You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் ஃபைல்ஸ்: இவ்வளவு சர்ச்சை ஏன்? படத்தை பாஜக ஆதரிப்பதன் காரணம் என்ன?
- எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
1990 காலகட்டத்தில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படம் ஒன்று, இந்தியாவில் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தப் படத்திற்கு துணை நிற்கிறது. ஏன்?
கடந்த வெள்ளிக்கிழமையன்று காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. ஒரு பல்கலைக்கழக மாணவர், தனது காஷ்மீரி இந்துப் பெற்றோர் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை கண்டுபிடிக்கிறார். தன் பெற்றோர், விபத்தால் இறந்ததாக தன் தாத்தா சொன்னது பொய் என்று அவருக்கு தெரியவருகிறது. அதுகுறித்த உண்மைகளைத் தேடுவதாகப் படம் நீள்கிறது.
இந்தத் திரைப்படம் பல பிரதான விமர்சகர்களிடமிருந்து நடுநிலையான விமர்சனங்களையே பெற்றது. சில விமர்சகர்கள் இதை "நடந்த சம்பவம்தான்" என்றும் அழைத்தனர். ஆனால்சமூக ஊடகங்களில் இந்தப் படம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
காஷ்மீரின் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட, ரத்தம் தோய்ந்த ஒரு பகுதியை இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இந்தப் படத்தின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். அதேசமயம், சம்பவங்களின் உண்மைத்தன்மையில் கவனக்குறைவுகள் இருப்பதாகவும், இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளனர். பாஜக ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தை பார்ப்பதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல்துறைக்கு ஒரு நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்கள் `படத்தை இழிவுபடுத்துவதற்கான சதி' என்று இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
எந்தப் பெரிய நட்சத்திரங்களும் இல்லாத ஒரு சிறிய பட்ஜெட் படம் இது. ஆனால், ஏன் இந்த அளவுக்கு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது?
காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம்
திரைப்படம் காஷ்மீரின் வரலாற்றை ஆராய்கிறது. பாகிஸ்தானுடனான இந்திய எல்லை மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் என்ற அமைதியற்ற பகுதி, நீண்ட காலமாக ஒரு முக்கியப் பிரச்னையாகவே நீடித்து வருகிறது.
1980 களின் பிற்பகுதியில், இந்திய ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீரில் ஆயுதக்கிளர்ச்சி உருவானது. இந்தநிலையில், இஸ்லாமியவாத போராளிக் குழுக்கள் 1990களில் சிறுபான்மையினராக இருந்த காஷ்மீரி இந்துக்களை - அதாவது உயர்சாதி பண்டிட்களை - குறிவைக்கத் தொடங்கினர். இதன் விளைவாக, பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதில் பலர் வீடு திரும்பவே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசு , இந்த விவகாரத்தைக் கையாள, கட்டற்ற சுதந்திரத்துடன் ராணுவத்தைப் பணியில் ஈடுபடுத்தியது. கைது செய்வதற்கும் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பெரும் அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இதன் விளைவாக, உள்ளூர் மக்களுக்கு எதிராக அத்துமீறல்களில் ஈடுபட்டதாக பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டன. ஆனால் பாதுகாப்புப்படையினர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள்.
ஆனால் இப்பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக, ஆவேசமான பல போராட்டங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். காஷ்மீருக்கு அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த சுயாட்சியை, கடந்த 2019 ஆம் ஆண்டில் மோதி அரசு ரத்து செய்த பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது.
பிரச்னை நிலவும் இப்பிரதேசத்தை, தனது தேர்தல் உத்தியாகவும் பயன்படுத்தியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. குறிப்பாக இந்துக்கள் வெளியேறிய பிரச்னையில் பாஜக கவனம் செலுத்துகிறது. இந்த நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பண்டிட்களின் அவலநிலையைப் புறக்கணித்ததாக பாஜக குற்றம் சாட்டும் நிலையில், தங்களுக்கு மறுவாழ்வு அளிக்க எந்த கட்சியும் பெரிதாக நடவடிக்கை எடுத்ததில்லை என்று பண்டிட் சமூகம் அனைத்துக் கட்சிகள் குறித்தும் தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் கொந்தளிப்பான கடந்த காலத்தை தழுவி பல புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் வெளி வந்திருந்தாலும், அதில் சில மட்டுமே இந்துக்களின் வெளியேற்றத்திலும் அதற்கான காரணத்திலும் கவனம் செலுத்தியுள்ளன என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராகுல் பண்டிதா கூறுகிறார்.
மேலும், "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம், இப்படி ஒரு வலுவான எதிர்வினையை ஏற்படுத்தியிருப்பதற்கு காரணம், தங்களின் கதை பெரிதாக பேசப்படவில்லை என பண்டிட்டுகள் உணர்வதால்தான். இப்போதுவரை அடங்கிக்கிடந்த எண்ணங்களின் வெளிப்பாடாக இதை அவர்கள் கருதுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் கூறுகிறார்.
பண்டிதாவின் புத்தகம், 'Our Moon Has Blood Clots: A Memoir of a Lost Home' இளவயதில் அவர் ஸ்ரீநகரை விட்டு ஓடிய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. காஷ்மீரின் இந்த அத்தியாயத்தைப் பற்றி நாடு முழுவதும் உள்ள மக்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
"எனது புத்தகம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்தியாவின் எல்லா மூலைகளிலிருந்தும், இந்தியாவிற்கு வெளியே உள்ள சிலரிடமிருந்தும் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று நான்கு மின்னஞ்சல்கள் எனக்கு வருகின்றன. அதில், இந்த சோகத்தின் அளவு பற்றி எங்களுக்கு இதுவரை தெரியாது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்," என்றும் தெரிவித்தார்.
ஆனால் ஒருசிலர் இது பெரிதான ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் நவீனகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள், வட கிழக்கு அல்லது மாவோயிஸ்ட்களின் எழுச்சி பெற்ற மாநிலங்களில் இந்தியாவின் பாதுகாப்பு படையினருக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை அரிதாகவே பொது சினிமாவில் காட்டப்படுகின்றன.
"இது சொல்லப்படாத கதை என்று தொடர்ந்து கூறப்படுவது குறித்து நான் சிறிது ஆச்சர்யம் அடைகிறேன். பாலிவுட் இதுவரை இந்தக் கதைகளைச் சொன்னதேயில்லை. ஆனால் இதுமாதிரி கதைகளை பாலிவுட் சொன்னதும் இல்லை" என்கிறார் காஷ்மீரி பண்டிட்டும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான சஞ்சய் கக். இப்பகுதி பற்றி ஏராளமான செய்திகளை சேகரித்தவர் அவர்.
"1984 டெல்லி கலவரத்தின் கதையை அல்லது 2002 இல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் கதையை எப்போது பாலிவுட் பேசியது? இந்த நாட்டில் முக்கிய நீரோட்டத்தில் கவனம் செலுத்தப்படாத ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன." என்று சஞ்சய் கக் குறிப்பிட்டார்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த வரலாறு தொடர்பாக சர்ச்சை கிளம்பவில்லை. அது நடந்தது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் கதை சொல்லப்பட்ட விதம் மற்றும் யார் சொன்னார்கள் என்பதே சர்ச்சைக்குரியதாக உள்ளது.
ஒருமுனைப்படுத்தல் மற்றும் அரசியல்
இந்த திரைப்படம் நிச்சயமாக காஷ்மீரி பண்டிட்களின் மனதை தொட்டுள்ளது. ஆனால் சிக்கலான வரலாற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, படத்தின் நுணுக்கமின்மையை விமர்சகர்கள் கடுமையாக குறைகூறியுள்ளனர். சிலர் படத்தை பாராட்டியுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் இதில் இழிவு படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வேறு சிலர் கூறியுள்ளனர்.
பார்வையாளர்களின் கருத்துகளும் கூட இதில் பிளவுபட்டுத்தான் காணப்படுகின்றன. அதே சமயம், மனதை தொட்டதாக குறிப்பிட்ட சிலர் , இது காயங்களைக் குணப்படுத்த உதவும் என்று கருதுகின்றனர். ஆனால் காஷ்மீரி முஸ்லிம்கள் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்படுவது மற்றும் திரைப்படம் சொல்ல வரும் செய்தி குறித்து பிறர் கவலைப்படுகின்றனர்.
வெளிப்புற தளங்களின் உள்ளடக்கத்திற்கு பிபிசி பொறுப்பாகாது.
வெளிப்புற தளங்களின் உள்ளடக்கத்திற்கு பிபிசி பொறுப்பாகாது.
வெளிப்புற தளங்களின் உள்ளடக்கத்திற்கு பிபிசி பொறுப்பாகாது.
திரைப்படத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு எதிராக சிலர் எச்சரித்துள்ளனர். "பாதிக்கப்பட்டவர்களின் வலியை நீங்கள் ஒப்புக் கொள்ளாதபோது, உங்களால் எந்த வேறுபாடுகளையும் தீர்க்க முடியாது." என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், பா.ஜ.க அமைச்சர்கள் இந்த படத்தை வலுவாக ஆதரிக்கின்றனர். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "அப்பாவிகளின் ரத்தத்தில் ஊறிய இந்த வரலாறு மீண்டும் நடக்காமல் இருக்க, படத்தைப் பார்க்குமாறு மக்களை வலியுறுத்துகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வார இறுதியில் பிரதமர் மோதியைச் சந்தித்தனர். மேலும் படத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்த பாலிவுட் நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாகவே காணப்படுகிறார்கள்.
பாஜக அரசின் கீழ் மட்டும்தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த படத்தின் முன்னணி நடிகர் அனுப்பம் கேர், "ஆம். அது உண்மைதான். ஒவ்வொரு படத்திற்கும் அதற்கான நேரம் இருக்கிறது" என்றார்.
பாஜக ஆதரவாளராக கருதப்படும் படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் பணியில் துல்லியமின்மை காணப்படுவதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு விமானப்படை ஸ்குவாட்ரன் லீடர் மற்றும் அவரது மரணத்தை சித்தரிக்கும் காட்சிகளை படத்தில் சேர்ப்பதில் இருந்து நீதிமன்றம் கடந்த வாரம், அவருக்குத் தடை விதித்தது. காரணம், விவரங்களில் உண்மை இல்லை என்றும் அவரை இழிவுபடுத்துவதுபோல இருப்பதாகவும் கூறி இறந்தவரின் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் சதி இருப்பதாகக்கூறும் அக்னிஹோத்ரியின் முந்தைய திரைப்படம், 'தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்', வதந்திகளை உண்மைகளாக முன்வைக்கிறது என்று விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பில், சாஸ்திரியின் பேரன் அக்னிஹோத்ரிக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். அந்தப் படம் தேவையற்ற சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
அக்னிஹோத்ரி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை நியாப்படுத்தியுள்ளார். "இது சிலர் நம்ப விரும்புவது போல், இந்து அல்லது முஸ்லிம்கள் பற்றியது அல்ல."என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் திங்கட்கிழமை இரவுக்குள், உண்மைச் சரிபார்ப்பு தளமான Alt News இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர், திரையரங்குகளில் பார்வையாளர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய பல வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.
2020 இல், பண்டிதாவால் இணைந்து எழுதப்பட்ட ஷிகாரா திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்த திரைப்படத்தின் வரவேற்பு உள்ளது. அந்தப்படமும் இதே வரலாற்றை ஆராய்கிறது. இந்து வலதுசாரிகள் அப்போது தயாரிப்பாளர்களை வசைபாடினர். வரலாற்றை மறைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறி, அவர்களை "துரோகிகள்" என்று அழைத்தனர்.
"மக்கள் அதை மிகவும் வெளிப்படையான வடிவத்தில் பார்க்க விரும்புவதாக நான் நினைக்கிறேன். நாங்கள் அதைச் செய்யவில்லை," என்று பண்டிதா கூறினார்.
"வலதுசாரிகள் விரும்பும் விதமாக கதையை சரியாகச் சொல்வதை இந்தப் படம் செய்கிறது" என்கிறார் திரு கக். "ஷிகாரா அந்தத் தகுதியைப் பூர்த்தி செய்யவில்லை. அதனால் அது தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் இது அவர்களின் சித்தாந்தங்களை உலகிற்கு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
விவகாரத்தின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, "எல்லா வகையான படங்களுக்கும்" இடம் உள்ளது என்று பண்டிதா கூறுகிறார். ஆனால் ஆய்வாளர் சஞ்சய் கக் இதற்கு உடன்படவில்லை. "இது தான் உண்மை" என்று ஒரு வலியுறுத்தல் உள்ளது. ஆனால் இந்த 30 வருடங்களில் காஷ்மீரின் கதையை சொல்லாமல் காஷ்மீரி பண்டிட்களின் கதையை சொல்ல முடியாது. அதனால் தான் பாலிவுட்டில் இதற்கு முன் இந்தக்கதை சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது.
ஏனென்றால், சிக்கலான தன்மையுடன் கூடிய இந்த விவகாரத்தை அதற்கு ஏற்ற முறையில் சொல்ல இங்கு இடம் இல்லை "என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்