பணக்காரர் ஆவது எப்படி? சேமிப்பு எந்தெந்த வழிகளில் சாத்தியம்? - பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் ஆலோசனை

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

"ஒருவர் தன் வருவாயில் 30 சதவீதத்தை நிச்சயம் சேமித்தே ஆக வேண்டும். சேமிக்க முடியாதவர்கள் என்று யாருமே கிடையாது. சேமிக்காதவர்கள் சிரமப்படுவார்கள்" என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தும், எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்றும் ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி:

சேமிப்பைப் பொறுத்தவரை, எல்லா குடும்பங்களும் அதில் ஈடுபட வேண்டும். மிக எளிய நிலையில் இருப்பவர்கள் துவங்கி பணக்காரர்கள்வரை, வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால் சேமித்துத்தான் ஆக வேண்டும். பத்து ரூபாய் சம்பாதிப்பவரும்கூட நிச்சயம் சேமிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனது தேவையை, தனது சம்பாத்தியத்தைவிட குறைவாகவே வைத்திருக்க வேண்டும்.

ஒருவர் தான் பணியில் சேர்ந்ததில் இருந்து திருமணம் வரையில் மிகச் சிறப்பாக சேமிக்க முடியும். அந்த காலகட்டத்தில் தனது வருவாயில் குறைந்தது ஐம்பது சதவீதத்தையாவது சேமிக்க முடியும். அதைச் செய்துதான் ஆக வேண்டும்.

காரணம், 2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் யாருக்கும் ஓய்வூதியம் கிடையாது. பொதுத் துறை வங்கிகளிலும் 2014க்குக்குப் பிறகு ஓய்வூதியம் கிடையாது. மற்றொரு பக்கம், நமது வாழ்நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 1947ல் சராசரி வாழ்நாள் 32 வயதாக இருந்தது. ஆனால், இப்போது 70ஐத் தாண்டிவிட்டது. ஆனால், நாம் 60 வயது வரைதான் வேலை செய்ய முடியும். ஆகவே, மீதமுள்ள 10 முதல் 20 ஆண்டுகளுக்கு நாம் சேமித்து வைக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் தொலைபேசி கட்டணத்தைத் தவிர, அனைத்துக் கட்டணங்களும், விலைகளும் உயர்ந்திருக்கின்றன. ஆகவே, வரும் காலத்தில் வரும் விலையேற்றத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

முன்காலத்தில் பலருக்கும் குழந்தைகள் அதிகம். ஆகவே யாராவது ஒருவர் பெற்றோரைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது ஒருவருக்கு ஒரு குழந்தை என்று ஆகிவிட்டது. ஆகவே, வரும் காலத்தில் வேலை பார்ப்பவர்கள் குறைவாகவும் அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் அதிகமாகவும் இருப்பார்கள். ஆகவே சேமிப்பு மிக முக்கியம்.

சேமிப்புகளில் பல வகை இருக்கிறது. நம்முடைய சேமிப்பை சிறிய உண்டியலில் பணத்தைச் சேர்ப்பதிலிருந்தே துவங்கலாம். கையில் வரும் சில்லரை காசுகளை, சிறிய அளவிலான தொகையை தொடர்ந்து அந்த உண்டியலில் போட்டுவரலாம். ஆனால், இப்போதிருக்கும் குழந்தைகளிடம் இளைய வயதினரிடம் இப்படி சேமிக்கும் கலாச்சாரமே இல்லை.

ஒருவர் தன் வருவாயில் குறைந்தது 30 சதவீதத்தை சேமிக்க வேண்டும். சம்பளம் வந்தவுடன் இந்த 30 சதவீதத்தை தனியே எடுத்துவைத்துவிட வேண்டும்.

ஆயுள் காப்பீடு சேமிப்பா?

நம் ஊரில் காப்பீட்டையும் சேமிப்பையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்கிறோம். காப்பீடு என்பது நம் பாதுகாப்பிற்காக செய்யப்படுவது. இதில் கிடைக்கும் வட்டி என்பது 4-5 சதவீதத்திற்கு மேல் இருக்காது. காரணம், காப்பீட்டில் முதல் ஆண்டு நீங்கள் செலுத்தும் தொகையில் 50 சதவீதம் அளவுக்கு கமிஷன் மற்றும் அலுவலகச் செலவில் போய்விடும்.

மீதமுள்ள தொகைதான் முதலீடு செய்யப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 20 சதவீதம் அளவுக்கு கமிஷன், நிர்வாகச் செலவுகளில் போய்விட, 80 சதவீத அளவுக்கு முதலீடு செய்வார்கள். ஆகவே, 80 சதவீத அளவுக்கு முதலீடு செய்து, 100 சதவீத தொகைக்கு வட்டி கொடுக்கும்போது அது மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், காப்பீட்டை ஒரு சேமிப்பாக பார்க்கக்கூடாது.

வங்கியில் பணத்தைப் போட்டுவைத்து, அதிலிருந்து வரும் வட்டியை செலவழிக்கலாம் என நினைத்தால் அது இழப்புதான். காரணம், வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டி 4-5 சதவீதம்தான் இருக்கும். ஆனால், பணவீக்கம் நிச்சயம் அதைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, நிச்சயமாக இழப்புதான் ஏற்படும். அதாவது, ஒருவர் வங்கியில் பணத்தைப் போட்டுவைத்திருந்தால் கிடைக்கும் வட்டித் தொகையைவிட, அரிசியை வாங்கிவைத்திருந்தால் கிடைக்கும் லாபம்கூட அதிகமாக இருக்கும்.

ஆகவே, காப்பீடு, வங்கிகளில் முதலீடு செய்வது என்பது இழப்பையே தரும். அப்படியானால், எதில்தான் முதலீடு செய்யலாம்?

தங்கம். நிச்சயமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்கம் கிராம் 3,200 ரூபாய்க்கு விற்றபோது முதலீடு செய்யச் சொன்னேன். அது ஐயாயிரத்தைத் தொட்டு, தற்போது குறைந்திருக்கிறது. இருந்தாலும் முதலீடு செய்தால் லாபம்தான். தங்கம் எப்போதுமே ஆபத்பாந்தவன்தான்.

அவசர காலகட்டத்தில் வங்கிகள் கடன் கொடுக்காதபோது, தங்கத்தை அடமானம் வைத்து நாம் சமாளிக்க முடியும். ஒருவர் தங்கத்தை சுமார் 400 கிராம் அளவுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இரண்டாண்டுகள் வேலை இல்லாவிட்டால்கூட சமாளிக்க முடியும்.

அடுத்ததாக, 8-9 சதவீதம் அளவுக்கு லாபம் தரக்கூடிய கடன் நிதிகளில் (debt fund) முதலீடு செய்யலாம். இதில் ஆலோசனை வழங்க பல நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனையைப் பெற்று இதில் முதலீடு செய்யலாம். இதுதவிர, 9 சதவீதம் அளவுக்கு லாபம் தரக்கூடிய பாண்டுகளைத் (bond) தேர்வுசெய்து முதலீடு செய்யலாம். அரசின் பாண்டுகளில் 6.5 சதவீதத்திற்கு மேல் தருவதில்லை. ஆனால், பணவீக்கம் அதைவிட அதிகம் என்பதால், இதில் முதலீடு செய்வதில் லாபமில்லை.

அடுத்ததாக பங்குச் சந்தை. ஆனால், இதில் நீண்ட கால முதலீடுகளைச் செய்யவேண்டும். இதில் உடனடியாகப் பணக்காரராகிவிட வேண்டுமென எதிர்பார்க்கக்கூடாது. Niftyயில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளைத் தேர்வுசெய்து, அவற்றின் விலை மிகக் குறைவாக இருக்கும்போது முதலீடுசெய்யலாம்.

நீங்கள் வாங்கிய பங்குகளின் விலை அடுத்த நாளே குறையலாம். ஆனால், பதறத் தேவையில்லை. அவற்றை நீண்ட கால முதலீடாகவே அணுக வேண்டும். நிச்சயமாக பத்து, பதினைந்தாண்டுகளில் அவை நல்ல பலனை அளிக்கும்.

ஆகவே, இரண்டு விதிகள்தான். ஒன்று, வருவாயில் 30 சதவீதத்தை சேமிக்க வேண்டும். இரண்டு, கடன் நிதி, தங்கம், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்துகொண்டே போக வேண்டும். அப்படிச் செய்தால், நிச்சயமாக பாதுகாப்பாக இருக்கலாம்.

தவிர, அநாவசிய செலவுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக திருமணங்களை ஆடம்பரமாகச் செய்யக்கூடாது. அதிலும் கடன்வாங்கி நிச்சயமாக ஆடம்பரத் திருமணங்களைச் செய்யவேகூடாது.

மிகக் குறைந்த வருவாயைக் கொண்டவர்கள் எப்படிச் சேமிப்பது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. நிச்சயமாக சேமித்துத்தான் ஆக வேண்டும். நம்முடைய தேவையை குறைத்துக்கொள்ள வேண்டும். சேமிக்க முடியாதவர்கள் யாரும்கிடையாது என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :