இந்துவாக மதம் மாறிய உத்தர பிரதேச ஷியா வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி

பட மூலாதாரம், Yogendra Sagar
தொடர்ந்து இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவந்த உத்தர பிரதேச ஷியா வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மதத்தைத் தழுவியுள்ளார்.
சனாதன தர்மத்தை ஏற்றுக்கொண்டுள்ள வசீம் ரிஸ்வி, ராமரை அவமதித்துக் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் சிறப்பானது என்பதால், டிசம்பர் 6 அன்று இந்து மதத்தைத் தழுவியதாகத் தெரிவித்துள்ளார்.
மதம் மாறியபின் அவர் பேசிய கருத்துகளுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
யார் இந்த வசீம் ரிஸ்வி?
உத்தர பிரதேச ஷியா வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி. இஸ்லாம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவந்த அவர், முகமது நபி வாழ்க்கை குறித்து எழுதிய புத்தகம் பெரும் சர்ச்சையானது.
இஸ்லாமிய மதக் கல்வி வழங்கும் பள்ளிகளான மதரசாக்களை மூட வேண்டும் எனவும், அவை பயங்கரவாதிகளின் பிறப்பிடமாகத் திகழ்வதாகவும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Yogendra Sagar
அவரது கருத்துகளுக்கு எதிராக இஸ்லாமியர்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வசீம் ரிஸ்வி திங்கள்கிழமை இந்து மதத்தைத் தழுவினார். காசியாபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோயிலில் இந்து மதத்தைத் தழுவிய அவர், தன் பெயரை ஜிதேந்திர நாராயன் சிங் தியாகி என மாற்றிக்கொண்டார்.
கோயிலில் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்த அவர், வேதமந்திரங்களை ஓதி, சடங்குகளை செய்து முறைப்படி சனாதன தர்மத்தை ஏற்றுக்கொண்டார்.
இதன்பின், ஊடகங்களிடம் பேசிய அவர், "ராமரை அவமதித்துக் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் சிறப்பானது என்பதால், டிசம்பர் 6 அன்று இந்து மதத்தைத் தழுவியுள்ளேன். இந்த நாள், இந்துத்வாவுக்கு பெருமையான நாள்" என தெரிவித்தார்.
மேலும், "இப்போது நாங்கள் சுதந்திரமாக உணர்கிறோம். அன்பையும் மனிதத்தையும் அடையும் இடத்திற்கு நாங்கள் இனி செல்வோம். சனாதன தர்மமே உலகின் பழமையான மதம் என்பதால் அதனை தழுவியுள்ளேன்.

பட மூலாதாரம், Yogendra Sagar
"இந்துக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதனை முஸ்லிம் மதத்தினர் தொடர்ந்து செய்துவருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் இந்துக்களை கொல்ல நினைக்கின்றனர். ஆனால், இந்துக்கள் அதுகுறித்து கவலை கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.இது குறித்து இந்து மதத்தினரை விழிப்புணர்வு அடையச் செய்வோம். நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், எங்களை யாரும் கொல்வதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என சர்ச்சைக்குரிய வகையில் கூறினார்.
தன் குடும்ப வாழ்க்கை குறித்து பேசிய அவர், "என் குடும்பத்தினர் என்னுடன் இதனை ஏற்றுக்கொண்டு உடன் இருக்கலாம். இதனை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மத ரீதியாக தொடர்பை துண்டித்துக்கொள்வோம்" எனக்கூறினார்.
இதனிடையே, அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் யாசூப் அப்பாஸ், பிபிசியிடம் கூறுகையில், "எந்த மதத்தைத் தழுவவும் வசீம் ரிஸ்விக்கு அதிகாரம் உண்டு. ஆனால், எங்களின் மத உணர்வுகளுடன் அவர் விளையாடினால், அவருக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம்" என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








