புல்லி பாய் செயலி: முஸ்லிம் சிறுமிகளை ஏலத்தில் விடுவதாக சர்ச்சை - 18 வயது பெண் கைது

நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை செல்பேசி செயலியில் பதிவேற்றி அவர்களை "விற்பனைக்கு" ஏலம் எடுக்கலாம் என கூறப்பட்ட விவகாரத்தில் 18 வயது பெண்ணை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிபிசி மராத்தியின் செய்திப்படி, புல்லி பாய் செயலியை அவர் உருவாக்கியதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கில் நடக்கும் இரண்டாவது கைது இது. முன்னதாக, 21 வயது பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த செயலி, 'கிட் ஹப்' என்ற வலைதளம் மூலம் இயக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் நடந்த இந்த ஏலம் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், அந்த செயலியை அந்நிறுவனம் நீக்கியிருக்கிறது.

இந்த சர்ச்சை செயலி தொடர்பாக மாணவர் விஷால் குமாரிடம் விசாரணை நடத்தியபோது ஸ்வேதா சிங் என்ற பெயர் வெளி வந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. பின்னர், அவர் செவ்வாய்க்கிழமையன்று வட மாநிலமான உத்தராகண்டில் கைது செய்யப்பட்டார்.

இதுவரை, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை.

"இன்னும் சிலர் விசாரணைக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை தர்க்கரீதியாக நாங்கள் விசாரணை நடத்துவோம்" என்று மகாராஷ்டிராவின் இளைய உள்துறை அமைச்சர் சதேஜ் படேல் பிபிசியிடம் தெரிவித்தார்.

பல முக்கிய இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் புகைப்படங்கள், அவர்களின் அனுமதியின்றி புல்லி பாய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, போலி ஏலத்தில் "விற்பனைக்கு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இஸ்லாமிய பெண்களை இணையத்தில் ஏலம் விட்டு, அவர்களை துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம், "சல்லி டீல்ஸ்" என்ற செயலி மற்றும் இணையதளத்தில், 80க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் சுயவிவரங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. சமூக ஊடகங்களில் பதிவேற்றிய அவர்களின் புகைப்படங்களை அந்த இணையதளத்தில் பயன்படுத்தி, "இன்றைய பேரம்", (Deal of the day) என்று விவரித்த விவகாரம் சர்ச்சையானது.

இந்த இரண்டு சம்பவங்களிலும், உண்மையான விற்பனை என்று எதுவும் இல்லை. ஆனால், இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்துவதும் வகையிலும் அவமானப்படுத்துவதும்தான் இதன் நோக்கமாக இருந்தது என காவல்துறையினர் கூறுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோதி ஆளகையின் கீழ் அமையும் இந்து தேசியவாதத்தின் எழுச்சிக்கு எதிரகவும் இதில் தொடர்புடையவர்கள் குரல் கொடுத்தனர். சல்லி என்பது வலதுசாரி இந்துகள், இணையத்தில் இஸ்லாமிய பெண்களை இழிவாக அழைக்க பயன்படுத்தும் இந்தி வழக்காடு சொல்லாகும். புல்லி என்பதும் இழிவுப்படுத்த பயன்படுத்தப்படும் வார்த்தையே.

சல்லி டீல்ஸ் விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கி இருந்தாலும், அதில் யாரும் இன்னும் குற்றம்சாட்டப்படவில்லை.

புல்லி பாய் செயலி பற்றிய செய்தி வெளியானதும், சல்லி டீல்ஸ் விவகாரத்தில் இலக்கு வைக்கப்பட்ட கவிஞர் நபியா கான், 2021ஆம் ஆண்டில் டெல்லி காவல்துறை தான் அளித்த புகாரின் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த புல்லி பாய் செயலி விவகாரத்தில் இலக்கு வைக்கப்பட்ட பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், குறைந்தது மூன்று மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் தங்களின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

திங்கட்கிழமையன்று, மாணவர் குமாரை தெற்கு நகரமான பெங்களூரில் மும்பை காவல்துறையின் சைபர் பிரிவு காவலில் வைத்தது. மும்பைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை ஜனவரி 10ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நபர், நான்கு ட்விட்டர் கணக்குகளை சமூக ஊடகங்களில் உள்ள புகைப்படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தியதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த காவல் அதிகாரியை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவற்றில் மூன்று கணக்குகளை பெண் ஒருவர் கையாண்டு இருக்கிறார்.

புல்லி பாய் செயலியில் உள்ள பெண்களின் பட்டியலில், பாலிவுட் நடிகையும், காணாமல் போன இந்திய மாணவரின் 65 வயது தாயும் அடங்குவர்.

போலி ஏலத்தில் இடம்பெற்ற பல பெண்கள் சமூக ஊடகங்களில், திரைப்பிடிப்புகளையும் (ஸ்கிரீன் ஷாட்கள்) செய்திகளையும் பகிர்ந்த பின்னர் மக்களை கோபமுற்று அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

கடந்த ஆண்டு சல்லி டீல்ஸ் குறித்துப் புகாரளித்த காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகையாளர் குராதுலைன் ரெஹ்பார் (Quratulain Rehbar), இந்த முறை செயலியில் தன் பெயரை பார்ப்பது அருவருப்பாக இருப்பதாகக் கூறினார்.

இந்த செயலியை பதிவேற்றிய பயனரை, கிட்ஹப் தடை செய்துள்ளதாக தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமையன்று தெரிவித்தார். இது குறித்து மேலும் நடவடிக்கை எடுக்க சைபர் முகமைகளுடன் காவல்துறை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக, "இந்த தளங்களை தடை செய்வதுடன், இது போன்ற தளங்களை உருவாக்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பது அவசியம்." என்று சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார்.

சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர்கள் இன்னும் தண்டிக்கப்படாததால், இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம், சல்லி டீல்ஸ் செயலி வெளிச்சத்திற்கு வந்த பிறகு, வைஷ்ணவுக்கு எழுதிய கடிதங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து, கிட் ஹப்-பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அத்தகைய செயல்பாடு குறித்த புகார்களின் விசாரணை தொடர்ந்த நிலையில்,எங்கள் நிறுவனம் ஒரு பயனர் கணக்கை இடைநீக்கம் செய்துள்ளது. அவை அனைத்தும் எங்கள் கொள்கைகளை மீறுகின்றன", என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இணையத்தில் நடக்கும் துன்புறுத்தல் பற்றி, 2018 ஆம் ஆண்டு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பெண் எவ்வளவு அதிகமாக குரல் கொடுக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் குறிவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அளவு, மதச் சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் நிலவும் அரசியல் சூழலில், சமீப ஆண்டுகளில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான இணைய வழி கேலியும் , துன்புறுத்தலும் மோசமாகிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: