You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுல்லி டீல்ஸ், புல்லி பாய் செயலிகள்: ஒரே மாதிரி வழக்குகள் - டெல்லி, மும்பை போலீஸ் கையாண்டது எப்படி?
- எழுதியவர், மயங்க் பகாவத்
- பதவி, பிபிசி மராத்தி
இந்த வாரம் சர்ச்சைக்குரிய 'புல்லி பாய்' செயலி வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, வழக்குப் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். விஷால் குமார் என்ற இளைஞரை பெங்களூரில் இருந்தும், ஸ்வேதா சிங் மற்றும் மயங்க் ராவல் ஆகியோரை உத்தராகண்டில் இருந்தும் காவல்துறையினர் கைது செய்தனர். மும்பை காவல்துறையினர் இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து முதல் சந்தேக நபரை ஜனவரி 3ஆம் தேதி கைது செய்தனர். இதற்காக ஒரு குழு பெங்களூருக்கும் மற்றொரு குழு உத்தராகண்டிற்கும் சென்றன.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளர் நிலையிலான அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் மறுபுறம், 'சுல்லி டீல்ஸ்' என்று பிரபலமாக அறியப்பட்ட, ஆறு மாத பழைய வழக்கு ஒன்றின் விசாரணையில் அதிக முன்னேற்றம் ஏற்படாததால், அதில் டெல்லி காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்பட்டன. முன்னதாக, சுல்லி டீல்ஸ் என்ற சர்ச்சைக்குரிய செயலி தொடர்பான வழக்கை டெல்லி காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கினர்.
2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, பெண்ணின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி பெயர் குறிப்பிடாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
அந்த வழக்கில் அசாமில் இருந்து சர்ச்சை செயலியை நிறுவிய நபரான நீரஜ் பிஷ்னோய் என்பவரை டெல்லி காவல்துறையினர் வியாழக்கிழமை (ஜனவரி 6) கைது செய்ததாகக் கூறினர்.
இந்த நிலையில் புல்லி பாய், சுல்லி டீல்ஸி ஆகிய இரண்டு வழக்குகள் இரண்டுக்கும் தொடர்பு இருக்க முடியாது என்று மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுல்லி டீல் வழக்கில் டெல்லி போலீசார் என்ன செய்தார்கள்?
2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், டெல்லி காவல்துறையினர் "சுல்லி டீல்ஸ்" என்ற செயலி தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அந்த செயலி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றியும் இழிவை ஏற்படுத்தும் வகையிலும் ஆன்லைனில் ஏலம் விட பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆனால் புலனாய்வாளர்களால் ஒருவர் கூட சமீபத்திய வாரம்வரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் சுல்லி டீல்ஸ் விவகாரம் தொடர்பாக புதன்கிழமை பேசிய டெல்லி காவல்துறையின் கூடுதல் ஆணையரும் செய்தித்தொடர்பாளருமான சின்மோய் பிஸ்வால், "சுல்லி டீல்ஸ் செயலியின் ஹோஸ்டிங் தளம் வெளிநாட்டில் அமைந்துள்ளது. ஜிஎன்சிடியிடம் இருந்து எம்எல்ஏடி (குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம்) அனுமதியை டெல்லி காவல்துறை ஒப்புதல் பெற்றுள்ளது. அதனடிப்படையில் செயலியை நிறுவிய நபர் பற்றி விசாரணை நடந்து வருகிறது" என்றார். ஆனால், "புல்லி பாய்" செயலியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக மும்பை காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்குப் பிறகு, அத்தகைய வேகத்தை டெல்லி காவல்துறையால் ஏன் காட்ட முடியாமல் போனது என கேள்விகள் எழுந்தன.
பெயர் வெளியிட விரும்பாத டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் 'தி இந்து' நாளிதழிடம் பேசுகையில், "இந்த செயலியை பரப்புபவர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்," என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வாலை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் அவரது தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
புல்லி பாய் - சுல்லி டீல்ஸ் இடையே தொடர்பு இருக்குமா?
சுல்லி டீல்ஸ் மற்றும் புல்லி பாய் செயலிக்கு இடையே உள்ள ஒரே குறிப்பிடத்தக்க ஒற்றுமை, இரண்டும் கிட்ஹப்பில் ஹோஸ்ட் செய்யப்படுகின்றன என்பதுதான்.
GitHub என்பது உலகின் மிகப்பெரிய ஓப்பன் சோர்ஸ் டெவலப்பர் சமூக தளமாகும், இதில் பயனர்கள் தங்கள் திட்டங்களையும் குறியீட்டையும் பதிவேற்றி மற்றவர்கள் பார்க்க, திருத்த மற்றும் மாற்றங்களைச் செய்ய வாய்ப்பளிக்ப்படுகிறது. புல்லி பாய் செயலி தொடர்பாக பிபிசி மராத்தியிடம் மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் நாக்ராலே பேசும்போது, "இரண்டு வழக்குகளும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளவையா என இந்த நேரத்தில் எதுவும் சொல்ல முடியாது" என்று உறுதிபடக் கூறினார்.
"எங்கள் விசாரணை மிகவும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது," என்றார் அவர்.
ஆனால் புல்லி பாய் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருக்கு சுல்லி டீல்ஸ் வழக்கிலும் தொடர்பு இருப்பதாக மும்பை காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரிகள் நம்புகின்றனர். பெயரை வெளிப்படுத்த விரும்பாத சைபர் பிரிவு அதிகாரி ஒருவர், "சுல்லி டீல்ஸ் செயலியை பின்தொடர்பவர்களில் விஷாலும் ஒருவர் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது வரை உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறினார். சுல்லி டீல்ஸ் விவகாரத்தை விசாரிப்பதில் டெல்லி காவல்துறை செய்யும் தாமதம் குறித்து கேட்டதற்கு, "அது அவர்களுடைய வழக்கு. அது பற்றி கருத்து சொல்ல மாட்டேன்," என்று ஹேமந்த் நாக்ராலே தெரிவித்தார்.
மும்பை - டெல்லி காவல்துறைகளின் செயல்திறன் ஒப்பீடு
டெல்லி காவல்துறையினர் கடந்த ஆறு மாதங்களாக ஒரு கைது நடவடிக்கையை கூட மேற்கொள்ளாத நிலையில், மும்பையில் உள்ள அவர்களது சகாக்கள் நடவடிக்கையில் இறங்கி, சமீபத்திய வழக்கில் 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இத்தனைக்கும் டெல்லி காவல்துறை மத்திய உள்துறையின் கீழ் உள்ளது. மும்பை காவல்துறை மகாராஷ்டிரா மாநில அரசின் கீழ் செயல்படும் துறையாகும். இரண்டு துறைகளுமே செயல்திறனில் மிகவும் திறமையானவை மற்றும் அனைத்து வளங்களையும் தங்கள் வசம் கொண்டுள்ளவை.
ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரிடம், இரு காவல்துறைகளின் செயல்பாட்டை எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்று கேட்டோம்.
ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜி.கோல்சே-பாட்டீல் கூறும்போது, "டெல்லி காவல்துறையினர் நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். இருப்பினும், புல்லி பாய் செயலி ஒரு சர்ச்சையை உருவாக்கிய பின்னர், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த விஷயத்தில் இந்திய அரசு, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையுடன் இணைந்து செயல்படுகிறது என்று கூறினார். மறுபுறம், மும்பை காவல்துறையின் உடனடி நடவடிக்கையைப் பாராட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோல்சே பாட்டீல், "முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பை பரப்பும் வகையில் இந்த செயலியை பயன்படுத்தியுள்ளனர். எனவே, அதற்கு காரணமானவர்களுக்கு எதிரான மும்பை காவல்துறையின் நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்." என்று தெரிவித்தார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், ஓய்வுபெற்ற கூடுதல் காவல்துறை இயக்குநருமான பி.கே. ஜெயின், "சைபர் கிரைம் வழக்குகள் நாட்டில் பல மடங்கு அதிகரித்துள்ளன. எனவே, இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் துறைகளைப் பொறுத்தே எல்லாம் அமையும். எந்த புகாருக்கு அவை முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று," என்கிறார்.
"ஒருவேளை டெல்லி காவல்துறையினர் சுல்லி டீல்ஸ் வழக்கை அவ்வளவு கடுமையாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம், எனவே அவர்கள் அதை தீவிரமாக விசாரிக்காமல் இருந்திருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் இதுபோன்ற வழக்குகளில் எளிதில் துப்பு துலக்கி விட முடியும்," என்றும் அவர் தெரிவித்தார்.
"காவல்துறைக்கு எவ்வளவு ஆள்பலம் இருக்கிறது? இந்த வழக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்குகிறதா? இந்த அம்சங்களின் அடிப்படையில், காவல்துறையினர் தங்களுடைய வழக்கைத் தேர்வு செய்கிறார்கள் அல்லது விசாரணையை வேகப்படுத்துகிறார்கள்," என்று ஜெயின் கூறினார். புல்லி பாய் வழக்கில் மும்பை காவல்துறை துப்பு துலக்கியது எப்படி?
மும்பை காவல்துறையினர் ஜனவரி 1ஆம் தேதி புல்லி பாய் செயலி தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து புல்லி பாய் ட்விட்டர் கணக்கையும் அதை பின்தொடருவோரையும் காவல்துறையினர் கண்காணித்தனர். குறிப்பிட்ட கணக்கில் இருநது ஐந்து பின்தொடருவோர் வடிகட்டப்பட்டனர் என்று மும்பை காவல் ஆணையர் கூறினார். புல்லி பாய் செயலியை பின்தொடருவோரில் ஒருவர் 'கால்சா' தீவிரவாத அமைப்பின் ஆதராளராக தோன்றியதாக மும்பை காவல்துறை பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது. மும்பை குற்றப்பிரிவு இணை ஆணையர் (ஜேசிபி) மிலிந்த் பரம்பே இது பற்றி கூறுகையில், "கால்சா ஆதரவாளர் ஒருவரின் ட்விட்டர் பக்கத்தை ஒருவர் பின்தொடருவதை அறிந்தோம். இதைத்தொடர்ந்து விஷால் குமார் ஜாவை அடைந்தோம்," என்று தெரிவித்தார். "காலிஸ்தானி சித்தாந்தத்தை ஆதரிக்கும் நபர்களால் இந்த செயலி உருவாக்கப்பட்டதாக காட்ட சந்தேக நபர்கள் முயற்சி செய்தனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள விஷால், கால்சா ஆதரவாளரின் போலி அடையாளத்தைப் பயன்படுத்தியதாக அறிகிறோம்," என்றார் ஹேமந்த் நாக்ராலே.
பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இதுபோன்ற வழக்கை விசாரிக்கும் போது அனைத்து பங்குதாரர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மீரா போரவங்கர் அறிவுறுத்துகிறார்.
"நாம் காவல்துறையை மட்டுமல்ல, வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளிமுடம் கூட இந்த விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சைபர் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய, நமது தடயவியல் திறன்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாக உள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையுடன் அவர்கள் விளையாடுகிறார்கள்," என்றார் மீரா.
"இந்த வழக்குகளின் விசாரணை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."
"இணைய வழி மிரட்டல், அச்சுறுத்தல், அசல் அடையாளத்தை மோசடியாக வடிவமைப்பது போன்ற குற்றங்களை மிகவும் கடுமையானதாக கருதி விசாரிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது பெண்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விழிப்புணர்வு இல்லாததாலும், சில சமயங்களில் பொதுமக்கள் அவமானம் காரணமாக விஷயத்தை வெளியில் சொல்லவும் முன்வருவதில்லை. இதனால், சைபர் குற்றவாளிகள் தடையின்றி பல தளங்களில் செயல்படுகிறார்கள். அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும்," என்கிறார் மீரா போரவாங்கர்.
பிற செய்திகள்:
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
- 3 நாட்களில் 5,900 விமானங்கள் ரத்து - கொரோனாவால் தொடரும் பயணச் சிக்கல்
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்