You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் காந்தி படுகொலையும் போலீஸ் தொப்பியும் - ஓய்வுபெறும் நாளில் கலங்கவைத்த பிரதீப் வி பிலிப் ஐ.பி.எஸ்
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வுபெறும் நாளில் ஐ.பி.எஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் வைத்த கோரிக்கை சற்று வித்தியாசமானது. ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின் சாட்சியாக இருக்கும் தனது போலீஸ் தொப்பியை அணிய வேண்டும் என்பதுதான் அது.
நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் ஓய்வுபெறும் நாளில் அந்தத் தொப்பியை அவரால் அணிய முடியவில்லை. ஏன்?
இந்திய காவல் பணியில் 1987ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் பிரதீப் வி பிலிப். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப், தமிழ்நாடு காவல்துறையில் ஏ.எஸ்.பி.யாக இணைந்து படிப்படியாக உயர்ந்து டி.ஜி.பி. ஆனார்.
போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு எனப் பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டியவர் இவர். தனது பணிக்காலத்தில் `ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' என்ற காவல் துறை நண்பர்கள் அமைப்பை ஏற்படுத்தினார் இவர். இந்தப் பணியில் சமூக அக்கறையுள்ள இளைஞர்களை ஈடுபடுத்தினார். மாநில அரசின் விருது, குடியரசுத் தலைவர் பதக்கம் உள்பட ஏராளமான விருதுகளையும் பிரதீப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய காவல் பணியில் இருந்து கடந்த 1ஆம் தேதி பிரதீப் பிலிப் ஓய்வுபெற்றார். இதையொட்டி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பிரதீப் வி பிலிப் பங்கேற்றார்.
அப்போது பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு, ` பணிக்காலத்தில் கடுஞ்சொல் பேசாத அதிகாரியாக பிரதீப் இருக்கிறார். காவல் துறையினருக்கு சிந்தனை பயிற்சி அளித்ததில் அவரது பங்கு மிகப் பெரியது" என்றார். அடுத்துப் பேசிய பிரதீப் வி பிலிப், ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது நடந்தவற்றை விளக்கினார்.
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது அவருக்கு என விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தின் அருகில் நின்றிருந்தேன். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. நான் காற்றில் வீசப்பட்டதை உணர்ந்தேன். அப்போது என் முகம் முழுவதும் ரத்தமாக இருந்தது. தாகமாக இருக்கிறது எனக் கூறியபோது ஒரு சாதாரண மனிதர் எனக்குத் தண்ணீர் தந்தார். எனது நம்பிக்கையின் மிக முக்கியமான வேராக அந்தச் சம்பவம் இருந்தது" என்றார். தொடர்ந்து பணிக்காலத்தில் தான் முன்னெடுத்த நிகழ்வுகளைப் பற்றியும் விவரித்தார்.
முன்னதாக, பணிக்காலத்தின் கடைசி நாளில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது தான் அணிந்திருந்த தொப்பியையும் பேட்ஜையும் அணிய வேண்டும் என விரும்பினார். இதுதொடர்பாக தனது நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தவர், அந்தத் தொப்பியையும் பேட்ஜையும் நிரந்தரமாக வைத்துக் கொள்ள அனுமதியளிக்குமாறு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முடிவில், ஒரு மாத காலம் அந்தத் தொப்பியையும் பேட்ஜையும் வைத்துக் கொள்ள நீதிமன்றம் இடைக்கால அனுமதியளித்தது. இதற்காக ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகையையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் பிரதீப் வி பிலிப் மிகவும் உற்சாகமடைந்தார்.
இதுதொடர்பாக, பிரதீப் வி பிலிப்பிடம் பேசுவதற்காக தொடர்பு கொண்டோம். அவர் தொடர் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, பிரதீப்பின் வழக்கறிஞர் சஞ்சய் பின்டோவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "1991 மே மாதம் 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் நடந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாக பிரதீப் பிலிப் இருந்தார். அவரது பணிக்காலத்தின் தொடக்கத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தார். 21 நாள்கள் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்றார். தான் உயிர் பிழைத்ததையே பெரிய விஷயமாக அவர் பார்க்கிறார். அதன் அடையாளமான தொப்பி, பேட்ஜை பணிக்காலத்தின் நிறைவு நாளில் அணிய வேண்டும் என ஆசைப்பட்டார்" என்கிறார்.
மேலும், "இப்போதும் பிரதீப்பின் உடலில் வெடிகுண்டு சிதறல் துணுக்குகள் உள்ளன. அவரது கையைத் தொட்டுப் பார்த்தால் அதனை உணரலாம். அந்தச் சம்பவத்தை தனது வாழ்நாளில் சென்டிமென்ட்டான ஒன்றாக பார்க்கிறார். ஏனென்றால், ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் நடந்த அதே 91 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. பத்து நாள்களுக்கு முன்பு தந்தையாக பதவி உயர்வு பெற்றவருக்கு பெரும் சோதனையாக இந்த வெடிகுண்டு சம்பவம் அமைந்திருந்தது" என்கிறார்.
"நீதிமன்றம் வாயிலாகச் சென்று தொப்பியை பெறுவதற்கு இத்தனை ஆண்டுகாலம் ஏன் காத்திருக்க வேண்டும்?" என்றோம். `` ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்தச் சம்பவம் நடந்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த வழக்கின் இறுதி உத்தரவு 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்தனை ஆண்டு காலமும் அவர் காத்திருந்தார். பணி நிறைவின்போது அந்த பேட்ஜையும் தொப்பியையும் அணிய வேண்டும் என நினைத்தார். இதற்காக கடைசி நேரத்தில் என்னைத் தொடர்பு கொண்டு, ` நீதிமன்றத்தின் அனுமதியோடு இதனைப் பெற முடியுமா?' எனக் கேட்டார்.
நாங்களும், இதனை நிரந்தரமாக வைத்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரினோம். அந்த மனுவில், "எப்போது தேவைப்பட்டாலும் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், `இந்த ஆவணங்கள் தேவைப்படும்' என அரசுத் தரப்பில் தெரிவித்ததால், ஒரு மாத காலத்துக்கு அவற்றை வைத்துக் கொள்ளவும் ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகை தந்து அவற்றைக் கொண்டு செல்லவும் அனுமதி கிடைத்தது.
வரும் 28 ஆம் தேதிக்குள் அந்தத் தொப்பியையும் பேட்ஜையும் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றம் அனுமதி கொடுத்ததைக் கேட்டதும் பிரதீப் பிலிப் அழுதுவிட்டார். அவருக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன" என்றார்.
``பிரிவு உபசார விழாவில் அந்தத் தொப்பியை அவர் அணியவில்லையே ஏன்?" என்றோம். "அது ஏ.எஸ்.பி பதவிக்கான தொப்பி. பதவி ஓய்வு பெறும்போது டி.ஜி.பி அந்தஸ்தில் அவர் இருந்தார். காவல் யூனிஃபார்மும் மாறிவிட்டது. அதனால்தான் அணியவில்லை. ஆனால், அவரது நினைவுகளில் அந்தத் தொப்பியும் பேட்ஜும் எப்போதும் இருக்கும்" என்றார்.
பிற செய்திகள்:
- ஒரு நபர் வயிற்றுக்குள் இருந்து 1 கிலோ ஆணி, ஸ்குரூ, நெட்டுகள் அகற்றம்
- தைவான் "வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன படை விமானங்கள் நுழைந்ததாக" புகார்
- தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் குறிவைக்கப்படுகிறதா விசிக?
- கிருஷ்ணர் படங்களை வரையும் முஸ்லிம் பெண்
- 100 கோடி ஆண்டுகளை காணவில்லை - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்