You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை பல்கலையில் படிப்பிலேயே சேராதவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற விநோதம்
- எழுதியவர், ஷோபனா
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் ஒரு சில பட்டப் படிப்புகளில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட தேர்வுகளில், படிப்பில் சேராத மாணவர்களும் மோசடி செய்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் பல்கலைக்கழக நிர்வாகத்தை விழிபிதுங்க வைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் மோசடி எப்படி நடந்தது என்பதை நிரூபிக்க முடியாவிட்டாலும், 100க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றது எப்படி என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. என்ன நடந்தது?
சென்னை பல்கலைக்கழகத்தில் புதன்கிழமையன்று (டிசம்பர் 22) சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக நடக்கும் இந்த கூட்டம், இம்முறை முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்கு காரணம், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் அரியர் வைத்துள்ளவர்களுக்கான சிறப்பு ஆன்லைன் தேர்வில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, உரிய படிப்பில் சேராமலேயே பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.கெளரி தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் பிபிசியிடம் பேசிய அவர், "இந்த முறைகேடு எவ்வாறு நடந்தது என்பது குறித்து இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது. இது ஆன்லைன் மூலம் நடந்த தேர்வு என்பதனால், இத்தகைய முறைகேடு நடந்திருக்கிறது. நேரடி தேர்வாக இருந்திருந்தால், இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்து விசாரிக்க சிண்டிகேட் உறுப்பினர்களை கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம், 1980-81 ஆண்டு முதல் தங்களது படிப்பில் அரியர் வைத்துள்ளவர்கள், சிறப்பு தேர்வு எழுதி பட்டம் பெறலாம் என்று அறிவித்தது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், மாணவர்கள் பட்டம் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாணவர்கள் தேர்வு எழுத இரண்டு தேதிகள் அறிவிக்கப்பட்டன. ஒன்று, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி; மற்றொன்று 2020ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மே 5ஆம் தேதி நடக்க வேண்டிய தேர்வு, அந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதிய 100க்கும் மேற்பட்டவர்கள், அப்படிப்பில் சேராமல் பட்டம் பெற முயற்சி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் பி.காம் மற்றும் பி.பி.ஏ படிப்பு தேர்வுகளை எழுதியுள்ளதாகவும், தனியார் மையங்கள் மூலம் இந்த முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து துணைவேந்தர் எஸ்.கெளரி பிபிசி தமிழிடம் கூறுகையில், "எந்தெந்த படிப்புகளில் இந்த முறைகேடு நடந்திருக்கிறது என்பதைப் பற்றி உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைக்கவில்லை. பி.காம், பி.பி.ஏ என்று கூறப்படுகிறது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை. தற்போது, அனைத்தும் முதல் கட்ட விசாரணை நிலையில் உள்ளன. அதனால், இந்த விசாரணைக் குழு அதன் விசாரணையை தொடங்கும்போது இதுகுறித்த தகவல்கள் நிச்சயம் கிடைக்கும்," என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே பாண்டியன் பிபிசிடம் பேசினார். "நான் இன்று காலையில் துணைவேந்தருடன் இது குறித்து பேசினேன். பொதுவாக, நாங்கள் தேர்வு முடிவுகள் அறிவித்து, பட்டங்கள் அளிக்க ஒரு பட்டியலை தயார் செய்வோம்.
அப்படி தயார் செய்யும் போது, 115 பேரின் பெயர்கள் படிப்பு சேர்க்கை பட்டியலில் காணப்படவில்லை. இவர்கள் அனைவரும் 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கு டிஜிட்டல் பதிவுகள் இல்லை. இதில் தவறு நடந்துள்ளது. ஆனால், தீர்வு காணக் கூடியதுதான்.
மேலும், நாங்கள் யாருக்கும் பட்டம் அளிக்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துவதற்கு எதுவும் இல்லை," என்று தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
- மகாராஷ்டிர கிராமத்தில் குரங்குகள் 200 நாய்க் குட்டிகளை கொன்றனவா? - உண்மை என்ன?
- சிவிங்கிப் புலிகள்: ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியக் காடுகளுக்கு பாய்ந்து வரப்போகின்றனவா?
- ஸ்விகி அறிக்கை சுவாரசியம்: 6 கோடி பிரியாணி ஆர்டர்; அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் டிப்ஸ்
- ஒமிக்ரான் தொற்று: எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவைப்படும்?
- படுத்துக் கொண்டே விசாரணைக்கு ஆஜரான முன்னாள் காவல்துறை அதிகாரியை எச்சரித்த நீதிமன்றம்
- தியானென்மென் வெட்கக்கேடு ஸ்தூபி ஹாங்காங்கில் இரவோடு இரவாக அகற்றம்
- இளவரசி ஹயா, துபாய் ஷேக், ரூ.5,500 கோடிக்கு ஜீவனாம்சம் - மலைப்பூட்டும் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு
- தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்