You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகா ஹிஜாப்: மாநில கல்வித்துறை அரசாணை செல்லும் என தீர்ப்பு
பள்ளி, கல்லூரி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள மாநில கல்வித்துறையின் அரசாணை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீக்ஷித், ஜே.எம். காஸி அடங்கிய அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், "நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசு தரப்பு பதில்கள் போன்றவற்றின் அடிப்படையில் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கான விடையை இந்த தீர்ப்பின் மூலம் வழங்குகிறோம்," என்று கூறினர்.
முதலாவதாக இஸ்லாத் விதிகளின் கீழ் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறையா? இரண்டாவதாக, கருத்துச் சுதந்திரம் தனி உரிமைக்கான உரிமையா? மூன்றாவதாக பிப்ரவரி 5ஆம் தேதியிட்ட கர்நாடகா கல்வித்துறை அரசாணை, மனபூர்வமற்ற முறையிலும் தன்னிச்சையாகவும் வெளியிடப்பட்டதா? என நீதிமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
அதற்கான எங்களின் விடை, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் கீழ் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை; சீருடையின் தேவை என்பது அரசியலமைப்பின் 19(1)(a)இன் கீழ் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்கு ஒரு நியாயமான கட்டுப்பாடு, பள்ளி சீருடையை பரிந்துரைப்பது என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு மட்டுமே, அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது; இந்த விவகாரத்தில் அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
11 நாட்கள் நடந்த விசாரணை
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தலைமை நீதிபதி இடம்பெற்ற அமர்வு, 11 நாட்களாக நடத்தியது. கடைசியாக பிப்ரவரி 25ஆம் தேதி வழக்கு விசாரித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின் முதல் நாளிலேயே, மாணவர்கள் ஹிஜாப், காவி சால்வை அல்லது எவ்வித மத அடையாளத்தையும் வகுப்பறைக்குள் அணியக்கூடாது அல்லது எதையும் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. கல்வி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட சீருடையை மட்டுமே மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்லும் போது அணிந்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தனர்.கர்நாடகாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததால் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். மனுவில் மேற்கோள்காட்டப்பட்ட அடிப்படைகளில், மனசாட்சியின்படி கூடிய சுதந்திரம் மற்றும் மத திற்கான உரிமை இரண்டுக்கும் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. இருப்பினும் மாணவிகள் இஸ்லாமிய நம்பிக்கையை கொண்டவர்கள் என்று கூறி கல்லூரி நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.இந்த விஷயத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூர் மற்றும் பெலகாவியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.உடுப்பி, தட்சிண கன்னடா, ஷிவமொக்கா, கலபுர்கி ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
என்ன சர்ச்சை?
கர்நாடகாவில் உடுப்பியில் உள்ள பெண்களுக்கான மகளிர் பல்கலைக்கழக முன் கல்லூரியில் 6 மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிர்வாகத்தின் அந்த முடிவை ஏற்க மாணவிகள் மறுத்து விட்டனர்.
மாணவிகளின் கோரிக்கையை ஏற்காததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுப்பி மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தொடங்கியதற்கு எதிராக வேறு பிரிவு மாணவிகள் காவி துப்பட்டாவை போட்டுக் கொண்டும் சில மாணவர்கள் காவி நிற சால்வை அணிந்தும் வந்ததால் இந்த விவகாரம் பெரிதாகியது.இந்த விவகாரம் தீவிரமடைந்து அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குதித்தன. இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்பே தீர்மானிக்கப்பட்டபடி சீருடை நீங்கலாக வேறு அடையாள சின்னங்களை அணியக்கூடாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் ஹிஜாப் அணியலாம். ஆனால் வகுப்பறைக்குள் ஹிஜாபை அணியக்கூடாது ன்று பள்ளி, கல்லூரி நிர்வாகம் கூறியது. இருப்பினும் ஹிஜாப் அணிந்து தான் வகுப்பறைக்குள் வருவோம் என்று மாணவிகள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்