You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 பணிகளுக்கு 2022இல் தேர்வு - 'இனி மோசடி நடக்க வாய்ப்பில்லை'
அரசுப் பணிக்கான தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
"லாரிகளில் விடைத்தாள்களைக் கொண்டு வரும்போது பாதி வழியில் நிறுத்தி ஓ.எம்.ஆர் தாள்களைத் திருத்துவது போன்ற மோசடிகள் இனி நடப்பதற்கு வாய்ப்பில்லை" எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் துறைகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. இதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தங்களுக்கு சம்பந்தம் இல்லாத தேர்வு மையங்களை தேர்வு செய்து மோசடி செய்வது, ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் டி.என்.பி.எஸ்.சி பணியாளர்கள் மூலம் திருத்துவது என ஏராளமான முறைகேடுகள் நடந்தன.
ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை திருத்தும் வகையில் அழியும் மை கொண்டு சில தேர்வர்கள், தேர்வு எழுதுவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் தேர்வர்கள், அவர்களுக்கு உதவிய டி.என்.பி.எஸ்.சி பணியாளர்கள் எனப் பலரும் கைது நடவடிக்கைக்கு ஆளானார்கள். இதுதொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள புதிய தேர்வுகள்
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள புதிய தேர்வுகள் குறித்த அறிவிப்பை தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ``2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் குரூப் 2 தேர்வும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும். 2020-21 ஆண்டுக்கான அறிவிப்பில் குருப் 2, 2ஏ பிரிவில் 5831 பணியிடங்களுக்கும் குரூப் 4 பிரிவில் 5255 பணியிடங்களும் காலியாக உள்ளன. தேர்வு குறித்த நோட்டிபிகேஷனுக்குப் பிறகு காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிகரித்துக் கொள்வோம்'' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், `` குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு ஓ.எம்.ஆர் தாள்களை ஸ்கேன் செய்து விரைவில் முடிவுகளை வெளியிடுவோம். தவிர, தேர்வுத்தாள்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட உள்ளன. இவ்வாறு திருத்தப்படும்போது தமிழ் மொழியாக இருந்தால் அதுதொடர்பான ஒரு வல்லுநருக்கும் பிற மொழியாக இருந்தால் மற்ற வல்லுநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு திருத்தப்படும்'' என்றார்.
மேலும், `` தேர்வர்கள், தங்களுக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் தேர்வு எழுதாத வகையில் அவற்றை முறைப்படுத்தியுள்ளோம். நாங்களே தேர்வு மையங்களைத் தீர்மானிக்கிறோம். அரசுப் பணியாளர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் 4 முதல் 12 வரையில் கணினி முறையிலேயே நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை ஒரு லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். கணினி முறையில் தேர்வு நடக்கும்போது தவறு நடக்காது'' என்றார்.
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, ` தேர்வு முடிந்த பிறகு அந்த ஆவணங்களை ஒரு பெரிய பெட்டியில் வைத்து கண்டெய்னரில் ஒன்டைம் லாக் செய்யப்படும். அதனை ஜி.பி.எஸ் முறையில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கண்காணிப்பார். லாரி செல்லும்போது எங்காவது தாமதம் ஏற்பட்டாலோ, ஒரே இடத்தில் நின்றாலோ அதனை உடனே சோதிக்கிறார்கள்.
அந்த வரிசையில் திருச்சியில் ஒரே இடத்தில் நீண்டநேரம் லாரி நின்றதால் அதனை உடனே சோதித்தோம். லாரி பிரேக்டவுன் ஆனது தெரியவந்தது. லாக் உடைந்திருக்கிறதா எனப் பார்த்தோம். அப்படி எதுவும் நடக்கவில்லை. முன்பு அழியும் மையைப் பயன்படுத்தி திருத்தினார்கள் எனத் தகவல் வந்தது. இனிவரும் நாள்களில் எந்தத் தவறும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
அதேபோல், தேர்வர்களுக்கான புதிய விதிமுறைகள் குறித்துப் பேசிய பாலச்சந்திரன், `` ஓ.எம்.ஆர் தாளில் தேர்வர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஒருபக்கம் இருக்கும். அதனை எடுத்துவிட்டால், அது யாருடையது என்பதைக் கண்டறிய முடியாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறையில் யார் எங்கே அமர வேண்டும் என்ற ஹால் மேப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு முன்பு ஒருமுறை பதிவு (one time registration) செய்ய வேண்டும். இதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்தப் பதவிக்கு தேர்வர் விண்ணப்பித்துள்ளாரோ, அது பதிவாகிவிடும்'' என்கிறார்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணி என்பதால், அதற்கான பாடத்திட்ட முறைகள் தயாராகி வருவதாகத் தெரிவித்த பாலச்சந்திரன், `` புதிய முறை என்பது அரசுக்கு நாங்கள் கொடுத்த பரிந்துரைதான். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் பொருந்தும். குரூப் 2, 2ஏ பாடப்பிரிவில் குறைந்தது 40 மதிப்பெண்ணை எடுக்க வேண்டும். அதற்குக் கீழே எடுத்தால் கணக்கில் வராது. அதற்கான பாடத்திட்டங்கள் தயாராகி வருகின்றன. ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக கொண்டு வருகிறோம்'' என்கிறார்.
``கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி ஊழியர்களே தவறு செய்தார்களே?'' எனக் கேட்டபோது, `` அதனையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். குரூப் 1 தேர்வில் பொறுத்தவரையில் நிறைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். இனிமேல் தவறு நடக்காத வரையில் செயல்படுகிறோம். தவறு செய்த அதிகாரிகள் மீது தற்காலிக பணிநீக்கம் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் யாரும் திரும்ப பணிக்கு வரவில்லை. தவறுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்