You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜம்மு & காஷ்மீரில் 5 நாட்களில் 7 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் – தொடரும் பதற்றம்
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பள்ளிக்குள் சென்று இரு ஆசிரியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஈத்கர் பகுதியில் வியாழனன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
முன்னதாக புதன்கிழமையன்று சாலையோர வியாபாரி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகரில் உள்ள லால் பசாரில், மதினா செளக் என்ற இடத்தில் விரேந்தர் பஸ்வான் என்ற அந்த வியாபாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். விரேந்தர் பஸ்வான் பிகாரை சேர்ந்தவர்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய சுடப்பட்ட ஆசிரியர்களின் உறவினர்களில் ஒருவர், தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
துப்பாக்கியுடன் ஸ்ரீநகரின் ஈத்கா பகுதியில் உள்ள ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளிக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் மிக குறைந்த தூரத்தில் இரு ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
சுடப்பட்ட இருவருமே அந்த பகுதியின் சிறுபான்மை மக்களான சீக்கிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.
"துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்தவர்கள் ஆசிரியர்களின் அடையாள அட்டையை காண்பிக்க கோரினர். பின் அவர்கள் இருவரையும் சுட்டனர். அதில் ஒருவர் சீக்கியர் மற்றொருவர் இந்து மதத்தை சார்ந்தவர்," என அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் சுடப்பட்டபோது பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருந்ததால் அங்கு மாணவர்கள் யாரும் இல்லை.
கடந்த ஐந்து நாட்களில் பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த சமீபத்திய கொலைகளுக்கு டிஆர்எஃப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக காஷ்மீர் முதன்மை காவல்துறை அதிகாரி தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று 68 வயது மாக்கன் லால் பிந்த்ரூ என்ற முதியவர் சுடப்பட்டார். அவர் ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பார்க் என்ற இடத்தில் பல வருடங்களாக பிரபலமான மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
பிந்த்ரூ காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்.பிந்த்ரூ சுடப்பட்ட ஒருசில நிமிடங்களில்தான் பிகாரை சேர்ந்த சாலையோர வியாபாரி பஸ்வானும் சுடப்பட்டார்.
கிட்டதட்ட அதே நேரத்தில் பந்திபோரா என்ற இடத்தில் முகமது ஷஃபி லோனே என்பவர் சுடப்பட்டார்.
பிந்த்ரூ கொல்லப்பட்டதை கண்டித்து காஷ்மீர் பண்டிட் அமைப்பினர் பலர் போராட்டம் நடத்தினர்.
அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மஜித் அகமது கோஜ்ரி மற்றும் முகமது ஷஃபி தர் என்ற இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் ஆயுதக் குழுக்களின் கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோதும் காஷ்மீரில் தொடர்ந்து வசித்தவர் பிந்த்ரூ என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
"கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோதுகூட பிந்த்ரூ தனது மருந்தகத்தை மூடவில்லை என நான் கேட்டிருக்கிறேன்" என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகளால் காஷ்மீர் பகுதில் பதற்றநிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்