இந்தியாவின் மிகப்பெரிய குப்பை மலைகள்: நரேந்திர மோதியின் அறிவிப்பால் கரையுமா நீடிக்குமா?

பட மூலாதாரம், AFP
இந்திய நகரங்களில் காணப்படும் "குப்பை மலைகள்", விரைவில் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்டு மாற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோதி இம்மாத தொடக்கத்தில் உறுதியளித்தார்.
எழுத்தாளர் செளமியா ராய் நாட்டின் பழமையான மற்றும் மிக உயரமான, மும்பையில் உள்ள குப்பை மலையிலிருந்து (சுமார் 18 மாடிகள் உயரம் கொண்டது) செய்தி வழங்குகிறார்.
மும்பையில் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையான குப்பை மலையின் மேல் நின்று, தினமும் காலை குப்பை லாரிகள் வந்து குப்பைகளை சுத்தம் செய்து, தாங்கள் பயணிக்கும் பாதையை வகுத்துக் கொடுக்கும் என காத்திருக்கிறார் ஃபர்ஹா ஷேக்.
தியோனர் நகர்புறத்தில் இருக்கும் அந்த குப்பை மலைகளில், குப்பைகளைச் சேகரிக்கும் 19 வயதான ஃபர்ஹா, தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் துப்புரவு செய்து வருகிறார்.
அவர் குப்பைகளிலிருந்து வழக்கமாக பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி, வொயர் போன்றவைகளை சேகரித்து நகரத்தின் வளமான வளர்ந்து வரும் கழிவு சந்தைகளில் விற்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் உடைந்த செல்போன்களை தேடுகிறார்.
சில வாரங்களுக்கு ஒருமுறை, ஃபர்ஹா குப்பைத்தொட்டியில் இருந்து ஒரு செயல்படாத மொபைல் போனைக் காண்கிறார். அவர் தன் சொற்ப சேமிப்பைப் பயன்படுத்தி, அந்த செல்போனை சரி செய்கிறார். அது சரியான பின், அவர் தன் மாலை நேரத்தை திரைப்படங்களைப் பார்ப்பதிலும், வீடியோ கேம் விளையாடுவதிலும், குறுஞ்செய்தி அனுப்புவதிலும், நண்பர்களை அழைத்துப் பேசுவதிலும் செலவிடுகிறார்.

பட மூலாதாரம், SAUMYA ROY
செல்பேசி தனது செயல்பாட்டை நிறுத்தும்போது, வெளியுலகத்துடனான ஃபர்ஹாவின் தொடர்பு மீண்டும் துண்டிக்கப்படுகிறது. அவர் நீண்ட நேரம் வேலை செய்யத் தொடங்குகிறார், நகரத்தின் குப்பைகளைச் சேகரித்து மறுவிற்பனை செய்கிறார். அப்படியே மற்றொரு செயல்படாத தொலைபேசியைத் தேடுகிறார்.
16 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகளால் தியோனரின் குப்பை மலைகள் உருவாகியுள்ளன. அவற்றில் எட்டு மலைகள் 300 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது - அவை இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையானவை என்று கூறப்படுகிறது.
கழிவுகள் 120 அடி (36.5 மீ) வரை குவிந்து உயர்ந்துள்ளன. கடல், மலைகளின் வெளிப்புற விளிம்பை உருவாக்குகிறது மற்றும் உறுதியான குப்பைக் குவியல்களின் மீது சேரிகள் கட்டப்பட்டுள்ளன.
சிதைவுறும் கழிவுகள் மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் மோனாக்சைட் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டில், இந்த குப்பை மலைகளில் தீ பற்றியது. பல மாதங்களாக எரிந்தது. இந்த தீ, மும்பையின் பெரும்பகுதியில் புகையைக் கக்கியது.
2020 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த 'அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்' (CSE) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில், மும்பையில் இருப்பது போல, இந்தியா முழுவதும் 3,159 குப்பை மலைகளில் 800 மில்லியன் டன்னுக்கும் அதிகமான குப்பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பையில், தியோனார் குப்பை மைதானத்தை மூட 26 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது, ஆனால் அங்கு கழிவுகளை கொட்டுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்தியாவில் உள்ள குப்பை மலைகள் நீண்ட காலமாக அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தொந்தரவு செய்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதியன்று, பிரதமர் மோதி ஒரு தேசிய தூய்மைத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட $13 பில்லியன் டாலரை அறிவித்தார். இதில் தியோனாரில் உள்ள திறந்தவெளி குப்பைத் தொட்டிகளை படிப்படியாக மாற்றுவதற்கு பல கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதும் இதில் அடங்கும்.
இது தொடர்பாக நிபுணர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். "இது சிறிய நகரங்களில் செய்யப்பட்டிருந்தாலும், இந்த அளவுக்கு பெரிய அளவில் கழிவு மலைகளுக்கு ஒரு தீர்வை வழங்குவது கடினம்" என்கிறார் சிஎஸ்இ அமைப்பின் துணை திட்ட மேலாளர் சித்தார்த் கன்ஷ்யாம் சிங்.
"இது ஒரு பிரச்சனை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். நாம் மும்பை அல்லது டெல்லி போன்ற பெரு நகரங்களில் வாழ வேண்டும் என்றால், இந்த குப்பை மலைகளும் அதனோடு வரும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்" என்கிறார் கழிவுகளை குறைக்க வலியுறுத்தும் உலகளாவிய கூட்டணி அமைப்பிற்கான நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தர்மேஷ் ஷா.
2000 ஆம் ஆண்டிலிருந்து, நகராட்சிகளையே கழிவுகளை நிர்வகிக்க இந்தியா சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால் பல மாநிலங்களும் அந்த விதிகளை பின்பற்றவில்லை, மேலும் போதுமான கழிவு மேலாண்மை மையங்களும் இல்லை.
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு தலைநகரமான மும்பையில் சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அப்பேர்பட்ட மாபெரும் நகரத்திலேயே ஒரேயொரு ஆலை மட்டுமே உள்ளது. தியோனாரில் கழிவைக் கொண்டு எரிசக்தி தயாரிக்கும் திட்டங்களும் உள்ளன.
இந்த திட்டம் புதிய, பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்ப்பதாக மோதி கூறினார். ஆனால் இந்த வேலை வாய்ப்புகள் வாழ்நாள் முழுவதும் குப்பைகளை சேகரம் செய்து வரும் ஃபர்ஹா ஷேக் போன்றவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
2016 ஆம் ஆண்டு குப்பை மலைகளில் தீ விபத்து ஏற்பட்ட பின், குப்பை மலைகளை அணுகுவது அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிட்டது. குப்பை சேகரிப்பவர்களை உள்ளே நுழைந்து தீ எரியவிடாமல் தடுக்க நகராட்சி பாதுகாப்பை அதிகரித்துள்ளது. நெருப்பு இலகுவான குப்பைகளை உருக்கி, அதிக விலை கொடுக்கும் உலோகத்தை வெளிக்கொண்டு வருகின்றன.
குப்பைகளை சேகரிக்க உள்ளே நுழைபவர்கள் அடிக்கடி தடுத்து நிறுத்தி துன்புறுத்தப்படுகிறார்கள், திருப்பி அனுப்பப்படுகிறார்கள். சிலர் காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள் அல்லது பகல் நேரத்தில் பாதுகாப்பு ரோந்துப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பே உள்ளே நுழைந்து குப்பைகளை சேகரித்துவிடுகிறார்கள்.
எனவே, தியோனார் மைதானத்தில் குப்பைகள் பிரிக்கப்படுவது குறைந்துள்ளது. அதற்கு பதிலாக, நகரத்திலேயே நிறைய கழிவுகள் பிரிக்கப்படுகின்றன, மேலும் தியோனருக்கு குப்பைகள் வருவது காலப்போக்கில் குறைந்துவிட்டது.
கடந்த பல மாதங்களாக ஃபர்ஹாவுக்கு தொலைபேசிகள் எதுவும் கிடைக்கவில்லை. தியோனர் மைதானத்தில் வேலைக்குச் செல்ல ஒவ்வொரு நாளும் அவர் குறைந்தபட்சம் 50 ரூபாய் காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இதை மீட்க, கடந்த ஆண்டு நகரின் கொரோனா மருத்துவமனை வார்டுகளிலிருந்து குப்பைகளை எடுக்கத் தொடங்கினார்.
"தீங்கு விளைவிக்கும்" கொரோனா மருத்துவ கழிவுகளை எடுக்க வேண்டாமென அவருடைய குடும்பம் அவரிடம் கூறியது. எனவே, அவர் மீண்டும் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்கத் தொடங்கினார்.
நகரம் புதிய குப்பைகளை அனுப்புகிறது, , மலைகள் அதற்கு இடமளிக்க வேண்டும் மற்றும் அதை குப்பைகளைச் சேகரிக்கும் நபர்கள் தேடி எடுத்து சேகரித்து மறுவிற்பனை செய்ய வேண்டும்.
"நோய் எங்களைக் கொல்லவில்லை என்றால், பசி எங்களைக் கொன்ருவிடும்" என்று ஃபர்ஹா ஷேக் கூறுகிறார்.
செளமியா ராய், மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். இவர் சமீபத்தில் மவுண்டன் டேல்ஸ்: லவ் அண்ட் லாஸ் இன் தி முனிசிபாலிட்டி ஆஃப் காஸ்ட்அவே பிலாங்கிங்ஸ் என்கிற புத்தகத்தை எழுதியவர்.
பிற செய்திகள்:
- சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி
- வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை - எப்படியிருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்?
- இந்திய கணக்கெடுப்பில் காணாமல் போன 1500 மொழிகள் எங்கே?
- வசூலில் உலகின் நம்பர் 1 திரைப்படம் எது தெரியுமா?
- கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு: 9 பேரை காணவில்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












