தமிழ்நாடு மழை, வெள்ள சேதத்துக்கு பேரிடர் நிதி எவ்வளவு? 6 மாநிலங்களுக்கு ரூ.1,682 கோடி ஒதுக்கீடு

அமித் ஷா

பட மூலாதாரம், AMITSHAH TWITTER

(இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்).

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றுக்கு கூடுதல் பேரிடர் நிதியுதவியாக 1,682.11 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு வியாழக் கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "2021-ஆம் ஆண்டில், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு போன்ற காரணங்களால் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. இதே போன்று வட மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசம் போன்ற மலைப் பிரதேச மாநிலங்களில் நிலச்சரிவால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் கூடுதல் மத்திய பேரிடர் நிதியுதவியாக 1,682 கோடி ரூபாயை தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதன்படி, தமிழ்நாட்டுக்கு 352.85 கோடியும் புதுச்சேரிக்கு 17.86 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோக, ஆந்திராவுக்கு 351.43 கோடி, கர்நாடகாவுக்கு 492.39 கோடி, மகாராஷ்டிராவுக்கு 355.39 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு 112.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழில் வெளியான செய்தி கூறுகிறது.

புதுவை, காரைக்காலில் புயல் எச்சரிக்கை

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, கன மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்று ம் தமிழ கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 3 நாட்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீன் பிடி படகுகள் உடனடியாக கரை திரும்ப வேண்டுமென்று புதுவை மீன் வளத் துறை இயக்குநர் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

அதோடு, வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இதனால், புதுவை துறைமுகம், காரைக்கால் துறைமுகத்தில் நேற்று 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

புயல் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்பு படம்

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் புதிய மீன்பிடித் துறைமுகங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரக்குப்பம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் கட்டுவதற்கான முதல் கட்டப் பணிகளை மீன் வளத் துறை தொடங்கியுள்ளதாக, தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அது குறித்து வெளியான செய்தி, "இந்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், படகுகளை நங்கூரம் இடுவதற்குப் பாதுகாப்பான துறைமுகங்கள் இல்லை. பல்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 500 படகுகள் மொத்தமாக உள்ளன. மேலும் தற்போது அதில் பல படகுகள் காசிமேடு அல்லது புதுச்சேரியில் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளன.

கழிமுகப் பகுதியை நிரந்தரமாகத் திறந்து வைக்கவும் வண்டல் மண் படிவதைத் தடுப்பதற்கும் 300 மீட்டர் நீளமுள்ள சுவர் கடலுக்குள் கட்டப்படும். ஏலக் கூடங்கள், வலை பழுது பார்க்கும் கொட்டகைகள், இறங்கு தளங்கள், மீன் உலர்த்தும் பகுதி, கழிப்பறைகள், அலுவலக இடம் மற்றும் படகு பழுது பார்க்கும் பகுதிகள் ஆகியவை இரண்டு கிராமங்களிலும் அமைக்கப்படும். இவை 235 கோடி மதிப்பீட்டில் 30 மாதங்களில் கட்டப்படும்," என்று கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: