குஜராத்தில் அசைவ உணவு கடைகள் தொடர்பான சர்ச்சை: பாஜக சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹிம்மத் கட்டாரியா
- பதவி, பிபிசி குஜராத்தி சேவை
குஜராத் மாநிலம், ஆமதாபாத் மாநகராட்சி, சாலைகளில் அசைவ உணவுகள் விற்பதைத் தடுக்கவும், பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தலங்கள் இருக்கும் இடங்களிலிருந்து 100 மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அசைவ உணவு கடைகளை அகற்றவும் உத்தரவிட்டது.
இந்த முடிவு குறித்து சாலை வியாபாரிகள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த தடை குறித்து கருத்து தெரிவித்த குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், மக்கள் தாங்கள் விரும்பிய உணவை உண்பதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
மாநிலத்தின் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில், "இந்த தடைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். அவர்கள் அசைவ உணவு விற்கிறார்கள் என்பது காரணமில்லை," என்று தெரிவித்தார்.
இருப்பினும் எதிர்கட்சியான காங்கிரஸ் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளது. சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என காங்கிரஸ் தெரிவிக்கிறது.
எனவே பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது வெறும் இந்து - முஸ்லிம் அரசியலா என்ற கேள்விகள் எழுகின்றன.
பிபிசியின் குஜாராத்தி சேவை காங்கிரஸ் மற்றும் பாஜக என இருதரப்பினரிடமும் இதுகுறித்து பேசியது.
பாஜகவின் குஜராத் மாநில செய்தி தொடர்பாளர் யாமல் வியாஸிடம் இதுகுறித்து கேட்டபோது, "பொது சுகாதாரம் மற்றும் போக்குவரத்தை கருத்தில் கொண்டே அசைவ உணவுக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு பிடித்தமான உணவை உண்பதற்கான உரிமை உள்ளது என்பதை பாஜக தெளிவாக நம்புகிறது," என்று தெரிவித்தார்.
இருப்பினும் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள் விற்கப்படும்போது அரசு விதிமுறைகளின்படிதான் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
"இது மாநாகராட்சிகளின் முடிவு. மாநில அரசு இதுகுறித்து எந்த சட்டத்தையும் அறிவிக்கவில்லை" என்று வியாஸ் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
வீதிகளில் விற்கப்படும் அசைவ உணவுகள் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
மறுபுறம் இதில் மாநில அரசின் தலையீடு ஏதும் இல்லை என கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாமல் வியாஸ், "சாலையில் உள்ள உணவகங்களை அகற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. இது தவறான புரிதல். போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை உணவகங்கள் அவர்களுக்கென்று குறிப்பிடப்பட்ட இடங்களில் இருக்க வேண்டும் என்ற சட்டம் ஏற்கனவே உள்ளது." என்று தெரிவித்தார்.
இருப்பினும் குஜராத் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், மனிஷ் டோஷி, "குஜராத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக பொது போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடிவு செய்திருந்தால், அது முதலில் சட்டவிரோத கட்டுமானத்தை தடுத்திருக்க வேண்டும். பொது சுகாதாரம் முக்கியம் என கருதினால் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கியிருக்க வேண்டும். சபர்மதி நதி மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. இது சுகாதாரத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. அரசியல் சார்ந்த நடவடிக்கை," என்று தெரிவித்தார்.
"திபாவளியன்று நிறைய இனிப்புகள் உண்ணுகிறோம். ஆனால் அதன் தரம் குறித்த செய்திகள் அதன்பிறகுதான் வெளியே வருகின்றன பொது சுகாதாரத்தில் அக்கறை கொள்ளும் பாஜக அரசு இதுகுறித்து ஏன் கொண்டு கொள்வதில்லை," என்று டோஷி கேள்வி எழுப்பினார்.
"வழிபாட்டு தலங்களை சுற்றியுள்ள அசைவ உணவு கடைகளை அகற்ற வேண்டும் என்ற பாஜகவின் நடவடிக்கை வெறும் அரசியல் நடவடிக்கை வேறொன்றும் சிறப்பாக இல்லை," என்று தெரிவித்தார்.
"அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு பதிலாக இம்மாதிரியான அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது," என்றார்.
`பாஜக ஊடகங்களிடம் தெரிவிக்கவில்லை`
சட்டவிரோத கடைகளை அகற்றுவது மட்டுமே விஷயம் என்றால் ஊடகங்களில் இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டது ஏன்?
இதற்கு பதிலளித்த பாஜக செய்தி தொடர்பாளர் யாமல் வியாஸ், "இதுகுறித்து கட்சியோ அல்லது மாநில அரசோ எந்த அறிக்கையையும் ஊகங்களிடம் கொடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.
"இதுகுறித்து கருத்து தெரிவித்த மனிஷ் டோஷி, அனைத்து ஊடகங்களும் இந்த விஷயத்தில் எப்படி தவறாக செய்திகளை வெளியிட முடியும்,? கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் விலையேற்றம் ஆகிய பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப பாஜக இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அசைவமா சைவமா எது நல்லது?
அசைவம் மற்றும் சைவ உணவில் உள்ள வித்தியாசம் குறித்து மருத்துவர் கபாடியாவிடம் கேட்டபோது, "இன்று பல நாடுகளில் அசைவ உணவு என்பது பரவலான உணவாகவுள்ளது. அசைவ உணவை உண்பதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை. இது முஸ்லிம் - இந்து விஷயமும் இல்லை இது தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்பு சார்ந்தது," என்றார்.
"இருப்பினும் சாலைகளில் விற்கப்படும் உணவுகளில் அதிக நிறமிகளை சேர்த்தல் உடலுக்கு தீங்கானது. அசைவ உணவு கவனத்துடன் சமைக்கப்பட வேண்டும்,"
"அசைவமோ அல்லது சைவமோ எதுவாக இருந்தாலும் நன்றாக சமைக்க வேண்டும் அதுவே உடலுக்கு நல்லது." என்றார்.
குஜராத்தில் அகமதாபாத் மாநகராட்சிக்கு முன்னதாக வதோதரா, ராஜ்கோட் மற்றும் பவநகர் மாநகராட்சி அதிகாரிகளும் இதே மாதிரி அறிவிப்பை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ’ஜெய் பீம்’ முழக்கத்தை முதலில் வழங்கியது யார்? அது எப்படி தொடங்கியது?
- நிஜ செங்கேணியை சந்திக்க வேண்டாம் என இயக்குநர் கூறியது ஏன்? - 'ஜெய் பீம்' மணிகண்டன் பேட்டி
- இலங்கையில் 'அரிசி, சீனிக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்' - எதிர்க்கட்சியினர் போராட்டம்
- "நாலு நாளாச்சு, யாரும் வரலை" - குமரியில் தீவாக மாறிய கிராமத்தின் கள நிலவரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












