You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி ஜுன்ஜுன்வாலா முன்பு கைகட்டி நின்ற படம் வைரல் - 10 நிமிடங்களில் ரூ. 914 கோடி லாபம் - உண்மை என்ன? #FACTCHECK
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் தன்னை சந்திக்க வந்த பிரபல பங்கு வர்த்தகரும் தொழில் அதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முன்பு கைகட்டி நிற்கும் படத்தை நெட்டிசன்கள் இன்டர்நெட்டில் வேகமாக பகிர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள். மும்பை பங்குச்சந்தையில் இன்று அந்த தொழிலதிபரும் அவரது மனைவியும் வைத்திருந்த டைட்டன் பங்குகள் விலை உயர்வு மூலம் ரூ. 900 கோடிக்கும் மேல் லாபம் அடைந்துள்ளதாகவும் தகவல் உள்ளது. உண்மையில் என்ன நடந்தது?
இந்திய பங்கு வர்த்தக முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தமது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அக்டோபர் 5ஆம் தேதி சந்தித்தார். இந்த தம்பதி தன்னை சந்தித்துச் சென்றபோது எடுக்கப்பட்ட படம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
"நிகரில்லாத ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை சந்தித்ததில் மகிழ்ச்சி..... இந்தியா பற்றிய கலகலப்பான, ஆழமான, மிக உற்சாகமான சந்திப்பாக அது இருந்தது," என பொருள்படும் இடுகையை அந்த புகைப்படத்துடன் பிரதமர் மோதி பகிர்ந்திருந்தார்.
அந்த படத்தில் மோதியின் வலது புறமாக ரேகா ஜுன்ஜுன்வாலாவும், இடதுபுறமாக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நின்று கொண்டு காட்சி கொடுத்திருந்தனர்.
ஆனால், அந்த படம் வெளியான அதே நாளில் சமூக ஊடகங்களில் மற்றொரு படம் வேகமாக பகிரப்பட்டது.
அதில், பிரதமர் மோதி நின்ற நிலையில், தமது இரு கைகளையும் பிடித்தபடி இருப்பது போலவும், அவரது அருகே ரேகா ஜுன்ஜுன்வாலா நின்றிருக்க, அவர்களின் எதிரே ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இருந்தது. அதை பார்க்கும்போது ஜுன்ஜுனாவாலா ஏதோ பேச, அதை பிரதமர் மோதி கேட்பது போல இருந்தது.
நரேந்திர மோதியின் ஆதரவாளர்கள் இந்த படத்தை பகிர்ந்து, 'பிரதமரின் தாழ்மையான பண்பு' என்று புகழ்ந்தனர். பாஜகவைச் சேர்ந்த அகில இந்திய இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.பி. முருகானந்தம், "சிறந்த ஆளுகை" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த படத்தை கடுமையாக விமர்சித்த நெட்டிசன்களில் பெரும்பாலானவர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் மற்றவர்கள் செயல்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் அல்லது வேறு கட்சியினராக இருந்தனர்.
இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ், "இந்தியாவின் மிகப்பெரிய அரசு சொத்துகளின் வர்த்தகர், இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தகரை சந்தித்தார்," என்று தலைப்பிட்ட இடுகையை பகிர்ந்திருந்தார்.
அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வினய் குமார் டோக்கானியா, "சக்கர நாற்காலியில் இருந்த ஒருவர், மோதியை பார்த்த உடனேயே தனது சொந்த காலில் நிற்கிறார் என்று சொல்ல வருகிறீர்களா?" என்று ஓர் இடுகையை பகிர்ந்திருந்தார்.
ட்விட்டர் பயனர் ஒருவர், "ஜுன்ஜுன்வாலா இத்தனை சக்தி வாய்ந்தவர் என்பது இப்போதுதான் தெரியும். இப்போது எனக்கு புரிகிறது... இந்திய பொருளாதாரம் மந்தமாக உள்ள வேளையில் பங்குச்சந்தை மட்டும் எப்படி புதிய சாதனையை படைத்து வருகிறது என்று," என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் பிரமுகரான சஞ்சய் நிரூபம், "எதிர்காலத்தில் ஹர்ஷத் மேத்தாவாகவோ கேத்தன் பதக் ஆகவோ ஜுன்ஜுன்வாலா வரலாம். அதை சட்டமும் காலமும் முடிவு செய்யும். ஆனால், உள்ளூரவே நடக்கும் பங்கு வர்த்தக உலகுக்கு "ஒரேயொரு" ஜுன்ஜுன்வாலா என அழைத்து அவரது பாவத்தை போக்கியிருக்கிறார் பிரதமர் மோதி. அநேகமாக மெகுல் சோக்சி (பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இந்திய வங்கிகளிடம் கடனுதவி பெற்றுக் கொண்டு ஆன்டிகுவா நாட்டில் கைதாகி வழக்கை எதிர்கொண்டிருப்பவர்) தருணம் மீண்டும் வரலாம் என அவர்கள் காத்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.
ஒரு பங்கு வர்த்தக முதலீட்டாளர் முன்பு இந்திய பிரதமர் கைகட்டி நிற்பதா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பணம் பேசுகிறது என்று ஒரு ட்விட்டர் பயனர் இடுகையை பதிவிட்டிருந்தார்.
ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவர், பெரும் தொழிலதிபர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, இப்படி கைகட்டி பவ்வியமாக நின்று படத்துக்கு போஸ் கொடுக்கலாமா என்று பல ட்விட்டர் பயனர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
இந்த படத்தின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது. அப்போது, வைரலாகி வரும் இந்த படம் பிரதமரை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நிறுவனம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படியே இந்த சந்திப்புக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கிக் கொடுத்ததையும் அவரது அலுவலக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அக்டோபர் 5ஆம் தேதி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமது அலுவலக பிரதிநிதிகளுடன் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சந்தித்த புகைப்படத்தை நிர்மலா சீதாராமனின் அலுவலகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை பிபிசி தமிழ் அறிந்தது. அதில் வித்தியாசமான ஷூவை அணிந்தபடி சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு ஜுன்ஜுன்வாலா நிர்மலாவிடம் பேசுவது போன்ற காட்சி இருந்தது.
பிரதமர் வெளியிட்ட படத்தில் எழுந்து நின்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தமது மனைவியுடன் புகைப்படத்துக்கு காட்சி கொடுத்த நிலையில், நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் அவர் சக்கர நாற்காலியுடன் அமர்ந்துள்ளது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "ஜுன்ஜுன்வாலா குடும்பமும் பிரதமர் மோதியும் முன்பே நன்றாக அறிமுகமானவர்கள். அவர் கடந்த சில ஆண்டுகளாக உயர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கொரோனாவாலும் அவர் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். நீரிழிவு நோய் பின்னணியிலேயே அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஷூவை அணிந்து வந்தார்.. பிரதமரை ஜுன்ஜுன்வாலா சந்திக்க வந்தபோது, அவராகவே சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பார்வையாளர் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது பிரதமர் அங்கு வந்தபோது அவர் அணிந்திருந்த ஷூவை பார்த்து விட்டு எழுந்து நிற்க வேண்டாம் என கூறி நலம் விசாரித்தார். ஒரு சில நிமிடங்கள் நடந்த உரையாடலுக்குப் பிறகு மூன்று பேரும் அமர்ந்து பேசினர். பின்னர் அவர்கள் புகைப்படத்துக்கு எழுந்து நின்று காட்சி கொடுத்தனர். அந்த படத்தைத்தான் பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்," என்று தெரிவித்தனர்.
மறுபுறம் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் அவரை சந்தித்தபோது சக்கர நாற்காலியில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது அணியைச் சேர்ந்த இருவர் பேசுவது போல எடுக்கப்பட்ட படம், நிதித்துறை அலுவலகத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட புகைப்பட கலைஞர் மூலம் எடுக்கப்பட்டது என்று நிதித்துறைக்கான இந்திய பத்திரிகை தகவல் துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மருத்துவ காரணங்களுக்காக சக்கர நாற்காலியில் கடந்த சில நாட்களாக அமர்ந்து தமது அலுவலக நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதும், பிரதமர் அலுவலகத்திலும் அவர் சக்கர நாற்காலியிலேயே அமர்ந்தபடி பேசியதும் யதார்த்தமாக நடந்த நிகழ்வுகள் என்பது உறுதியாகியுள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த மாதம் தமது குடும்பத்தின் தனியார் நிகழ்ச்சியொன்றில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடும் காணொளியும் சமூக ஊடகங்களில் காண முடிகிறது. இதன் மூலம் அவர் சக்கர நாற்காலியிலேயே அன்றாட நிகழ்வுகளில் பங்கெடுப்பதும் உறுதியாகியிருக்கிறது. அந்த காணொளியிலும் அவர் தமது பிரத்யேக ஷூவை அணிந்திருக்கிறார்.
10 நிமிடங்களில் ரூ. 914 கோடி சம்பாதித்த ஜுன்ஜுன்வாலா
ஆனால், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா - பிரதமர் சந்திப்பு நிகழ்வைத் தொடர்ந்து அவர் வைத்திருக்கும் 3,30,10,395 டைட்டன் கம்பெனியின் பங்குகள் மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 9.32 சதவீதம் அதிகரித்து, இதே நிறுவனத்தில் அவரது மனைவி ரேகாவுக்கு 96,40,575 பங்குகள் உள்ளன. இவர்கள் இருவரின் பங்குகளின் மொத்த எண்ணிக்கை 4,26,50,970. அந்த வகையில், ₹214.35 x 4,26,50,970 = ₹914 crore என்ற அளவில் இந்த தம்பதியின் டைட்டன் பங்குகள் மதிப்பு கூடியிருக்கிறது.
இந்த திடீர் பங்குகள் மதிப்பு உயர்வு காரணமாக, டைட்டன் நிறுவனத்தின் முதலீடு மதிப்பு, ரூ. 2,08,026.05 கோடி ஆக மும்பை பங்குச்சந்தையில் உயர்ந்தது. இதே நாளின் முதல் பகுதி வர்த்தகத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் மதிப்பு ரூபாய் இரண்டு லட்சம் கோடியை கடந்தது. அந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 14,19,973.35 கோடியாகும்.
யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுனுவாலா?
இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராகவும் பங்கு வர்த்தகராகவும் அறியப்படுபவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (61). பம்பாய் மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை வருமான வரித்துறையில் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிடென்ஹாம் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த ஜுன்ஜுன்வாலா, இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் பட்டயக் கணக்காளர் மேல்படிப்பு முடித்து விட்டு பங்கு வர்த்தக முதலீட்டில் அக்கறை செலுத்தினார். தற்போது இவரது சொத்து மதிப்பு 5.7 பில்லியன் டாலர்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆம்டெக் நிறுவனம், ஹங்காமா டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தலைவராகவும், பிரைம் ஃபோகஸ், ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீஸ், பிராஜ் இண்டஸ்ட்ரீஸ், ப்ரொவோக் இந்தியா நிறுவனம், கான்கார்ட் பயோடெக் நிறுவனம், இன்னோவாசிந்த் டெக்னாலஜீஸ், மிட் டே மல்டிமீடியா, நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், வைஸ்ராய் ஹோட்டல்ஸ், டாப்ஸ் செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்களின் வாரிய இயக்குநராகவும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருக்கிறார்.
இந்திய பங்குச்சந்தை உலகில் இவர் வாரென் பஃப்பெட் (அமெரிக்காவின் 91 வயது பிரபல பங்கு வர்த்தக முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபர்) என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.
பிற செய்திகள்:
- பிரியங்கா காந்தி பிபிசிக்கு பேட்டி: லக்கிம்பூர் சம்பவத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறதா?
- தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆரின் கருத்துகள் திமுகவுக்கு ஆபத்தாக மாறுமா?
- மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை தராதது ஏன்?
- பெண்ணின் இதயத்தை துளைத்த தோட்டா - ஆறு மாதங்களுக்குப் பிறகு மீட்ட மருத்துவர்
- உங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்