நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மதுரை நகரின் நீங்காத பிரச்னைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தீர்வைத் தருமா?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை தற்போது போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் போக்குவரத்து நெரிசலிலும் தூசியிலும் சிக்கித் தவிக்கிறது. நடக்கவிருக்கும் மாநகராட்சித் தேர்தல் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தருமா என எதிர் பார்க்கிறார்கள் மதுரை நகர மக்கள்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்ட இரண்டாவது மாநகராட்சி, மதுரை மாநகராட்சி. இருந்தபோதும் இதற்குப் பின்னால், உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர், திருச்சி போன்ற மாநகராட்சிப் பகுதிகள் வெகுவாக மேம்பட்டுவிட்ட நிலையில், தீராத பிரச்னைகளில் சிக்கித்தவிக்கிறது மதுரை நகரம்.
1801ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மதுரையில், 1865ஆம் ஆண்டின் நகர மேம்பாட்டு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, 1866ல் மதுரை நகர நிர்வாகத்தைக் கவனிக்க நகராட்சி உருவாக்கப்பட்டது.
நகரம் தொடர்ந்து விரிவடைந்த நிலையில், 1971ல் மதுரை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்தத் தருணத்தில் 48 வார்டுகள் மதுரையில் இருந்தன. 1974ல் மேலும் 13 பஞ்சாயத்துகள் மதுரையுடன் இணைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்த்தப்பட்டது. 1991ல் வார்டு சீரமைப்புக் கமிட்டியின் பரிந்துரையின்படி, வார்டுகளின் எண்ணிக்கை 72ஆக உயர்த்தப்பட்டது.
2011ல் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 கிராமப் பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 100ஆக உயர்த்தப்பட்டது. ஆகவே 55 சதுர கி.மீ. இருந்த மாநகராட்சியின் பரப்பளவு, இப்போது 142 ச.கி.மீயாக உயர்ந்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.கவைச் சேர்ந்த எஸ். முத்து தேர்வுசெய்யப்பட்டார். மொத்தமாக இதுவரை ஏழு பேர் மதுரை மாநகராட்சியின் மேயர்களாக இருந்துள்ளனர். கடைசியாக 2011 - 16 காலகட்டத்தில் மதுரையின் மேயராக அ.தி.மு.கவின் ராஜன் செல்லப்பா பதவி வகித்தார். 2016 - 21 காலகட்டத்தில் தேர்தல்கள் நடக்காத நிலையில், இப்போது மீண்டும் மாநகராட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலேயே மாநகராட்சித் தேர்தல்களுக்காக வெகுவாகக் காத்திருக்கும் ஒரு நகரமாக மதுரையைச் சொல்லலாம். அந்த அளவுக்கு உள்கட்டமைப்புப் பிரச்சனைகளோடு தள்ளாடிக்கொண்டிருக்கிறது மதுரை.
நகரின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. வேறு பல இடங்கள் ஸ்மார்ட் சிடி திட்டப் பணிகளுக்காக தோண்டிப்போடப்பட்டு கிடக்கின்றன. இதுபோக மதுரையின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் தூசி ஒரு படலமாக ஆட்கள் மீது படிகிறது.

நகரின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. வேறு பல இடங்கள் ஸ்மார்ட் சிடி திட்டப் பணிகளுக்காக தோண்டிப்போடப்பட்டு கிடக்கிறது. இதுபோக மதுரையின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் தூசி ஒரு படலமாக ஆட்கள் மீது படிகிறது.
நகரம் முழுக்கவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தாலும், நான்கு மாசி வீதிகளும் மூச்சு விடக்கூட முடியாத நிலையில் காட்சியளிக்கின்றன. வடக்கு மாசி வீதிப் பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல, மனிதர்கள் நடந்து போவதே சிரமம் என்ற அளவுக்கு அந்தப் பகுதியில் லாரிகள் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட சரக்குகள் இறக்கப்படுகின்றன. இந்தப் பகுதி முழுக்கவே பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள்தான் இயங்குகின்றன.
அதேபோல மேலமாசி வீதி பகுதியில் ஹார்ட்வேர் நிறுவனங்களும் கீழமாசி வீதி பகுதியில் பலசரக்குக் கடைகளும் தெற்கு மாசி வீதிகளில் பெரிய துணிக்கடைகளும் என ஒரு நெரிசல் மிகுந்த வணிக வளாகமாகக் காட்சியளிக்கிறது மதுரை.
நகரின் சாலைகள் குறித்த புகார் எல்லோரிடமுமே இருக்கிறது. "மதுரையின் மையப் பகுதியில் ஒரு ரோடுகூட உருப்படியாக இல்லை. எல்லாம் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. ஆத்துக்கு ரெண்டு பக்கமும் ரோடு போடுறோம்னு போடுறாங்க. அந்த இடத்தில் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாய் உடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேரிடம் சொல்லியாகிவிட்டது. யாரும் கேட்பதாக இல்லை. கரிமேட்டு பகுதியில் கொரோனா காலகட்டத்தில் அங்கிருந்த மீன் மார்க்கெட்டைப் பூட்டி வைத்தார். இப்போதுவரை திறக்கவில்லை. இதனால், அதனைச் சுற்றி மீன் வியாபாரம் நடந்து வருகிறது. எதற்காக மார்க்கெட்டைப் பூட்டிவைத்துவிட்டு, வெளியில் வியாபாரத்தை அனுமதிக்க வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்?" எனக் கேள்வியெழுப்புகிறார் மதுரையில் ஓட்டுநராகப் பணியாற்றிவரும் ராஜாராம்.

பெண்களைப் பொருத்தவரை, குடிநீருடன் பல தருணங்களில் சாக்கடை நீர் கலந்து வருவது பிரச்சனையாக இருக்கிறது. "மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு நாள்விட்டு ஒரு நாள் குடிநீர் வருகிறது. அதுவும் இரண்டு மணி நேரம்தான் வரும். அதில் ஒரு மணி நேரம் சாக்கடைத் தண்ணீராக வந்தால் என்ன செய்வது? யாரிடம் சொன்னாலும் பிரயோஜனமே இல்லை" என்கிறார் மேலமாசி வீதி பகுதியைச் சேர்ந்த உமா சங்கரி.
மத்திய அரசால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்ட போது, இந்தியாவிலேயே அதிக ஸ்மார்ட் சிட்டி திட்ட நகரங்கள், அதாவது 12 நகரங்கள் தமிழ்நாட்டில்தான் இடம்பெற்றிருந்தன. அதில் மதுரையும் ஒரு நகரமாக இடம்பெற்றிருந்தது. இந்தத் திட்டத்தால், நகரின் முகமே சிறப்பாக மாறிவிடுமென நகர மக்கள் காத்திருந்தபோது, திட்டம் செயலாக்கப்பட்டவிதம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சாலைகளுக்கு மேல் சாலைகள் போடப்பட்டதால் ஏற்கனவே நகரம் பள்ளத்திற்குள் மூழ்கிவந்த நிலையில், இந்தத் திட்டத்திற்காக நகரம் முழுக்க அரையடி உயரத்திற்கு கான்க்ரீட் சாலைகளை போடத் துவங்கினர். இதனால், பிரதான சாலைகளை ஒட்டியுள்ள பல சந்துகள் பள்ளத்திற்குள் சென்றன. சாலைகளில் இருந்து பிரியும் சாலைகள், சந்துகளுக்குள் செல்லாமுடியாத வகையில் மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
"இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமலாக்கப்பட்ட பிறகு, நகரத்தின் சாலை வசதி உள்பட அனைத்துமே மோசமாகியிருக்கிறது. எனக்கு நாற்பது வயதாகிறது. நான் முப்பது வயதில் பார்த்த மதுரையைவிட இப்போது பார்க்கும் மதுரை குண்டும் குழியுமாக, தூசிப் படலமாகக் காட்சியளிக்கிறது" எனக் குற்றம்சாட்டுகிறார் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும் மதுரைவாசியுமான ஹாசிம் ஹக்கீம்.
மதுரையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் பேருந்து நிலையமும் ஸ்மார்ட் சிடி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பெரியார் பேருந்து நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்களாக இயங்கிவந்த நிலையில், ஸ்மார்ட் சிடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் முழுக்கவும் வணிக வளாகமாக மாற்றப்படுவதைப் போல மிகப் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் பேருந்து நிலையப் பகுதி மட்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால், முன்பிருந்ததில் 60 சதவீத பகுதி கொள்ளளவில் மட்டுமே பேருந்துகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்கவில்லை என்கிறார் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன்.

"மதுரை நகரின் கட்டமைப்பிற்கு மிகப் பெரிய பிரச்சனையை இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. நகரின் மிகப் பெரிய பிரச்சனையாக போக்குவரத்து நெரிசலைத்தான் மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அதற்கு இந்தத் திட்டத்தில் எந்தத் தீர்வும் இல்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரிப்படுத்த மூன்று கூட்டங்களை நடத்தினோம். ஆனால், எந்த பலனும் ஏற்படவில்லை. 80 சதவீத நிதியை செலவழித்துவிட்டார்கள். இந்தத் திட்டத்திற்கென சிறப்பு அதிகாரியை நியமித்திருக்க வேண்டும். அப்படி யாருமே இதுவரை நியமிக்கப்படவில்லை. மதுரைக்கு மட்டுமல்ல, எட்டு மாநகராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று, திட்டத்தை வடிவமைக்கும் வேலை இந்த அதிகாரியின் பொறுப்பு. அந்த அதிகாரி இல்லாத நிலையில், ஏற்கெனவே பணியில் உள்ள மாநகராட்சி அதிகாரிகளே அவர்களாக திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள். திட்டத்தில் தவறு நடந்தால் பரவாயில்லை. தவறு செய்வதற்காகவே போடபட்ட திட்டமாக இந்த ஸ்மார்ட் சிடி திட்டம் இருக்கிறது" என்கிறார் சு. வெங்கடேசன்.
மதுரை நகரின் தேவைகள் எவ்வளவோ இருக்க, நகரின் பிரதான பகுதியிலிருந்து நத்தத்தை நோக்கிக் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான பாலம் மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
"மக்கள் கோரிக்கையே எழுப்பாமல் ஒரு மிகப் பெரியத் திட்டத்தை செயல்படுத்திவருகிறார்கள். தெருவிளக்குகள், பாதாளச் சாக்கடை, சாலைகளைச் சரி செய்வது என எவ்வளவோ தேவைகள் இருக்க மதுரையையும் நத்தத்தையும் இணைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான பாலத்தை மதுரைக்குள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மதுரையிலிருந்து நத்தம் செல்லும் பகுதி என்பது ஒரு முட்டுச் சந்து போன்றது. இதற்கு ரோடு போடச் சொல்லி, யார் கேட்டது? நத்தத்திலிருந்து கொட்டாம்பட்டிக்கும் திண்டுக்கல்லுக்கும்தான் செல்ல முடியும். அந்தப் பகுதிகளுக்கு ஏற்கனவே நான்கு வழிச் சாலைகள் இருக்கின்றன. அப்படியானால், இந்தப் புதிய சாலையை எதற்காகப் போடுகிறார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார் ஹாசிம் ஹக்கீம்.

மதுரை நகரைப் பொறுத்தவரை, சாலைகளைத் தவிர வேறு வேறு சில முக்கியமான பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறார் மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் தலைவரான என். ஜெகதீசன்.
"மதுரையில் உள்ள அனைத்து மாயானங்களிலும் எரிவாயு மின் தகன மேடைகளை அமைக்க வேண்டும். இப்போது தத்தநேரியில் இரண்டு, கீரைத்துறையில் ஒன்று என மொத்தமே மூன்று எரிவாயு தகன மேடைகள்தான் இருக்கின்றன. ஆனால், சென்னையில் 38 எரிவாயு தகன மேடைகள் இருக்கின்றன. மதுரைக்குப் பிறகு மாநகராட்சியான கோவையில் 16 இடத்தில் எரிவாயு தகன மேடைகள் இருக்கின்றன.
சென்னையில் சிஎம்டிஏவைப் போல மதுரையில் உள்ளூர் திட்டக் குழுமம் இயங்கிவருகிறது. 25,000 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு இந்த அமைப்புதான் ஒப்புதல் தருகிறது. ஒரு நிலம் எந்த வகையில் நிலப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து, இந்த அமைப்பு அனுமதியைத் தரும். ஆனால், 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு, புதிதாக நிலப் பயன்பாட்டுவகை செய்யப்படவில்லை. டவுன் அண்ட் கன்ட்ரி பிளானிங் விதிகளின்படி, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை நிலப்பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 27 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், நகரம் மிகப் பெரிய அளவில் விரிவடைந்துவிட்டது. ஆனால், இப்போதும் பழைய நிலப் பயன்பாட்டுத் திட்டத்தையே வைத்திருக்கிறார்கள். இதனால், நிலப் பயன்பாட்டை மாற்ற ஒவ்வொரு முறையும் அரசாணை தேவைப்படுகிறது. இதனை கட்டடம் கட்டும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே உடனடியாக புதிய நிலப் பயன்பாட்டு விதிகளை உருவாக்க வேண்டும்" என்கிறார் அவர்.

நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கியமான தீர்வையும் சொல்கிறார் ஜெகதீசன். "மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பொதுப் பேருந்துகள், பொது வாகனங்களைத் தவிர பெரிய வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்கள் மதுரை நகருக்குள் வரக்கூடாது என தடை விதிக்க வேண்டும். மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மதுரைக்குள் மழை பெய்யும்போது ஒவ்வொரு முறையும் சாலைகள் மோசமாகிவிடுகின்றன. அவற்றைப் பராமரிக்க மாநகராட்சி போதிய நிதி இல்லை என்கிறது. ஆகவே சிறப்பு நிதி ஒதுக்கி இவற்றைச் செய்ய வேண்டும்." என்கிறார் ஜெகதீசன்.
இது தவிர, மதுரை நகரத்தின் ஒலி மாசு மிக மோசமான நிலையில் இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள நகரங்களிலேயே மிகக் குறைவான பசுமைப் போர்வை கொண்ட நகரமாக மதுரை இருக்கிறது. ஏற்கனவே பல சாலைகளில் இருந்த மரங்கள் ஸ்மார்ட் சிடி திட்டத்திற்காக வெட்டப்பட்டன. புதிதாக மரங்கள் ஏதும் நடப்படவில்லை. "ஒரு நகரத்தில் குறைந்தது 35 சதவீதம் பசுமைப் போர்வை இருக்க வேண்டும். மதுரையில் இது 22 சதவீதம்தான் இருக்கிறது." என்கிறார் ஹக்கீம்.
மதுரை நகரத்திற்கு அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுதான் புதிய மாநகராட்சிப் பகுதி உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தப் பகுதிகளில் எவ்விதப் பணிகளும் நடக்கவில்லை. அவரை பேரூராட்சிப் பகுதிகளோகவோ, பஞ்சாயத்துகளாகவோ இருந்திருந்தால், அந்தந்த பேரூராட்சி, பஞ்சாயத்துகளின் நிதியின் மூலமாகவாவது ஏதாவது நடந்திருக்கும். இப்போது மாநகராட்சியிலும் போதுமான நிதி இல்லை என்கிறார்கள். இந்தச் சூழலில் புதிதாக சேர்க்கப்பட்ட 28 வார்டுகளும் கைவிடப்பட்ட பகுதிகளைப் போலத்தான் இருக்கின்றன.
மதுரை மாநகராட்சியைப் பொருத்தவரை இந்த முறை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவைப் பொறுத்தவரை விஜய மௌசிமி, ரோகினி பொம்மதேவன், வாசுகி, இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்டோர் மேயர் பதவியை குறிவைத்து போட்டியிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.கவில் முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர் சுகந்தி அசோக், ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளராகக் கருதப்படும் சண்முகப்ரியா ஹோசிமின் ஆகியோர் மேயர் பதவியை குறைவைத்துள்ளனர்.
பா.ஜ.க., நா.த.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சில கவுன்சிலர் இடங்களை முன்வைத்து காய்களை நகர்த்துகின்றன.
எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் சிறிய அளவிலாவது நகரின் பிரச்சனைகள் தீர்ந்தால் போதுமென காத்திருக்கிறார்கள் மதுரை நகர மக்கள்.

பிற செய்திகள்:
- இளையராஜா- கங்கை அமரன் சந்திப்பு: "எங்களுக்குள் இருந்த நட்பு போய்விட்டதே என்று வருந்தினேன்"
- எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்ததாக கருதப்படும் உலகின் முதல் பெண்
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- ''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













