சென்னை புத்தகக் கண்காட்சி கொரோனா பரவல் காரணமாக கடைசி நேரத்தில் ரத்தானதால் நெருக்கடியில் பதிப்பாளர்கள், ஏமாற்றத்தில் வாசகர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான சென்னை புத்தகக் கண்காட்சி கொரோனா பரவல் காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை நாட்களை ஒட்டி மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி நடைபெறும். பதிப்பாளர்கள், வாசகர்கள், எழுத்தாளர் என எல்லாத் தரப்பினரிடமும் இந்தக் கண்காட்சிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவும்.
கடந்த ஆண்டு நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த 44வது புத்தகக் கண்காட்சியில் கிட்டத்தட்ட எட்டு - ஒன்பது லட்சம் வாசகர்கள் பங்கேற்றனர். சுமார் எட்டு முதல் பத்து கோடி ரூபாய்க்கு அதிகமான புத்தகங்கள் விற்பனையானதாக பபாசி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 900 அரங்குகளுடன் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 23ஆம் தேதிவரை 45வது புத்தகக் காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாத பிற்பகுதியில் இருந்து மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்தப் பின்னணியில் ஜனவரி மாதத் துவக்கத்தில் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், வெளியான இந்த அறிவிப்பு பதிப்பக உரிமையாளர்களுக்கு பேரிடியாக அமைந்தது. எழுத்தாளர்கள், வாசகர்கள் தரப்பு பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்தது.
"சென்னை புத்தகக் கண்காட்சி, இந்தியாவில் நடக்கக்கூடிய புத்தகக் கண்காட்சிகளில் மூன்றாவது பெரிய புத்தகக் கண்காட்சி. சில்லரை விற்பனையை பொறுத்தவரை இதுதான் இந்தியாவிலேயே அதிக விற்பனையுள்ள புத்தகக் கண்காட்சி. புத்தகப் பதிப்பாளர்களை பொறுத்தவரை ஆண்டின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 45- 50 சதவீத வருவாய் இந்த புத்தகக் கண்காட்சியில்தான் நடக்கும் புத்தக விற்பனையின் மூலம்தான் கிடைக்கிறது.
தமிழில் பதிப்பிக்கப்படும் புதிய புத்தகங்களில் 100ல் 95 புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டித்தான் வெளியாகின்றன. ஆகவே எல்லா பதிப்பாளர்களும் ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே, சென்னை புத்தகக் கண்காட்சியை மையமாகக் கொண்டுதான் பணிகளை துவங்குவார்கள்.
இந்தக் கண்காட்சியில் நடக்கும் விற்பனையின் மூலம் திரளும் பணத்தை வைத்துத்தான் ஆண்டு முழுவதும் வாங்கிய காகிதத்திற்கான கடன், அச்சகத்தில் வைத்திருந்த கடன், புத்தக உருவாக்கத்தில் பங்காற்றியவர்களுக்கான ஊதியம் ஆகியவை கொடுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதால், கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல ஆகிவிட்டது" பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளரான க. நாகராஜன்.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், விற்பனையாளர்களும் சேர்ந்து சுமார் 800 கடைகளில் தங்கள் விற்பனைகளைச் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத இறுதியிலிருந்தே இந்தக் கண்காட்சிக்கு பதிப்பாளர்கள் தயாராக ஆரம்பித்துவிடுவார்கள். டிசம்பர் மாத இறுதியில் இதற்கான பணிகள் சூடுபிடிக்கும். அச்சகங்கள் அனைத்தும் மூழுவீச்சில் இயங்க ஆரம்பிக்கும். புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருக்கும்போதும், அச்சகங்களில் இருந்து புத்தகங்கள் வந்து இறங்கிக்கொண்டேயிருக்கும்.
இந்த ஆண்டும் இதேபோல, பெரிய அளவிலான திட்டமிடுதல்களை பதிப்பாளர்கள் செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் கண்காட்சி ரத்தாகிவிட எல்லோரும் பெரும் நெருக்கடியைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
"ஒவ்வொரு பதிப்பாளருக்கும் ஒவ்வொரு விதத்தில் நெருக்கடி. பெரிய பதிப்பாளர்களைப் பொறுத்தவரை நிறைய புத்தகங்களைக் கொண்டுவர முடிவுசெய்து, பெரிய அளவில் பணத்தை முதலீடுசெய்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அச்சகத்திலிருந்து அச்சாகிவந்த புத்தகங்களை சேமித்து வைக்கும் இட வசதியாவது அவர்களிடம் உண்டு. ஆனால், சிறிய பதிப்பாளர்களைப் பொறுத்தவரை, அந்த இடவசதி இருக்காது. அச்சாகிவந்த புத்தகங்களை எங்கு வைப்பது என்பதில் தடுமாறிப்போய்விட்டார்கள்" என்கிறார் நாகராஜன்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக புத்தகக் கண்காட்சி முன்கூட்டியே தள்ளிவைக்கப்பட்டதால் பல பதிப்பாளர்கள் புதிய நூல்களைக் கொண்டுவருவதில் மிக ஜாக்கிரதையாக இருந்தனர். இந்த ஆண்டு பொங்கல் தருணத்தில் புத்தகக் கண்காட்சி நடப்பதால் பெரிய எதிர்ப்பு பல பதிப்பாளர்களுக்கு இருந்தது.
"வழக்கமாக பத்து புதிய நூல்களைத்தான் கொண்டுவருவேன். ஆனால், இந்த முறை விற்பனை சிறப்பாக இருக்குமெனக் கருதி 30 புதிய புத்தகங்களை அடித்திருக்கிறேன். இப்போது அடித்த புத்தகங்களை எங்கு வைப்பது, என்ன செய்வதென்று தெரியவில்லை" என்கிறார் பரிசல் பதிப்பகத்தின் சிவ செந்தில்நாதன்.
புத்தகக் கண்காட்சி தள்ளிவைக்கப்பட்டதால், பதிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, அச்சுத் துறை சார்ந்த பலருக்கும் நெருக்கடிதான் என்கிறார் செந்தில்நாதன். "புத்தக உருவாக்கத்தைப் பொறுத்தவரை, வெறும் முன்தொகை கொடுத்துத்தான் வேலைகளைத் துவங்குகிறோம். அடித்து முடித்து, கண்காட்சியில் விற்பனையான பிறகு எல்லோருக்கும் பணத்தை செட்டில் செய்கிறோம். இந்த ஆண்டு, புத்தகங்கள் அச்சாகிவிட்டன. ஆனால், யாருக்கும் பணத்தை செட்டில்செய்ய முடியவில்லை. காகித விற்பனையாளர்களைப் பொறுத்தவரை சற்று பொறுக்க முடியும். ஆனால், அச்சகங்களில் வாராவாரம் சம்பளம் கொடுத்தாக வேண்டும். அவர்கள் எங்களை நெருக்க ஆரம்பிப்பார்கள். புத்தகங்களுக்கு மெய்ப்புப் பார்த்தவர்கள் பணம் கேட்கிறார்கள். அதற்குப் பணமில்லை. ஆகவே பதிப்புத் துறையைச் சுற்றியுள்ள எல்லோருமே நெருக்கடியில்தான் இருக்கிறார்கள்" என்கிறார் செந்தில்நாதன்.

பட மூலாதாரம், Getty Images
இதைவிட முக்கியமானதொரு பிரச்சனையைச் சுட்டிக்காட்டுகிறார் நாகராஜன். "இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியூரில் இருந்தும் பதிப்பாளர்கள் பங்கேற்பார்கள். ஆகவே வெளியூரில் உள்ள பல பதிப்பாளர்கள் புத்தகங்களை பார்சல் சர்வீஸ் மூலம் சென்னைக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு சிறிய பார்சலை அனுப்ப குறைந்தது 150 ரூபாய் செலவாகிறது. வெளியூரில் இருக்கும் பெரிய பதிப்பாளர்கள் எல்லாம் கிட்டத்தட்ட 200-300 பெட்டிகளை அனுப்பியிருக்கிறார்கள். இப்போது இவற்றையெல்லாம் திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும். அல்லது எங்கேயாவது வைத்திருக்க வேண்டும். இது கடுமையான மன உளைச்சலையும் செலவையும் பதிப்பாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது." என்கிறார் நாகராஜன்.
சிவ செந்தில்நாதனைப் போன்ற பதிப்பாளர்கள், கடன் வாங்கித்தான் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் எடுப்பதற்கான பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். "கண்காட்சி முடிந்தவுடன் பணத்தைக் கொடுக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால், இப்போது தள்ளிப்போயிருக்கிறது. எல்லோருக்குமே எல்லோரும் பதில் சொல்ல வேண்டிய நிலை" என்கிறார் அவர்.

ஏற்கனவே கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவதில்லை. ஆன் லைன் சேல்ஸ் மட்டும்தான். அதில் எல்லா புத்தகமும் விற்காது. குறிப்பாக புதிய புத்தகங்களை விற்க முடியாது. எல்லோருக்கும் அட்வான்ஸ்தான் கொடுத்திருக்கிறோம்.
பதிப்பாளர்கள் மட்டுமல்ல பபாசிக்கும் இது பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. "பபாசியைப் பொறுத்தவரை, பெரிய அளவில் செலவுகளைச் செய்திருக்கிறார்கள். பல பருவ இதழ்களில் விளம்பரங்கள் வெளியாகிவிட்டன. போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. சிறிய விளம்பரத் தட்டிகள், பெரிய விளம்பரப் பலகைகள் ஆகியவையும் வைத்தாகிவிட்டது. புத்தகக் கண்காட்சிக்கான ஷெட் போடும் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஷெட்டை அப்படியே வைத்திருந்தால், ஷெட் போடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், மைதானத்திற்கு வாடகை ஆகியவற்றைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும். இது பெரிய சிக்கல்" என்கிறார் நாகராஜன்.
புத்தகக் கண்காட்சி தள்ளிப்போனதில் எழுத்தாளர்கள் வாசகர்களுக்கும் பெரும் ஏமாற்றம்தான். சென்னை புத்தகக் கண்காட்சிதான் எழுத்தாளர்கள் வாசகர்களை நேரடியாக சந்திக்கும் ஒரு திருவிழாவாக இருந்தது. "இலக்கியம் எனக்கு அறிமுகமானதிலிருந்தே நான் புத்தகக் கண்காட்சிக்காக சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இலக்கியக் கூட்டங்களைப் போலத்தான் இந்தப் புத்தகச் சந்தையும். இந்தப் புத்தகச் சந்தையில்தான் எழுத்தாளருக்கும் வாசகருக்கும் பரஸ்பர புரிதலும் தெளிவும் ஏற்படும். கடைசி நேரத்தில் தள்ளிப்போவது ஏமாற்றத்தைத்தான் தருகிறது" என்கிறார் எழுத்தாளர் கே.என். செந்தில்.
சென்னை வாசகர்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமிருந்தே ஏன் உலகின் பல பாகங்களிலிருந்து இந்தக் கண்காட்சியை எதிர்நோக்கி இங்கே வருவார்கள். பலர் இதற்காக விமானங்களிலும் ரயிலிலும் டிக்கெட்களை புக் செய்திருந்தார்கள். அந்த வகையில் அவர்களுக்கும் இழப்புதான்.
இப்போது அரசு என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
"கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. அரசு நினைத்தால் சிறப்பு அனுமதி அளித்து நடத்த முடியும். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்திருக்கின்றன. வாசகர்கள் கொரோனா விதிகளை சரியாக பின்பற்றுவார்கள். கடந்த ஆண்டும் கொரோனாவுக்கு நடுவில்தான் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதேபோலவே இந்த ஆண்டும் பிப்ரவரியிலாவது கண்காட்சியை நடத்த வேண்டும். அப்படி பிப்ரவரி மாதமும் அனுமதி கொடுக்க முடியாது என்றால், தமிழ்நாட்டில் நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குவதை கொஞ்சம் முன்கூட்டியே செய்ய வேண்டும். பணத்தையும் சீக்கிரமே கொடுக்க வேண்டும். இதற்காக 20 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதற்காக பதிப்பாளர்களை எங்காவது ஒரு இடத்தில் தங்களது புத்தகங்களை காட்சிப் படுத்தச் சொல்லி ஒவ்வொரு புத்தகத்திலும் 100 - 200 பிரதிகளை வாங்கிவிட்டு, 10 நாட்களுக்குள் பணத்தை பதிப்பாளர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்படிச் செய்தால்தான் பதிப்பாளர்கள் சற்று மூச்சு விட முடியும்." என்கிறார் நாகராஜன்.
ஆனால், பிப்ரவரியில் நடந்தாலும் ஜனவரியில் இருந்திருக்கக்கூடிய விற்பனை இருக்காது என்கிறார் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன். "கடந்த முறை பெரிதாக யாரும் புதிய நூல்களைக் கொண்டுவரவில்லை. ஆனால் இந்த முறை எல்லோரும் பெரிதாகத் திட்டமிட்டிருந்தார்கள். நாங்கள் மட்டும் புதிதாக 80 நூல்களை வெளியிட்டிருக்கிறோம். இது தவிர, பழைய நூல்கள் எவையெல்லாம் பதிப்பில் இல்லை என்று பார்த்து அவற்றையும் அச்சிட்டிருக்கிறோம். இந்த நிலையில் கண்காட்சி தள்ளிப் போயிருப்பது பெரிய நெருக்கடிதான். சென்னையில் கொஞ்சம், நாகர்கோவிலில் கொஞ்சம், அச்சடித்துக்கொடுக்கும் அச்சகத்தில் கொஞ்சம் என புத்தகங்களை வைத்திருக்கிறோம்." என்கிறார் கண்ணன்.
இப்போது பல பதிப்பாளர்கள் புதிய வெளியீடுகளை கடைகளுக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கல். "கடைகளிலும் அமேசானிலும் விற்பனையைத் துவங்கிவிட்டோம். அதனால், இனி புத்தகக் கண்காட்சி நடக்கும்போது, அந்தப் புத்தகங்கள் எல்லாம் ஏற்கனவே வெளியானதைப் போலத்தான் வாசகர்களுக்குத் தோன்றும்" என்கிறார் கண்ணன்.
ஆன்லைன் விற்பனை தீர்வாகுமா?

பட மூலாதாரம், Getty Images
தமிழ் புத்தகங்களை அமெசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ - காமர்ஸ் தளங்களின் மூலம் விற்பனை செய்வது என்பது நீண்ட காலமாகவே நடந்துவருகிறது என்றாலும், அவற்றின் விற்பனையைப் பொறுத்தவரை ஆங்கில புத்தகங்களுக்கு இருப்பதுபோன்ற விற்பனை இருப்பதில்லை. ஆகவே, தமிழ் பதிப்புலகைப் பொறுத்தவரை ஆன் - லைன் விற்பனை என்பது ஒரு தீர்வாக இல்லை.
"ஒட்டுமொத்தமான விற்பனையில் ஆன்-லைன் விற்பனை என்பது 5- 10 சதவீதத்தை தாண்டியதே கிடையாது. தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை புத்தகங்களை நேரில் வந்து வாங்கத்தான் விரும்புகிறார்கள்" என்கிறார் நாகராஜன்.
இந்த நிலையில், சிலர் பதிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஆன் - லைன் விற்பனை தொடர்பாக புதிய முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
"2020ல் முதன் முதலில் ஊரடங்கு போடப்பட்டபோது சில பதிப்பாளர்கள் ஜூம் செயலியில் சந்தித்துப் பேச ஆரம்பித்தோம். காந்தி கண்ணதாசன், பத்ரி சேஷாத்ரி, கண்ணன், முரளி கண்ணதாசன் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். அப்போதுதான் மெய்நிகர் புத்தகக் கண்காட்சி தொடர்பான யோசனை உருவானது.
ஆரம்பத்தில் ஒரு சிறப்பான கிராஃபிக்ஸ் அமைப்புடன் மெய்நிகர் கண்காட்சியையே, அதாவது ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் உலாவும் அனுபவத்தையே ஏற்படுத்திக்கொடுக்கலாம் என நினைத்தோம். ஆனால், பலர் அந்த அளவுக்குச் செலவழிக்காமல், வாசர்களுக்கு எளிதாக அந்தக் கண்காட்சியை அமைக்கலாம் என்றார்கள். அதன்படி ஒரு மெய் நிகர் கண்காட்சியை உருவாக்கியிருக்கிறோம். இப்போதைக்கு தள்ளுபடியில் புத்தங்களை இந்த கண்காட்சியில் வாங்க முடியும்" என்கிறார் விபிஎஃப் எனப்படும் இந்தத் தளத்தின் அமைப்பாளரான கார்த்திகேயன் புகழேந்தி.
எதிர்காலத்தில் எழுத்தாளர்கள் சந்திப்பு, பதிப்பாளர்களின் சந்திப்பு, விற்பனை உரிமைகள் குறித்த பேச்சுகள் போன்றவற்றை இந்தத் தளத்தில் செய்ய முடியுமென்று இவர் கருதுகிறார். இந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து சோதனை முறையில் விற்பனை துவங்கி நடந்துவருகிறது. இப்போது பெரிய விற்பனை இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இது வேறு மாதிரியாக இருக்கும் என்ற நம்பிக்கை பதிப்பாளர்களுக்கு இருக்கிறது.
பிற செய்திகள்:
- அயோத்தி அருகே 251 மீட்டர் ராமர் சிலை அமைக்க நிலங்களை பலவந்தமாக பறிப்பதாக விவசாயிகள் புகார்
- "தஞ்சை மாணவியின் உடலை வாங்கி பெற்றோர் அடக்கம் செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஏமன் சிறை மீது சௌதி கூட்டணி விமானத் தாக்குதல்: 70 பேர் பலி, ஐ.நா. கண்டனம்
- அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பம் ஏன் விமானங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது?
- உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்









