பிரமோஸ் ஏவுகணை விற்பனைக்கு பிலிப்பைன்ஸுடன் ஒப்பந்தம் செய்த இந்தியா - பின்னணி என்ன?

Brahmos

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி நிருபர்

தென் அமெரிக்க நாடான எக்வடோர், இந்தியாவிடமிருந்து 2009இல் ஐந்து துருவ் ரக அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களையும், 2011இல் இரண்டு ஹெலிகாப்டர்களையும் வாங்கியது. இந்த ஒப்பந்தம் 452 மில்லியன் டாலர் மதிப்புடையது.

ஆனால் இந்த நான்கு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானபோது, எக்வடோர் ஒருதலைபட்சமாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை 2015இல் முறித்துக் கொள்ள முடிவு செய்தது. விபத்திற்குப் பிறகு மீதமுள்ள மூன்று துருவ் ஹெலிகாப்டர்களைத் திருப்பி அனுப்ப எக்வடோர் முடிவு செய்தது.

துருவ் ரக ஹெலிகாப்டரின் தரம் குறித்து எக்வடோர் புகார் கூறியது.

டிசம்பர் 8ஆம் தேதி இந்திய விமானப்படையின் Mi-17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உட்பட 14 பேர் கொல்லப்பட்டபோது, சீன பத்திரிகைகள் இந்தியாவின் பாதுகாப்புத் திறனைக் கேலி செய்து கேள்வி எழுப்பின.

உண்மையில் இந்த Mi-17V5 ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது.

இப்போது இந்தியா முதன்முறையாக பிரமோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை விற்க பிலிப்பைன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதியன்று பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு அமைச்சர் டெல்பின் லோரென்சானா ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் 374 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் வெற்றியடைந்தால், இந்தியாவில் ஏற்பட்ட முதல் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரண ஒப்பந்தமாக இது இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதி

இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்களின் பெரிய உற்பத்தி மையங்களும் அது தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்களும் உள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (DRDO) அவற்றுள் ஒன்று. ஆனால் உலகப் பாதுகாப்புச் சந்தையில் இந்தியா ஒரு விநியோக நாடாக இன்னும் உருவெடுக்கவில்லை.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை, அதன் ராணுவத்தின் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்யவில்லை. இந்தியாவின் ராணுவம், இன்னும் தற்காப்பு ஆயுதங்களுக்கான இறக்குமதியை நம்பியே உள்ளது.

பல தசாப்தங்களாக, ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 1960 களில் இந்தியா, ஆசியாவின் முதல் உள்நாட்டு போர் விமானத்தை உருவாக்கியதும், 1950 களில் இருந்தே, உள்நாட்டுப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா அர்ப்பணிப்பைக் காட்டி வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிகப்பெரியது, ஆனால் பெரும்பாலான உபகரணங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அரசு மீண்டும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஐந்து பில்லியன் டாலர் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிக்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் தனியார் துறை கூட்டாண்மைகளையும் இந்தியா ஊக்குவித்து வருகிறது.

Brahmos 4

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி அதிகரிப்பு குறித்து தெரிவித்திருந்தார்.

அஜய் பட், "இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2016-17ல் ரூ.1,521 கோடியிலிருந்து 2020-21ல் ரூ.8,434.84 ஆக அதிகரித்துள்ளது. 2018-19ல் இந்த ஏற்றுமதி ரூ.10,745 கோடியாக இருந்தது. 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு ஐந்து பில்லியன் டாலர்களாக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது." என்று தெரிவித்தார்.

ஏற்றுமதி செய்யப்பட்ட உபகரணங்களின் விவரங்களை வெளியிடுவது பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தவிர்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் 21 அன்று உத்தரகாண்டில் உள்ள தார்ச்சுலா மற்றும் பித்தோராகரில் பாஜகவின் சங்கல்ப் யாத்திரையில் உரையாற்றிய அஜய் பட், "நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், இந்தியா தற்காப்புக் கருவிகள் தயாரிப்பில் தன்னிறைவு அடைய முயற்சிப்பது மட்டுமல்லாமல், 72 நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்தும் வருகிறோம். நாம் தற்போது 209 பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரித்து வருகிறோம், அவை முன்பு பிற நாடுகளில் இருந்து வாங்கப்பட்டன." என்று கூறினார்.

அஜய் பட் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடாலில் இருந்து பாஜக சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Brahmos 1

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மூன்று நிறுவனங்கள்

ஸ்வீடிஷ் சிந்தனைக் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் முதல் 100 பாதுகாப்பு நிறுவனங்களின் பட்டியலில் மூன்று இந்திய நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி போர்டு மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆகும்.

டிசம்பர் மாதத்தில், இந்த அறிக்கையை வெளியிட்ட SIPRI இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த ஆயுத விற்பனை 6.5 பில்லியன் டாலர் என்றும் தெரிவித்தது. 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் 1.7% விற்பனை அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 100 நிறுவனங்களின் பாதுகாப்பு உபகரணங்கள் விற்பனையில் இந்த மூன்று நிறுவனங்களின் பங்கு 1.2 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SIPRI அறிக்கை, இந்தியாவின் ஆயுத இறக்குமதி 2011-2015 காலகட்டத்தைக் காட்டிலும் 2016-2020 காலகட்டத்தில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது. இருப்பினும், இதையும் மீறி, ஆயுத இறக்குமதியில் இந்தியா இன்னும் முதலிடத்தில் உள்ளது. இது தவிர, உலகின் 25 ஆயுத ஏற்றுமதி நாடுகளிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது.

Brahmos 2

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு தசராவின் போது 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசிய பிரதமர் மோடி, "சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாகப் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கொள்கை மாற்றத்தின் தாக்கமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதி 325 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது." என்று கூறினார்.

ரஷ்யாவின் உதவியுடன் பிரம்மோஸை இந்தியா தயாரித்துள்ளது. இது ரஷ்ய P800 Onyx/Yakhont க்ரூஸ் ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டது. பிரமோஸின் வரம்பு தற்போது 500 கி.மீ., ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் பிரம்மோஸின் வரம்பு 290 கி.மீ ஆகும், ஏனெனில் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தின் (எம்.டி.சி.ஆர்) விதிப்படி இந்த வரம்பு 300 கி.மீக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

பிரமோஸ் முதன்முதலில் 2004 இல் சோதிக்கப்பட்டு 2007 இல் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு இந்த ஏவுகணையின் வெவ்வேறு பதிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரமோஸின் கடற்படைப் பதிப்பை பிலிப்பைன்ஸ் வாங்குகிறது. இந்தியாவுடனான பிரம்மோஸ் ஒப்பந்தம் குறித்து பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் லோரன்சானா எழுதியுள்ள கடிதத்தில், "பிலிப்பைன்ஸ் கடற்படைக்குக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை கையகப்படுத்தும் திட்டத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இதில் மூன்று பேட்டரிகள், பயிற்சி ஆபரேட்டர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் தேவையான தளவாட ஆதரவு ஆகியவை அடங்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி

பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸை வழங்குவதன் பின்னணியில் சீனா குறித்த இந்தியாவின் உத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, குறிப்பாக சீனாவுடன் கடல் அல்லது எல்லைத் தகராறு உள்ள நாடுகளுக்கு இந்தியா ஏவுகணைகளை வழங்கி வருகிறது.

இந்தப் பிராந்தியத்தில் பல நாடுகளின் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருகிறது. வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் பிரமோஸ் வாங்க ஆர்வமாக உள்ளன.

பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸை விற்பனை செய்வதால் என்ன பயன்?

இதற்கு இந்தியப் பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி பதிலளிக்கையில், "நிச்சயமாக இது ஒரு நல்ல நடவடிக்கை. ஆனால் பிரம்மோஸ் ஏவுகணை 50 சதவீதம் ரஷ்ய தொழில்நுட்பம் கொண்டது. இந்தியா அதை இங்கே ஒருங்கிணைக்கிறது. பிலிப்பைன்ஸுக்கு விற்கும் முன் அறிவுசார் சொத்துரிமை குறித்து ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும், இதில் ரஷ்யாவுக்கும் பங்கு இருக்கும், அதன் லாபத்திலும் பங்கு பெற்றிருக்கும். இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது, இது ஒரு நல்ல விஷயம், ஆனால் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் அது இப்போது பிறந்த ஒரு குழந்தை. அதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் உள்ளன," என்கிறார்.

இது குறித்து ராகுல் பேடி மேலும் கூறுகையில், "இந்தியாவின் துருவ் ஹெலிகாப்டரை வாங்கிய பிறகு எக்வடோர் நாடு திரும்பத் தர முடிவு செய்தது. இதுவும் இந்தியாவின் நற்பெயரைக் கெடுத்தது. நான்கு துருவ ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு ஈக்வடோர் இந்த முடிவை எடுத்தது. தற்போது நமது ஏவுகணைத் துறையில் பல குறைபாடுகள் உள்ளன. மோடி அரசாங்கத்தில் மேற்கோள் காட்டப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி வெளிநாட்டு உரிமத்துடன் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்.

சீனாவுடனே நம்மால் போட்டி போட முடியாத நிலையில், லாக்ஹீட் மார்ட்டினுடன் எவ்வளவு தூரம் போட்டியிட முடியும்? ரிவர்ஸ் இன்ஜினியரிங் மூலம் சீனா தனது பாதுகாப்புத் துறையை மிகவும் நவீனமாக்கியுள்ளது. ரிவர்ஸ் இன்ஜினியரிங் என்பது சீனாவுக்கு ஹெலிகாப்டர் அல்லது போர் விமானம் கிடைத்தால், அதன் நகலை அசலை விட நவீனமாக்குவது." என்றார்.

Brahmos 3

பட மூலாதாரம், Getty Images

ஏழு ஆண்டுகளுக்கு முன்பே வியட்நாமுக்கு பிரம்மோஸ் தருவதாக இந்தியா உறுதியளித்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ராகுல் பேடி கூறுகிறார். இந்தியா பிலிப்பைன்ஸுக்கு கொடுக்கும்போது, வியட்நாமுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சனை என்கிறார் பேடி.

இந்தோனீசியாவுக்கும் பிரமோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது குறித்தும் பேசப்படுகிறது. ஜூன் 2020 இல், இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கும் இந்தோனீசிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே இந்த ஒப்பந்தம் பற்றி பேசப்பட்டது. இது தவிர வியட்நாமுடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியப் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க வியட்நாமுக்கு இந்தியா கடன் வழங்கியது. இதனுடன், 12 அதிவேக காவல் படகுகளை வியட்நாம் நிறுவனத்துடன் இணைந்து கடனாக இந்தியா தயாரித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: