யுக்ரேன் - ரஷ்யா போர்: இந்தியப் பொருளாதாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

புதின் - நரேந்திர மோதி

பட மூலாதாரம், NARENDRA MODI

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

யுக்ரேன் - ரஷ்ய போரினால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயருமா, தங்கத்தின் விலை என்ன ஆகும், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேசியதிலிருந்து:

யுக்ரேன் - ரஷ்ய போர் காரணமாக, இந்தியாவில் என்ன மாதிரியான பொருளாதாரத் தாக்கம் ஏற்படும்?

இந்த மோதல் ஆரம்பித்தவுடனேயே அமெரிக்காவும் மேலை நாடுகளும் நிறையத் தடைகளை விதிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால்தான் கச்சா எண்ணெய் விலை 105 டாலர் வரை உயர்ந்தது. ஆனால், அமெரிக்கா இதுவரை பெரிதாக எந்தத் தடையும் விதிக்கவில்லை. ரஷ்யாவுக்குக் கிடைக்கும் பெரிய அளவிலான வருவாய், கச்சா எண்ணெய் மூலம்தான் கிடைக்கிறது. இருந்தபோதும், அதன் மீது பெரிய அளவில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்கப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டிருக்கிறது. அதன் பொருள், யுக்ரேனை அமெரிக்கா கைவிட்டுவிட்டது என்பதுதான். பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளைப் பொறுத்தவரை, யுக்ரேன் மீது அனுதாபம் இருந்தாலும் தங்கள் நலன்தான் முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டன. இதனால்தான் பங்குச் சந்தைகள் ஏற்றம்கண்டு வருகின்றன. மேலும், 105 டாலர் விற்ற கச்சா எண்ணை, தற்போது 95 டாலராகிவிட்டது (இது பேட்டி எடுக்கும் நேரத்து நிலவரம்).

இதனால், இந்தியாவுக்குப் பிரச்னையா என்று கேட்டால், பிரச்னைதான். 95 டாலர் என்பது 75 டாலராகக் குறையாது. போர் தீவிரமடைந்தால் மீண்டும் 105 டாலராக உயரும் வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை நிச்சயம் உயரும்.

ஆனந்த் ஸ்ரீநிவாசன்

பட மூலாதாரம், ANAND SRINIVASAN FACEBOOK

படக்குறிப்பு, ஆனந்த் ஸ்ரீநிவாசன்

இதுதவிர, இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணையான சூரியகாந்தி எண்ணெயில் 25 சதவீதம் ரஷ்யாவிலிருந்தும் யுக்ரேனிலிருந்தும்தான் வருகிறது. ஆகவே, உணவு எண்ணெய்களின் விலை கடுமையாக உயரலாம். இதனால், பாமாயிலுக்கு தேவை அதிகரித்து அதன் விலையும் சிறிது உயரலாம்.

எரிபொருள் விலை அதிகரித்தால், எல்லாப் பொருட்களின் விலையும் உயரும்.

இந்தத் தருணத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை யுக்ரேன் போர் மட்டுமே பிரச்னையில்லை. பங்குச் சந்தை திங்கட்கிழமையன்று உயரும் என்றுதான் நினைக்கிறேன்.

பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இப்போது இதுமட்டுமே பிரச்னை இல்லை. வேறு பல பிரச்னைகளும் உள்ளன. அமெரிக்காவில் விலைவாசி உயரும் என்பதால் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். இந்தியாவிலும் பணவீக்கம் அதிகரிக்கும். இதனை தடுக்க வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். அந்தத் தருணத்தில் இந்தியாவிலிருந்து பணம் வெளியேறலாம். கடந்த 5 மாதத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 2 பில்லியன் டாலர் பணம் வெளியேறியிருக்கிறது.

அப்படியானால், பங்குச் சந்தை ஏன் விழவில்லையெனக் கேட்கலாம். இதற்கு இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இன்டெக்ஸ் பங்குகள் எனப்படும் குறியீட்டில் பிரதிபலிக்கும் பங்குகள் மட்டும்தான் விழவில்லை. பிஎஸ்இ 500 பங்குகளில் 335 பங்குகளின் விலை 25 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. மீதமுள்ள பங்குகளில் பலவற்றை எல்ஐசி வாங்கிக்கொண்டேயிருக்கிறது.

அப்படியானால், இந்தத் தருணத்தில் எம்மாதிரி பங்குகளை வாங்க வேண்டும்?

இப்போதைக்கு வேடிக்கைதான் பார்க்க வேண்டும். கடந்த ஓராண்டாக தங்கம் வாங்கும்படி தொடர்ந்து வலியுறுத்திவந்தேன். அப்போது தங்கம் வாங்கியிருந்தால் இப்போது நல்ல லாபம் கிடைத்திருக்கும். ஆனால், இப்போது தங்கம் வாங்கக்கூடாது. ஆறு மாதம் கழித்து தங்கம் விலை நிச்சயம் இறங்கும். அப்போது தங்கத்தை நிச்சயம் வாங்கலாம். ஆனால், கடந்த மூன்று மாதங்களில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சந்தையைக் கவனிக்க வேண்டிய நேரம் இது.

போர் நேரத்தில் பல முதலீடுகள் பாதுகாப்பற்றவையாகக் காட்சியளிக்கின்றன. ஆகவே, தங்கம் போன்ற முதலீடு இந்தத் தருணத்தில் சிறப்பானதாக இருக்காதா?

இதெல்லாம் குறுகிய காலகட்டத்திற்குள் நடந்து கொண்டிருக்கின்றன. இதெல்லாம் ஒரு வாரம் - பத்து நாட்களில் மாறிவிடும். உண்மையான சிக்கல் என்பது அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தும்போதுதான் ஏற்படும். அப்போது டாலரின் விலை உயரும். டாலரின் விலை உயர்ந்தால், தங்கத்தின் விலை குறையும். ஆகவேதான் இது சரியான தருணமல்ல என்கிறேன்.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்தியாவில் பெட்ரோலின் விலை நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் இருக்கிறது. இந்த யுக்ரேன் போர் இந்த நிலையை மாற்றுமா?

நிச்சயமாக. பீப்பாய் 75 டாலர் இருக்கும்போது இந்த விலை நிர்ணயிக்கப்பட்டது. அப்போது விலையைக் குறைத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. கடந்த இரு வாரங்களாக விலை 90க்கு மேல் இருக்கிறது. அப்படியென்றால் விலையை உயர்த்த வேண்டும். இந்த அரசு தேர்தலுக்கு பயந்து வேலை செய்துகொண்டிருக்கிறது. இடைத் தேர்தலில் தோற்றவுடன் 20 ரூபாய் வரியில் பத்து ரூபாயைக் குறைத்தார்கள். ஆகவே, தேர்தல் முடிவைப் பொறுத்துதான் எல்லாம். இப்போதைய சூழலில் 20 - 25 ரூபாய் உயர்த்த வேண்டும். ஆனால், வரியைக் குறைத்தால் 10 ரூபாய் உயர்த்தினால் போதும்.

இந்தப் போர் காரணமாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா?

அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணையை ரஷ்யாவிடம் வாங்க நேற்று இந்தியா ஆர்டர் செய்தது. அந்த எண்ணெய் கருங்கடல், பால்டிக் கடல் வழியாக வர வேண்டும். வருவதற்கு சற்று காலதாமதம் ஆகலாம்.

எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ரஷ்யா கச்சா எண்ணெய்யை விற்கக்கூடாது என அமெரிக்கா தடை விதிக்கவில்லை. இல்லாவிட்டால், ஈரானுடன் செய்ததுபோல, ரூபாயைக் கொடுத்து ரஷ்யாவிடம் வாங்கலாம். ஆனால், ரூபாயைக் கொடுத்து வாங்கவும் தடை விதிக்கப்பட்டால் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை.

இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில் இந்தியா எம்மாதிரி முடிவெடுக்க வேண்டும்?

ஒரு வீட்டை மற்றொருவர் ஆக்கிரமித்தால் தவறு. அதைச் சொல்ல இந்தியாவுக்கு இப்போது தைரியமில்லை என்பது என் கருத்து. அமெரிக்காவும் வேடிக்கை பார்க்கிறது. புதினை 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தியிருக்க வேண்டும். அவர் செசன்யாவையும் ஜார்ஜியாவையும் தாக்கியபோதே நிறுத்தியிருக்க வேண்டும். இன்று யுக்ரேனை நோக்கி நகர்ந்துவிட்டார். அவர் ரஷ்யா இழந்ததாகக் கருதும் பொற்காலத்தை மீண்டும் கொண்டுவர நினைக்கிறார்.

1956ல் இந்தியாவில் பிரதமராக நேரு இருந்தார். அவர் சோவியத் யூனியனுடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதும் அந்நாட்டைப் பார்த்துத்தான் ஐந்தாண்டுத் திட்டங்களையே கொண்டுவந்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஹங்கேரியப் புரட்சியை அடக்க ஸ்டாலின் படைகளை அனுப்பும்போது நேரு அதனை எதிர்த்தார். 'நீ என் நண்பனாக இருந்தாலும் நீ செய்தது தவறு' என்று சொன்னார்.

நேட்டோ ஏன் அமைதிகாக்கிறது?

எல்லோரும் பாதுகாப்பாக இருக்க நினைக்கிறார்கள். இந்தியாவும் அப்படித்தானே செய்கிறது. யாரும் அடித்துக்கொள்ளுங்கள், எங்களை விட்டுவிடுங்கள் என்றுதான் எல்லோரும் கருதுகிறார்கள். சீனாவும் இதைப் பார்த்து தைவானை ஆக்கிரமித்தால் என்ன செய்வது? அருணாச்சல் பிரதேசத்தை ஆக்கிரமித்தால் என்ன செய்வது? தங்களோடு ஒப்பந்தத்தில் உள்ள யுக்ரைனையே மேலை நாடுகள் காப்பாற்றவில்லை. இந்தியாவை காப்பாற்றுவார்களா?

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா நிலைப்பாடு எடுத்துவிட்டது. இந்தியாவுக்கு பிரச்னை என்றால் ரஷ்யா வருமா? இதையெல்லாம் யோசிக்க வேண்டும்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: