பங்குச் சந்தையில் இப்போது முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாமா? - பணம் சம்பாதிக்க ஆனந்த் ஸ்ரீநிவாஸன் ஆலோசனை

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக, பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏன் இந்த உயர்வு, சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய இது உகந்த தருணம் தானா? பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் தரும் ஆலோசனை என்ன?

இது போன்ற திடீர் பங்குச் சந்தை உயர்வுகளை குமிழி என்பார்கள். இதுபோன்ற குமிழிகள் இந்தியாவில் மூன்று, நான்கு வந்திருக்கின்றன. 90களின் ஆரம்பத்தில் ஹர்ஷத் மேத்தாவினால் முதல் குமிழி ஏற்பட்டது.

இப்போது உருவாகியிருக்கும் குமிழி எப்படி ஏற்பட்டது எனப் பார்ப்போம். கோவிட் பெருந்தொற்றையடுத்து பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. போன மார்ச் மாதம் 7 ஆயிரம் - 8 ஆயிரம் புள்ளிகள் வரை இறங்கின.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் பணத்தை சந்தையில் இறக்கும் நடவடிக்கைகள் துவங்கின. பெரிய அளவில் டாலர் நோட்டுகள் அடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. அதேபோல, உலகில் உள்ள பல நாடுகள் பெரும் எண்ணிக்கையில் நோட்டுகளை அடித்து புழக்கத்தில் விட்டன.

இதனால் வட்டி விகிதம் குறைய ஆரம்பித்தது. இதனால், பங்குச் சந்தை மேலே எழ ஆரம்பித்தது. முதலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை உயர்த்தினார்கள். தற்போது ஏற்பட்டிருக்கும் உயர்வுக்குக் காரணம், சில்லறை முதலீட்டாளர்கள். பங்குச் சந்தை உயர்வதைப் பார்த்த மத்திய தர வர்க்கத்தினர், போன்களில் கிடைக்கும் ஆப்களை வைத்து முதலீடு செய்கிறார்கள். வரலாறு காணாத அளவுக்கு புதிய டி மேட் கணக்குகள் துவங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இவர்களில் பலருக்கு பங்குச் சந்தை எப்படி இயங்குகிறது, நிறுவனங்களின் பின்னணி என்ன என்பது தெரியாது. பலரும் பங்குச் சந்தை முதலீடுகள் குறித்த அறிவுரைகளை வாரிவழங்க ஆரம்பித்துள்ளனர். அப்படியானால், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இப்போது எல்லோரும் பங்குச் சந்தையை நாடக் காரணம், வங்கிகளில் வட்டிவிகிதம் மிகவும் குறைந்துவிட்டது. ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கே 4.5 சதவீதம்தான் வட்டி கிடைக்கிறது. அதனால், கூடுதல் லாபம் தரும் முதலீடுகள் எவை என்று முதலீட்டாளர்கள் தேடுகிறார்கள். பலரும் பங்குச் சந்தையை நாட இதுவும் ஒரு காரணம்.

ஒரு மாதத்தில் மட்டும் பரஸ்பர நிதி மூலமாக மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இது தவிர, நேரடியாக செய்யப்படும் முதலீடு வேறு இருக்கிறது. இப்படி 15 - 16 ஆயிரம் கோடி பணம் பங்குச் சந்தையில் கொட்டப்படுகிறது. ஆனால், சில பங்குகளை மட்டுமே பலரும் விரும்புகிறார்கள். அப்படி சில பங்குகளை மட்டும் எல்லோரும் வாங்க நினைக்கும்போது, அவற்றின் விலை மிகவும் அதிகரிக்கும். அந்த விலை உயர்வுக்கும் நிறுவனத்தின் உண்மையான செயல்பாட்டிற்கும் சம்பந்தமே இருக்காது.

இரண்டாவதாக, 2019ல் நிறுவனங்களுக்கு வரி 20 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது. இதனால், நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. மாறாக, நிறுவனங்களின் லாபம் அதிகரித்தது. அந்த லாபத்தை வைத்து நிறுவனங்கள் தங்கள் கடன்களை அடைக்க ஆரம்பித்தன. இதனால், வங்கிகளில் கடன் வாங்குவதும் குறைந்தது. சில நிறுவனங்கள் இந்த லாபத்தை டிவிடெண்டாக அளிக்க ஆரம்பித்தன. ஐடிசி, இன்ஃபோசிஸ் போன்றவை டிவிடெண்டாக கொடுக்க ஆரம்பித்துள்ளன.

இதற்கிடையில், பங்குகளின் விலை உயர ஆரம்பித்ததும் இந்தத் தருணத்தை விட்டுவிட விரும்பாத மத்தியதர வர்க்கத்தினர் இதில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.

இந்தத் தருணத்தில் பங்குச் சந்தை குறித்து ஏதும் தெரியாத சிறிய முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும் என்றால், நிஃப்டியில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யலாம். கொஞ்சம் பணத்தை எஸ் அண்ட் பி இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடுசெய்யலாம். சில நாட்களில் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்திக்கும். ஆனால், பயப்படக்கூடாது. விலை இன்னும் இறங்கும்போது, வேறு சில நல்ல நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வைக்கலாம்.

தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சந்தை கீழே இறங்க ஆரம்பிக்கும்போது தினமும் இழப்பு ஏற்படும்.

இந்த நிலையில், வட்டி விகிதம் உயரும் போது பங்குச் சந்தை விழ ஆரம்பிக்கும். வட்டி விகிதம் எப்போது உயர்த்தப்படும் என்பது தெரியாது. இரண்டாவதாக, டாலர்களை அடிப்பது எப்போது நிறுத்தப்படும் என்பதை நவம்பர் மாதம் அறிவிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் கூறியிருக்கிறார். அப்படி நிறுத்தப்படும்போது, வட்டி விகிதம் உயரும். இதெல்லாம் என்றைக்கு நடக்குமெனத் தெரியாது. ஆனால், நடக்கும்.

ஆனந்த் ஸ்ரீநிவாசனின் ஆலோசனையை முழுமையாகப் பார்க்க:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :