களுக்கான விஷயம் இருக்க வேண்டும் என்பதில் 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் ரெஃபரன்ஸ்ஸூம் சேர்த்தேன். வில்லன் வினய் கதாப்பாத்திரத்திரம் மற்றும் எடிட்டிங்கிலும் அது பிரதிபலித்திருக்கும்.
இது முழுக்க ஒரு கிராமத்து படம். ஆனால், வில்லன் கதாப்பாத்திரத்தில் சிட்டி படத்திற்கான மேக்கிங் இருக்கும். இதில் சிலருக்கு மாற்று கருத்தும் இருக்கிறது. நீங்கள் எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது. அம்மாவுடைய சாப்பாடு, ஐந்து பிள்ளைகளில் நால்வருக்கு பிடிக்கும். ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம். அப்படிதான் இதுவும்".
படத்தில் பலருக்கும் பிடித்த காட்சியாக பிரச்சனைக்கு பிறகு ஆதினி- கண்ணபிரான் உட்கார்ந்து பேசுவதை குறிப்பிட்டு சொல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. இயக்குநராக உங்களுக்கு எந்த காட்சி பிடித்து இருந்தது?
"இந்த காட்சிதான். எழுதும் போதே இதை நான் ரசித்து ரசித்து செய்தேன். இயக்குநருக்குள்ளும் ஒரு எழுத்தாளர் இருப்பார்கள் இல்லையா? இந்த காட்சிக்கான வசனங்கள் மட்டும் திரும்ப திரும்ப ஒரு பன்னிரெண்டு வெர்ஷன் எழுதி இருப்பேன். இதை காட்சிப்படுத்தும் போதும் மிகவும் ரசித்து எடுத்தேன். கதாநாயகி பிரியாவுக்கும் இந்த காட்சிக்கான பயிற்சி முன்பே நன்றாக கொடுத்தோம். உண்மையில், இந்த காட்சியை முதலில் நடிக்க வைத்துதான் பிரியங்காவை இந்த கதைக்கே தேர்ந்தெடுத்தோம். ஏனெனில், இந்த காட்சி கதைக்கு அவ்வளவு முக்கியமானது.
இப்பொழுது கூட பண்ருட்டியை சேர்ந்த டிஎஸ்பி படம் பார்த்துவிட்டு இந்த காட்சியை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தி கொள்கிறோம் என எடிட் செய்து தர சொல்லி கேட்டிருக்கிறார். இப்படி மக்கள் மத்தியில் இந்த காட்சி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது"
உங்களுடைய படங்களில் வழக்கமாக கதாப்பாத்திரங்களுடைய பெயர்கள் தமிழில் கேட்டதும் பிடித்ததுமாக இருக்கும். இந்த படத்திலேயே கூட ஆதினி, கண்ணபிரான், அஞ்சுமணி அப்படின்னு இந்த பெயர்கள் எல்லாம் எங்கிருந்து பிடித்தீர்கள்?
"எங்கிருந்து வேண்டுமானாலும் எடுப்பேன். என்னுடைய முதல் படத்திலேயே போதும் பொண்ணு என பெயர் வைத்திருப்பேன். ஏன் அந்த பெயர் என்றால் அஞ்சு பெண்கள் பிறந்து விட்டது. அதனால் போதும் பொண்ணு என அந்த பெயர் என காரணம் சொல்வார்கள். சோபிக்கண்ணு பெயருக்கும் திரையரங்குகளில் நல்ல ரெஸ்பான்ஸ். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒருவர், 'படத்துல பெயர் எல்லாமே பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார்கள்' என்று பேசி கொண்டு போனார்கள். அது எனக்கு மனதில் பதிந்து விட்டது. இவ்வளவு கவனிக்கிறார்களா என அடுத்தடுத்த படங்களில் பெயர்களுக்கு என தனி கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கதாநாயகி பெயரான கண்ணுக்கினியாள் 'பாண்டியன் பரிசு' புத்தகத்தில் இருந்து எடுத்தது. 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் கதாநாயகியின் பெயரான ஆதினி என் நண்பருடைய மகள் பெயர். ஆதினிக்கு முதன்மையானவள் என்பது அர்த்தம். ஆனால், நிறைய பேர் 'வேள்பாரி'யில் ஆதினி பெயர்தான் முதலில் நியாபகம் வருகிறது என்றார்கள். நானும் அந்த நாவல் படித்திருக்கிறேன். பிறகு சு.வெங்கடேசன் அவரை தொலைபேசியில் அழைத்து, 'என் நண்பருடைய மகள் பெயராக இருந்தாலும், பலருக்கும் உங்கள் நாவல் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. அதனால், அந்த உரிமையை நீங்கள் எனக்கு கொடுத்து விடுங்கள்' என்று கேட்டேன். 'நீங்கள் அழைத்து சொன்னதே மகிழ்ச்சி' என்று சொன்னார்.
ஒருமுறை ஈரோடிற்கு நான், பாலாஜி சக்திவேல் எல்லாம் சென்றிருந்தோம். அங்கு ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் யோசனைவதி என்ற பெயர் இருந்தது. அதை பார்த்துவிட்டு பாலாஜி சார், 'உங்களது படத்தின் கதாப்பாத்திர பெயர் போலவே இருக்கிறது' என்று சொன்னார். அதை நான் கவனித்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் சிவகார்த்திகேயன் அம்மா கதாப்பாத்திரத்திற்கு அந்த பெயர் வைத்தேன். 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் தேவதர்ஷினியின் 'அஞ்சுமணி' பெயர் என் தோட்டத்தில் வேலை பார்க்கும் அக்காவின் பெயர். இப்படி கிடைக்கிற, பார்க்கிற இடத்தில் இருந்து பெயர்களை எடுத்து கொள்வேன்".
'எதற்கும் துணிந்தவன்' படத்துடைய இறுதியில் 'கண்ணபிரான் will be back' என முடித்து இருப்பீர்கள். இதை வைத்து படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு இணையத்தில் அடிபடுகிறதே?
"'எதற்கும் துணிந்தவன்' இரண்டாம் பாகம் குறித்து இதுவரை ஐடியாவே இல்லை. ஜெயிலுக்குள்ளே போன கண்ணபிரான் திரும்ப வருவார் என்பதை சொல்லவே அப்படி காட்டினேன். ஆனால், அதை பார்ட் 2 என நினைத்து சூர்யாவின் ரசிகர்கள் பெரிய மாலையோடு என்னை பார்க்க வந்து, 'அடுத்தும் நீங்கள் அண்ணனோடு தான் படம் செய்ய வேண்டும். அதுவும் 'எதற்கும் துணிந்தவன்2' தான் வேண்டும்' என்று சொன்னார்கள்.
அதற்கு நான், 'கண்ணபிரானை பார்த்தாச்சு. மீண்டும் அதையே ஏன் பார்க்க வேண்டும். அண்ணனை வேறு விதமாக காட்டுகிறேன்' என சொல்லி இருக்கிறேன். அதேதான், கண்ணபிரான் எனும் கதாப்பாத்திரத்துடைய உடல் மொழி என்பது இதுதான். கல்யாணமும் ஆகிவிட்டது. இதற்கு மேல் காட்சிகளில் வேண்டுமானால் சில சர்ப்ரைஸ் வைக்கலாம். ஆனால், வடிவம் என்பது இதுதான். அதனால், சூர்யாவுடன் மீண்டும் இணைந்தால் நிச்சயம் அது வேறு கதையாக தான் இருக்கும்".
''பசங்க' படம் இயக்கும் போது கடைசி பையன் போல வேகம் இருந்தது, இப்போது மூத்த பையன் மாதிரி பொறுப்பு கூடியிருக்குன்னு' சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தீர்கள். சினிமா உங்களை எப்படி மாற்றி இருக்கிறது?
"நேற்றை விட இன்று ஒரு நாள் நான் அனுபவத்தில் மூத்தவன் என எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வார். நான் படம் எடுக்க வந்த போது எனக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. அந்த பொறுப்பும் எனக்கு இருக்கிறது. கொரோனா சமயத்தில் சினிமாவை பொருத்தவரை பார்வையாளர்களுடய மனநிலையே மாறிவிட்டது. அப்படி அவர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வருவது என இயக்குநராக எனக்கு பொறுப்பு இருக்கிறது.
ஒரு படம் வெற்றிகரமாக ஓடினால் அதை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், தோல்வி அடைந்தால் அதன் பொறுப்பு முழுவதும் இயக்குநரை மட்டுமே சொல்வார்கள். உதவி இயக்குநராக நாம் இருக்கும் போது நம்மை நம்பி நூறு ரூபாய் கூட கொடுக்க யோசிப்பார்கள். ஆனால், இயக்குநராகி விட்டதும் நம்மை நம்பி தயாரிப்பு நிறுவனம் கோடி கணக்கில் பணம் கொடுக்கிறார்கள் என்றால் அந்த பொறுப்புணர்வும் பயமும் அதிகமாகி இருக்கிறது. அதனால்தான் அப்படி சொன்னேன்".
இயக்குநர் பாண்டிராஜ் படங்கள் என்றாலே, பெரும்பாலும் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கான எண்டர்டெயினர் படங்களாவே இருக்கிறது. இதை விட்டு, பரிசோதனை முயற்சியாக வேறு ஜானரில் படங்கள் எடுக்க விருப்பம் இருக்கா?
"கண்டிப்பாக அடுத்தடுத்து அது போன்ற படங்கள் இயக்குவேன். 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இரண்டாம் பாதியே என்னுடைய வழக்கமான படங்களின் பாணியில் இருந்து மாறியிருக்கிறது. 'பசங்க' படத்தை பார்த்து விட்டு, 'எதற்கும் துணிந்தவன்' பார்த்தால் இரண்டும் நான் தான் எடுத்தேன் என்பதை புதிதாக பார்க்கும் ஒருவர் நம்ப மாட்டார்.
'பாண்டிராஜ் பசங்களை வைத்து ஜெயிச்சுட்டீல்ல' என கேட்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் 'பசங்களை வைத்து மட்டும்தான் படம் எடுக்க நமக்க வருமா?' என்ற எண்ணமும் இருந்தது. பிறகு 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'நம்ம வீட்டு பிள்ளை', 'கடைக்குட்டி சிங்கம்' படங்கள் வந்ததும் குடும்ப இயக்குநர் என சுருக்கினார்கள். குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வருவது சந்தோஷம் என்றாலும் அடுத்த கட்டத்திற்கு வேறு கதைக்களங்களில் முயற்சி செய்து பார்க்க விருப்பம்தான். ஆனால், வேறு மாதிரியாக செய்கிறேன் என என் படங்களுக்கான ஃபேமிலி ஆடியன்ஸை தவற விடமாட்டேன். எந்த கதைக்களத்துக்குள் போனாலும் குடும்பத்திற்கான விஷயங்களை என்னுடைய கதையில் சேர்ப்பேன்".
'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'நம்ம வீட்டு பிள்ளை' என மூன்று படங்கள் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றி இருக்கிறீர்கள். சமீபத்தில் அவர் 10 வருடங்கள் சினிமாவில் நிறைவு செய்ததற்கு நன்றி செலுத்தும் அறிக்கையில் உங்கள் பெயரைதான் முதலில் குறிப்பிட்டு இருந்தார். இருவரும் இணையும் அடுத்த படம் எப்போது எதிர்ப்பார்க்கலாம்?
"கண்டிப்பாக செய்வோம்! சிவாவும் நானும் இணைகிறோம் என்றால் தயாரிப்பு தரப்பிலேயே பட்ஜெட் பார்க்க மாட்டோம் என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் நாங்கள் இதற்கு முன்பு இணைந்த 'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'நம்ம வீட்டு பிள்ளை' ஆகிய மூன்று படங்களுமே நல்ல வெற்றியை பெற்றது. அதனால், தயாரிப்பு தரப்பில் இருந்து இப்பொழுதும் கேட்டு கொண்டேதான் இருப்பார்கள். அதனால், அடுத்தடுத்து செய்வதை விட எங்களது முந்தைய மூன்று படங்களுக்கான இடைவெளி போல அமைந்து செய்தால் நன்றாக இருக்கும்.
கார்த்தி, சூர்யாவுடன் மீண்டும் இணைவது அப்படியான இடைவெளிக்கு பிறகுதான். சூர்யா சாருக்கு எப்பொழுதும் என் மீது தனிப்பட்ட மரியாதை அன்பு இருக்க காரணம் அவருடைய 2டி தயாரிப்பில் வந்த முதல் படம் என்னுடய 'பசங்க2'தான். பிறகு 'கடைக்குட்டி சிங்கம்'. இதேபோலதான் சன்பிக்சர்ஸ் தயாரிப்பிலும் 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' என தயாரிப்பாளர்களுக்கு இயக்குநராக அந்த நம்பிக்கையை தக்க வைத்துள்ளேன்".
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்