காஞ்சிபுரத்தில் குற்றச்செயலில் ஈடுபடுவோரின் தொடர் கைதுகள்; குற்றங்கள் குறைகிறதா?

காவல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துவரும் 'ரௌடிகள் தேடுதல் வேட்டை'யால் குற்றச் சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. ` குற்றத்தின் அளவைப் பொறுத்தும் கடந்தகால செயல்பாடுகளின் அடிப்படையிலும் கைது நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்' என்கிறார், மாவட்ட எஸ்.பி டாக்டர் சுதாகர். என்ன நடக்கிறது காஞ்சியில்?

கண்காணிப்பில் உள்ள 1,960 பேர்

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது வரையில் 500 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. இருப்பினும், காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் 1,960 பேர் உள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான பணிகளில் வேகம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் முக்கியமான குற்றச்செயலில் ஈடுபடுபவர்களாக பார்க்கப்படும் படப்பை குணா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர் மீது மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரூபாவதி என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். தனக்கு சொந்தமான காலிமனையை படப்பை குணா, ஆயுதப் பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவர் உள்பட நான்கு பேர் மிரட்டி எழுதி வாங்கிச் சென்றதாக புகார் தெரிவித்திருந்தார்.

வேகம் எடுத்த தேடுதல் பணி

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படப்பை குணாவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆயுதப்படை காவலர் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர். நில அபகரிப்பு வழக்கில் வெளியில் வந்த குணா, தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதால் அவரைத் தேடும் பணிகள் வேகம் எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, படப்பை குணாவின் மனைவியை ஞாயிற்றுக்கிழமை அன்று போலீஸார், விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராகவும் இருக்கிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களைவிடவும் அதிக வாக்குகளைப் பெற்றார். அவரை தொடர்ந்து குணாவுக்கு உதவியதாக நடிகர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். படப்பை குணா மீது எட்டு கொலை வழக்குகள் உள்பட 40 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

படப்பை குணாவை போல, காஞ்சியில் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர், கடந்த 2017 ஆம் ஆண்டு கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது கூட்டாளிகளான தணிகா, தினேஷ் ஆகியோர் இடையே போட்டி நிலவி வந்தது. காஞ்சியில் அடுத்து யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதை நிறுவும் வகையில் பல்வேறு குற்றச் சம்பவங்களை இந்த இரு குழுக்களும் அரங்கேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

போட்டிக்காக அரங்கேறும் கொலைகள்

காஞ்சியில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை மிரட்டுவது, பணம் பறிப்பது என இந்தக் குழுக்கள் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. `காஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றம், பல்லவர் மேடு, பொய்யாக்குளம், திருக்காலிமேடு, குண்டுகுளம் ஆகிய பகுதிகளே குற்றச் செயல்களின் இருப்பிடமாக உள்ளதாகவும் கொலை, சாராயம், கட்டப்பஞ்சாயத்து என இங்கு நடைபெறாத குற்றங்களே இல்லை' எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த நவம்பர் மாதம் காஞ்சிபுரம் சாலைத் தெருவில் உள்ள ஓர் அங்காடியில் ஸ்ரீதரின் கூட்டாளிகள் நடத்திய தாக்குதல் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடையின் உரிமையாளர் மாமூல் தராததால் அங்கிருந்த நான்கு பேரை அரிவாளால் இந்தக் கும்பல் வெட்டியதாகவும் தகவல் வெளியானது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் உடனே கைது செய்துவிட்டனர்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தை இலக்காக வைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் இயங்கி வருகின்றனர். இவர்களுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் நட்பும் துணையாக இருந்ததால் குற்றச் செயல்கள் அதிகரித்தன. நிலங்களைத் தவிர தனிப்பட்ட பகைக்காகவும் பல கொலைகள் நடந்தன. இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்தாமல் கடந்த காலங்களில் காவல்துறையும் மௌனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

நடவடிக்கை சரிதான், ஆனால்?

`` சென்னையில் அரசு இயந்திரங்களின் நெருக்கடியால் புறநகர்ப் பகுதிகளுக்கு இம்மாதிரியான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் இடம்பெயர்ந்தனர். இங்கு போலி நில ஆவணம் மூலம் நிலங்களைப் பறிப்பது, பாலியல் புகார்கள், கட்டப்பஞ்சாயத்து என அவர்களின் அத்துமீறல் அதிகப்படியாக உள்ளது. இது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் யாரும் பேச மாட்டார்கள். காவல்துறையின் நடவடிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. இந்த நடவடிக்கையால் அப்பாவிகள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது'' என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான சமரன்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` குற்றச்செயலில் ஈடுபடுபவர்களால் பாதிக்கப்படுகிறவர்கள் காவல்துறையின் கைது நடவடிக்கையை வரவேற்கின்றனர். படப்பை குணா அச்சுறுத்தலில் ஈடுபட்டாலும் அவரது மனைவி எந்தக் குற்றமும் செய்ததாகத் தகவல் இல்லை. அவர்களின் குடும்பங்களை அச்சுறுத்துவது சரியான நடவடிக்கை இல்லை எனப் பார்க்கிறோம். செங்கல்பட்டில் இரட்டைப் படுகொலை நடைபெற்றதைத் தொடர்ந்து 2 என்கவுன்டர்கள் நடந்தன. இதன்மூலம் குற்றங்கள் குறையும் எனப் போலீஸார் கருதுகின்றனர். ஆனால், அவ்வாறு குறைவதற்கு வாய்ப்பில்லை. குற்றம் செய்கிறவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. அதனைப் போலீஸார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை'' என்கிறார்.

மாவட்ட எஸ்.பி சொல்வது என்ன?

இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி டாக்டர் சுதாகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கைது நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம். இதனால் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. இந்த நடவடிக்கையை அப்படியே விட்டுவிட முடியாது. காவல்துறை நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றச் செயலில் ஈடுபடுகின்ற அனைவருமே கண்காணிக்கப்படுகின்றனர்'' என்கிறார்.

`` படப்பை குணா போல எத்தனை பேர் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளனர்?' என்றோம்.``அனைவரையும் கண்காணிக்கிறோம். வழக்குகளின் தன்மையைப் பொறுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணிக்கிறோம். தற்போது வரையில் 500 பேரை கைது செய்துள்ளோம். பழைய குற்றவாளிகள் அனைவரையும் கண்காணித்து வருகிறோம். எங்களுக்கு சட்டம் ஒழுங்கு மிக முக்கியமான ஒன்று.

மேலும், பழைய குற்றவாளிகள் மீதான வழக்குகளை நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தரும் வேலைகளையும் துரிதப்படுத்தி வருகிறோம். இதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். யார் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கொடுக்கப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: