இந்திய வரலாறு: மொகலாய ஆளுகையின் அடிமையாக இந்தியா இருந்ததாக குறிப்பிடுவது சரியா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவில் பைடன் குடும்பப் பெயர் தொடர்பான சில ஆவணங்களைக் கொண்டு வந்ததாகக் கூறினார்.
இதற்கு, பைடன் சிரித்துக்கொண்டே நாம் உறவினர்களா? என்று கேட்டார். பதிலுக்குப் பிரதமர் மோதி சிரித்துக்கொண்டே "ஆம்" என்றார்.
இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு செய்தியை ட்வீட் செய்த பாகிஸ்தானின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஹமீத் மிர், "நரேந்திர மோதி பைடனின் குடும்ப உறவுகளின் ஆவணங்களை அவரிடமே ஒப்படைத்தது நல்லது. அதே போல், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் குடும்ப உறவுகளையும் கண்டுபிடித்து இந்திய பிரதமர் பெருமைப்படலாம்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்ற மற்றொரு சம்பவம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பானது.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், துருக்கி அந்நாட்டு அதிபர் எர்துவான் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் "துருக்கியர்கள் 600 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர்" என்று பெருமையுடன் கூறினார்.
அதற்கு இம்ரான் கான், "உங்கள் வருகையால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால் பல நூற்றாண்டுகளாக துருக்கியுடன் எங்களுக்கு உறவு உள்ளது என்பதை எங்கள் சமூகம் புரிந்துகொள்கிறது. துருக்கியர்கள் 600 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர்.
இந்தியாவில் பைடன் என்ற குடும்பப்பெயரைப் பற்றிக் கூறிய அதிபர் பைடன், "ஜார்ஜ் பைடன் என்ற ஒரு நபர் கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் கேப்டனாக இருந்ததாக நான் அறிந்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த அதே கிழக்கிந்திய கம்பெனி பற்றித் தான் அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம், இம்ரான் கான் இடைக்கால முஸ்லிம் ஆட்சியாளர்களை 'துருக்கியர்கள்' என்று குறிப்பிட்டதுடன், பெருமையுடன் அவர்கள் ஆட்சி செய்ததாகவும் அதனால் தங்கள் நாடு மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
போலி பெருமையும் சொந்தம் கொண்டாடலும்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பாகிஸ்தான் வரலாற்றாசிரியர் முபாரக் அலி பிபிசியிடம் கூறுகையில், "இந்திய தலைவர்கள் வெள்ளையர்கள் மீது பாசம் காட்டுவதையும், இடைக்கால முஸ்லிம் ஆட்சியாளர்களை பாகிஸ்தானியர்கள் மற்றும் முஸ்லிம்களில் ஒரு பகுதியினராகக் காட்டும் பெருமையும் கவலையளிப்பதாக உள்ளது," என்று குறிப்பிடுகிறார்.
"நாங்கள் இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்தோம் என்று ஒரு முஸ்லிம் கூறும்போது, முஸ்லிம்கள் தங்களை இந்த மண்ணின் மைந்தர்களாகக் கருதவில்லை என்று தான் ஒரு இந்துவுக்குத் தோன்றும். இந்த வெற்றுப் பெருமையின் காரணமாக, இந்துக்கள் முஸ்லிம்களை 'அந்நியர்கள்' என்று குறிப்பிடுவது எளிதாகிவிடுகிறது."
"இடைக்கால இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி, சாதாரண முஸ்லிம்களின் ஆட்சி அல்ல என்றும் அது ஒரு ஆளும் வர்க்கத்தின் ஆட்சி என்று முஸ்லிம்கள் உணர வேண்டும். முஸ்லிம்கள் உங்களை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என்று கூறும்போது, இந்துக்கள் அடக்கப்பட்டார்கள் என்ற தோற்றத்தை அது தருகிறது." என்பது அவரது வாதம்.
முபாரக் அலி, "எங்களை பெரிதும் ஒடுக்கிய பிரிட்டிஷ்காரர்கள் கூட, இந்தியாவை தனதாகவே கருதிய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அளவுக்கு பெருமையை உணர்வில்லை. முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பற்றி முஸ்லிம்களின் இந்தப் பெருமை இந்துக்களை எரிச்சலூட்டுகிறது. பாகிஸ்தானின் பள்ளிகளில் கற்பிக்கப்படும் புத்தகங்களை நீங்கள் படித்தால், அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களும் தைரியமானவர்களாகவும் இந்துக்கள் அவர்கள் முன் சரணடைந்ததாகவும் தான் கற்பிக்கப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல," என்கிறார்.
முபாரக் அலி, "பாகிஸ்தானின் புத்தகங்கள் இந்துக்கள் மற்றும் இந்தியா மீது வெறுப்பை மட்டுமே உருவாக்குகின்றன. இங்குள்ள ஆளும் வர்க்கத்தினருக்கு இடைக்கால முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்களது மூதாதையர்கள் என்றும் அவர்கள் இந்துக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்ற எண்ணம் உள்ளது. இங்குள்ள ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களின் பெயர்கள் யாவும் - கஜினி, கோரி, கஜ்னவி இப்படித் தான் இருக்கின்றன. இந்த மனநிலை வலதுசாரி இந்து அரசியலுக்குப் புத்துயிர் ஊட்டுவதாக அமைகிறது. மேலும் இது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கையைக் கடினமாக்குகிறது.
1,200 ஆண்டுகள் இந்தியா அடிமையாக இருந்ததா?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
நரேந்திர மோதி பிரதமரான பிறகு முதல் முறையாக ஜூன் 11, 2014 அன்று மக்களவையில் பேசினார். மோதி தனது முதல் உரையில், "1200 ஆண்டுகால அடிமை மனநிலை கவலைக்குரியது. பல முறை நம்மை விட சற்று உயரமான நபரை சந்திக்கிறோம், அப்போது தலையை உயர்த்தி பேசும் துணிவு கூட நமக்கு இல்லை." என்று கூறியிருந்தார்.
பிரதமரின் இந்தப் பேச்சு ஒரே நேரத்தில் பல கேள்விகளை எழுப்பியது. இந்தியா 1200 ஆண்டுகளாக அடிமையாக இருந்ததா? பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே இந்தியா அடிமையாக இருந்ததா? என்கிற கேள்விகள் எழுந்தன.
பிரதமர் மோதி 1,200 ஆண்டுகால அடிமைத்தனம் பற்றிப் பேசியபோது, எட்டாம் நூற்றாண்டில் (கி.பி. 712) சிந்துவின் இந்து ன்னர் மீதான மீர் காசிமின் தாக்குதலில் இருந்து 1947 வரை இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தது என்ற பொருளில் குறிப்பிட்டார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏறத்தாழ 1757 முதல் 1947 வரை அதாவது 190 ஆண்டுகள் இருந்ததாகக் என்று கருதப்படுகிறது. அதன்படி, இந்தியா ஆயிரம் ஆண்டுகளின் அடிமைத்தனத்தை முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழ் கழித்தது என்று அது பொருள் தருகிறது.
இந்தியா எத்தனை ஆண்டுகள் அடிமையாக இருந்தது? இந்தக் கேள்விக்கு ஒரு சாதாரண இந்திய குடிமகனின் பதில் என்னவாக இருக்கும்?
இந்தியாவில் பள்ளிப் புத்தகங்களின்படி, 1757 ல் பிளாசி போரில் வங்காள நவாபுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதிலிருந்துதான் இந்தியா அடிமையாக இருந்ததாக கருதப்படுகிறது, ஆனால் இப்போது இந்தியாவில் வரலாற்றை மாற்றுவது பற்றி பேசப்படுகிறது. இடைக்கால முஸ்லீம் ஆட்சியாளர்கள் படையெடுப்பாளர்கள் என்றும் அவர்கள் இந்தியாவை அடிமையாக வைத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
உண்மையில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் அடிமையாக இருந்ததா இந்தியா?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்தியாவின் இடைக்கால வரலாற்றில் வல்லுநரான இர்ஃபான் ஹபீப் இதுபற்றிக் கூறும்போது, "இடைக்காலம் குறித்து வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன. சமய ரீதியான வரலாறு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, இந்துக்களும் முஸ்லிம்களும் கூடச் செய்தார்கள். இந்திய வரலாற்றை மதத்தின் அடிப்படையில் பிரிப்பது புதிய விஷயம் அல்ல. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள், இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமையாக இருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இந்துத்துவவாதிகள் இந்தியாவில் 13 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பே அந்நியப் படையெடுப்பு ஆட்சி இருந்தது என்று கூறுகிறார்கள்," என்கிறார்.
மேலும் ஹபீப், "இஷ்தியாக் ஹுசைன் குரேஷி போன்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இடைக்காலத்தை முஸ்லிம் ஆட்சியின் காலம் என்று அழைக்கிறார்கள். முஸ்லிம் லீக் ஆட்கள் கூட அவர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்ததாக கூறுகிறார்கள். வரலாற்றின் அத்தகைய விளக்கம் இரு தரப்புகளாலும் வழங்கப்படுகின்றன. உண்மையான தேசியவாதிகள் இந்த விளக்கத்தை நிராகரிக்கிறார்கள்.
இர்ஃப்ன் ஹபீப், "இடைக்காலத்தின் பல ஆட்சியாளர்கள் வெளிநாட்டில் பிறந்தனர், ஆனால் அவர்கள் தங்களை இந்தியர்களாகவே கருதியிருந்தார்கள். சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், பிரிட்டிஷ் ஆட்சி அவர்களுக்கு முந்தைய முஸ்லீம் மன்னர்களின் சகாப்தத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று வாதிடுகின்றனர், ஏனெனில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சொத்தைக் கொள்ளை அடித்து வெளியே எடுத்துச் சென்றனர், ஆனால் முஸ்லிம் பேரரசர்கள் இந்தியாவின் சொத்துகளை இந்தியாவிலேதான் வைத்திருந்தனர்," என்றார்.
"ஆர்.சி.தத் மற்றும் தாதாபாய் நவ்ரோஜியின் எழுத்துக்களிலும் இந்த விஷயத்தைக் காணலாம். இருபுறமும் உள்ள மத வாதிகள், பெரும்பாலும் இங்கேயே குடியேறுபவர்களுக்கும் தங்கள் நாட்டுக்கு செல்வத்தை எடுத்துச் செல்வோருக்கும் உள்ள வித்தியாசத்தை மறந்து விடுகிறார்கள்"
"ஆர்.சி. மஜும்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை கொடுங்கோன்மை கொண்டதாகவே கருதுகின்றனர். ஆனால் அவர்கள் உண்மைகளின் அடிப்படையில் பேசுகிறார்கள். ஆர்.சி.மஜும்தார் ஒரு தீவிர வரலாற்றாசிரியராகவும் கருதப்படுகிறார், ஏனெனில் அவர் கருத்துகள் எப்போதும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. மற்ற வரலாற்றாசிரியர்களும் இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உண்மைகளைத் தவிரவும் வேறு பல உண்மைகள் உள்ளன. ஆனால் 1950 களில் இருந்து ஆர்எஸ்எஸ் சொல்ல ஆரம்பித்த வரலாறு முற்றிலும் வேறுபட்டது.
அவர்கள் வரலாற்று உண்மைகளைப் பற்றி பேசுவதில்லை. அவர்களுக்கு வரலாறு என்பது என்ன நடந்தது என்பது அல்ல, அவர்களைப் பொருத்தவரை, என்ன நடந்திருக்க வேண்டுமோ அதுதான் வரலாறு. இவை அனைத்தும் இந்திய அரசியலில் வரும் காலங்களில் அதிகம் காணப்படும். இதை பாகிஸ்தானிலும் பார்த்தோம். தட்சசீலம், மொகஞ்சதரோ ஆகியவை பாகிஸ்தான் வரலாற்றில் இருந்து விலக்கப்பட்டுள்ளன."
இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய வரலாறு பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா மற்றும் நவீன இந்தியா என பிரிக்கப்பட்டுள்ளது. குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் முடிவையும் இடைக்கால இந்தியாவின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
பண்டைய இந்தியாவில் இந்து மதம், புத்த மதம் மற்றும் சமணம் தோன்றியது. இடைக்காலத்தில் கூட, முகலாயர் காலம் அதாவது 1526 முதல் ஔரங்கசீப்பின் மரணம் வரை (1707) மிக முக்கியமானது.
ஔரங்கசீப் கிட்டத்தட்ட இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தார். ஔரங்கசீப்புக்குப் பிறகு, முகலாயர் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. 1857 இல், முகலாய வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் பகதூர் ஷா ஜாஃபர், ஆங்கிலேயர்களால் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
பகதூர் ஷா ஜாஃபருக்குப் பிறகு, இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது, அது நவீன காலம் என்று அழைக்கப்படுகிறது. பல வரலாற்றாசிரியர்கள் இந்த பிரிட்டிஷ் காலத்தை நவீன காலம் என்று அழைப்பது குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர். இர்ஃபான் ஹபீப் என்ற அதே பெயருடைய மற்றொரு வரலாற்றாசிரியர் "கொடுமைகள் நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியை நவீன காலம் என்று அழைப்பது முற்றிலும் அபத்தமானது," என்று கூறுகிறார்.
இடைக்கால இந்தியா தொடர்பான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஹர்பன்ஸ் முகியா, "பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் மில் தனது 'பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் முதல் முறையாக இந்திய வரலாற்றை மத ரீதியாகக் கட்டமைக்க முயன்றார். இந்தப் போக்கு பிரிவினை சக்திகளால் விரும்பப்பட்டது. ஜேம்ஸ் மில் பண்டைய இந்தியா இந்து ஆட்சி, இடைக்கால இந்தியா முஸ்லீம் ஆட்சி மற்றும் தங்கள் கொடுங்கோல் ஆட்சி நவீன இந்தியா என்று வரையறுத்தார்."என்று கூறுகிறார்.
அல்லாமா இக்பாலும் சாவர்கரும்

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம்களை அந்நியர்கள் என்றும் முஸ்லிம் ஆட்சியாளர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் விவரிக்கும் சர்ச்சை புதியதல்ல. முகியா மற்றும் ஹபீப் போன்ற வரலாற்றாசிரியர்கள் இது பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்டது என்றும், மதவாத அரசியல் நடத்த விரும்பிய இந்து - முஸ்லிம் இருதரப்பினராலும் இது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது அல்லாமா இக்பால் முஸ்லீம் தேசம் பற்றியும் சாவர்க்கர் இந்துத்துவா பற்றியும் பேசியது வரலாற்று உண்மை.
அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் ஹேரம்ப் சதுர்வேதி, இந்தியா 1200 ஆண்டுகளாக அடிமையாக இருந்தது என நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியபோது, அவரது இலக்கு நாட்டின் முஸ்லிம்களே. பேராசிரியர் சதுர்வேதி கூறுகையில், "முஸ்லிம்கள் அந்நியர்கள் என்றும் அவர்களின் விசுவாசம் சந்தேகத்துக்குரியது என்றும் பிரதமர் கூற விரும்புகிறார்" என்றார்.
ஆனால் சுதந்திரத்திற்கு முன்பே இந்த சர்ச்சை வெடித்தது. இதுபோன்ற செயலைச் செய்த முதல் நபர் பிரதமர் மோதி அல்ல. சுதந்திரத்திற்குப் பிறகும், முகலாயர்கள் காலனித்துவ சக்தி என்ற செய்தியைப் பரப்பும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்தியா சாலைகள் மற்றும் நகரங்களுக்கு புதிய பெயரிடத் தொடங்கியது. இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட பெயர்களின் மாற்றத்துடன் தொடங்கியது. உதாரணமாக, பம்பாய் - மும்பை, கல்கத்தா- கொல்கத்தா, ட்ரிவண்ட்ரம் - திருவனந்தபுரம், மெட்ராஸ் - சென்னை எனப் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதற்குப் பிறகு மொகலாய ஆட்சியாளர்களின் பெயர்கள் மாறத் தொடங்கின. அக்பரால் 1583 இல் நிறுவப்பட்ட அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. இந்த மாற்றம் 2018 இல் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் செய்யப்பட்டது. இந்த மாற்றம் முகலாயர்கள் ஆங்கிலேயர்களைப் போல ஒரு காலனித்துவ சக்தி என்கிற ஒரு செய்தியை அனுப்பியது.
ஆனால் இதுபோன்ற மாற்றங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானிலும், இந்து, சீக்கிய மற்றும் வங்காள அடையாளங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
பாகிஸ்தானின் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் சம்பவம் அகற்றப்பட்டுள்ளது. வங்கதேசம் 1971 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பிறகு பிறந்ததை வெகு சில பாகிஸ்தானியர்களே நினைவில் வைத்துள்ளனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் மனன் அகமது ஆசிஃப் தனது 'தி லாஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' என்ற புத்தகத்தில் ஹிந்துஸ்தான் எப்படி இந்தியாவாக மாறியது என்றும் பெரும்பான்மைவாதத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து வளர்ந்தது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை விளக்க ஆசிஃப் ஒரு உதாரணம் தருகிறார்.
ஹர்தயால் என்ற இளம் புரட்சியாளர் 1904 இல் லாகூரில் உள்ள ஃபோர்மேன் கிறிஸ்டியன் கல்லூரி முன் மக்களைக் கூட்டினார். அதில் தனது நண்பரும் இளம் கவிஞருமான முகமது இக்பாலையும் அழைத்திருந்தார். அப்போது இக்பால் அரசுக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அந்தக் கூட்டத்தில் இக்பால் தனது புதிய கவிதையை வாசித்தார். அந்தக் கவிதை - சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா. இந்தக் கவிதையை கூட்டத்தில் அனைவரும் உற்சாகத்துடன் பாடினர்.
கூட்டத்தில் இந்தக் கவிதையைக் கேட்பவர்களில் ஒருவர் அந்தக் கவிதையைக் கேட்டு அதை எழுதி அந்தக் கால கட்டத்தின் முன்னணி உருது பத்திரிகையான இத்தாஹத்திற்கு அனுப்பினார். இந்தக் கவிதை 1904 இல் அந்த இதழின் ஆகஸ்ட் இதழில் வெளிவந்தது.
பின்னர் இக்பாலின் இந்தக் கவிதை 1924 இல் அவரது முதல் கவிதைத் தொகுப்பில் வெளிவந்தது. அதில் இவர், ஹிந்துஸ்தான் அனைவருக்குமானது என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இந்து நம்பிக்கையில் முக்கிய இடம் வகிக்கும் கங்கை, இமயமலை குறித்த குறிப்புகளும் இந்தக் கவிதையில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்பாலின் கவிதையில் மக்கள் முதலில் இந்துஸ்தானி என்றும் பிறகு தான் இந்து அல்லது முஸ்லிம் என்றும் உறுதிப்படுத்தப்படுகிறது. இக்பாலின் கற்பனையில், அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஹிந்துஸ்தான் உதித்தது. இக்பாலின் கவிதை மிகவும் பிரபலமானது, அது மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட கவிதையாக மாறியது.
இந்தக் கவிதை காங்கிரஸ் கூட்டங்களின் தொடக்கத்தில் பாடப்படத் தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்தில், இந்தக் கவிதை மக்களால் பெருமளவில் பாடப்பட்டது. மகாத்மா காந்தியையும் இது மிகவும் கவர்ந்தது.
20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இந்துஸ்தானம் குறித்த இக்பாலின் அணுகுமுறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இக்பாலின் கவிதைத் தொகுப்பில் 'தரானா-எ-மில்லி' என்ற தலைப்பில் ஒரு கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. இக்பால் இக்கவிதையில் முஸ்லிம் தேசம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவர் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி பேசினார். 'தரானா-எ-மில்லி' என்ற கவிதையில் ஒரு வரி உள்ளது-"சீனா, அரேபியா நமக்கானது, ஹிந்துஸ்தான் எங்களுடையது, நாங்கள் முஸ்லிம்கள், உலகம் முழுவதும் எங்களுடையது."
1930 வாக்கில், இக்பாலின் எண்ணங்களில் மேலும் மாற்றம் ஏற்பட்டது. அவர் அகில இந்திய முஸ்லிம் லீகில் முக்கிய உரை நிகழ்த்தினார். இந்த உரையில், அவர் இந்தியா குறித்துக் குறிப்பிடும் போது, "உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாடு" என்று குறிப்பிட்டார்.
இக்பால் தனது உரையில், "இந்தியாவில் இஸ்லாத்தின் கலாச்சார சக்தி ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் முஸ்லிம்களின் செறிவைப் பொறுத்தது. முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ள பகுதிகளில் இந்த மையப்படுத்தல் நடைபெற வேண்டும். முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ராணுவம் மற்றும் காவல்துறையில் உள்ளனர். இதன் காரணமாக ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்களின் செறிவு இருந்தால், அது இந்தியா மற்றும் ஆசியாவின் பிரச்சனையை தீர்க்க முடியும்," என்று கூறினார்.
இக்பால் முஸ்லிம்களின் உலகளாவிய சமூகத்திற்காக வாதாடத் தொடங்கினார். இந்தியா 1947 இல் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசாக மாறியது. பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்தது.
பின்னர் 1970 களில், பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் ஜியா-உல்-ஹக், அல்லாமா இக்பாலுக்கு பாகிஸ்தானின் 'தேசிய தத்துவஞானி' என்ற பட்டத்தை வழங்கினார். இக்பால் ஒரு இஸ்லாமிய தேசம் என்ற தனது கனவுடன்1938 இல் காலமானார்.
புகழ்பெற்ற இடைக்கால வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஹர்பன்ஸ் முகியா, அல்லாமா இக்பால் ஜெர்மனியை விட்டு வெளியேறிய பிறகு முற்றிலும் மாறிவிட்டார் என்று கூறுகிறார். "இக்பால் தத்துவம் படிக்க ஜெர்மனி சென்றபோது, இஸ்லாமிய தேசியம் பற்றிய யோசனை அங்குள்ள தேசியவாதத்தின் தாக்கமாக அவரது மனதில் தோன்றியது. ஜெர்மனி சென்ற பிறகு, இக்பால் முற்றிலும் மாறி, 'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' என்ற எண்ணத்தை விட்டுவிட்டார்."
அல்லாமா இக்பால் ஐரோப்பாவுக்குச் சென்ற பிறகு ஒரு தீவிர முஸ்லிமாக மாறிவிட்டார் என்று முபாரக் அலி கருதுகிறார்.
முஸ்லிம்களின் விசுவாசத்தின் மீதான சந்தேகம்

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அல்லாமா இக்பாலை விட மிகவும் தெளிவாக, விநாயக் தாமோதர் சாவர்க்கர் இந்து ராஷ்ட்டிரம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சாவர்க்கர் "இந்துக்களுக்கு மட்டுமே இந்தியா மீது அளவற்ற அன்பு இருக்க முடியும்," என்று வெளிப்படையாகக் கூறினார்.
சாவர்க்கர் இந்தியாவில் இந்து மேலாதிக்கம் மற்றும் இந்துத்துவா அரசியலின் கொடியை உயர்த்தியவர். உண்மையில், அவர் தான் முதன்முறையாக இந்துத்துவா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
சாவர்க்கர் தேசத்துரோகத்திற்காக லண்டனில் கைது செய்யப்பட்டு 1911 ஆம் ஆண்டு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்தார். 1924 ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அரசியல் செய்வதில்லை என்ற உறுதியளித்து மன்னிப்பு கோரியதையடுத்து, விடுவிக்கப்பட்ட சாவர்க்கர் 1937 வரை மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் வாழ்ந்தார். சாவர்க்கரும் மகாத்மா காந்தி கொலையில் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டார், ஆனால் அவர் போதுமான "ஆதாரம் இல்லாததால்" விடுவிக்கப்பட்டார்.
காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவும் சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் தான்.
சாவர்க்கரின் 'இந்தியாவின் கனவு' இந்து தேசத்தின் கனவு. 1908 இல், சாவர்க்கர் மராத்தியில் ஒரு கவிதை எழுதினார். இந்தக் கவிதை- அமுச்சே பிரியகர் இந்துஸ்தான் (எங்கள் அன்புக்குரிய இந்துஸ்தான்).
சாவர்க்கர் இந்தக் கவிதையை லண்டனில் எழுதினார். அல்லாமா இக்பால் போல மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியா தான் சிறப்பானது என்று தான் சாவர்க்கர் கூறினார். அவரும் தனது கவிதையில் இமயமலை மற்றும் கங்கையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சாவர்க்கர் தனது கவிதையில் முஸ்லீம்கள் மற்றும் பிரிட்டிஷ் இருவரையும் அந்நிய காலனித்துவ சக்தி என்று விவரித்துள்ளார்.
முதல் நூற்றாண்டில் விக்ரமாதித்யனால் தோற்கடிக்கப்பட்ட கிரேக்கர்களைத்தான் சாவர்கர், தனது கவிதையில் மிலேச்சர் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். மிலேச்சா் என்ற சொல் அசுத்தமான மற்றும் அழுக்கான என்ற பொருள் படுகிறது. பின்னர் இந்த சொல் முஸ்லிம்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.
'இந்துத்துவத்தின் அத்தியாவசியங்கள்' என்கிற சாவர்க்கரின் கட்டுரை 1923 இல் முதல் முறையாக வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரையில், சாவர்க்கர் முஸ்லீம்கள் அந்நியப் படையெடுப்பாளர்கள் என்ற தனது கருத்தை விவரித்தார். இந்தக் கட்டுரையில் சாவர்க்கர் முதன்முறையாக இந்துத்துவா என்ற சொல்லை பயன்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
சாவர்க்கர் தனது 'இந்துத்துவா: யார் இந்து' என்ற புத்தகத்தில், "முஹம்மது பிறப்பதற்கு முன்னர், அரேபிய மக்களை பற்றி உலகம் அறிவதற்கு முன்னர், இந்தப் பழமையான நாடு இந்து அல்லது சிந்து என்று வெளியுலகத்தினரால் அறியப்பட்டது. அரபு மக்கள் இந்தப் பெயரைக் கொடுக்கவில்லை."என்று எழுதினார்.
இந்த புத்தகத்தில் சாவர்க்கர், "ஹிந்துஸ்தான் என்றால் இந்துக்களின் பூமி என்று பொருள். இந்துத்துவாவுக்கு புவியியல் ஒற்றுமை மிகவும் முக்கியம். ஓர் இந்து முதன்மையாக இந்த நாட்டின் குடிமகன் அல்லது அவரது முன்னோர்கள் காரணமாக 'இந்துஸ்தானின்' குடிமகன் ஆகிறான் என்கிறார்.
கஜினி தாக்காத வரை அது 'அழகோடும் அமைதியோடும்' இருந்ததாக 'ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான இந்துஸ்தானை' பற்றி சாவர்க்கர் குறிப்பிடுகிறார். ஆண்டுக்கு ஆண்டு, தசாப்தத்திற்கு தசாப்தம், நூற்றாண்டுக்கு நூற்றாண்டு, முஸ்லீம் படையெடுப்பாளர்களுக்கும் இந்து எதிர்ப்பிற்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்தது என்று சுட்டிக்காட்டுகிறார் சாவர்கர்.
இந்தத் தாக்குதல்களிலிருந்தும் அவற்றின் எதிர்ப்பிலிருந்தும் தான் இந்துத்துவா பிறந்தது என்று சாவர்க்கர் கூறுகிறார். முஸ்லீம் ஆட்சியாளர்களுடன் நடந்த போராட்டம் இந்து தேசம் என்ற கோஷத்தை ஏற்படுத்தியது என்று சாவர்க்கர் கூறுகிறார்.
சாவர்க்கர் எப்போதும் முஸ்லிம்களை அந்நியர்களாகவே கருதி வந்தார். சாவர்க்கர் 'இந்துத்துவா: யார் ஓர் இந்து' என்ற தனது புத்தகத்தில், "சில சமயங்களில் நமது முஸ்லீம்கள் அல்லது கிறிஸ்தவர்கள், கட்டாயமாக இந்து அல்லாத மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கும் இதுதான் தாய்நாடு மற்றும் கலாச்சாரத்தின் பெரும் பகுதியும் ஒன்றுதான். ஆனால் இன்னும் அவர்களை இந்துக்களாக கருத முடியாது.
இந்துக்களைப் போலவே, ஹிந்துஸ்தானம் அவர்களின் தாய்நாடுதான் என்றாலும், இது அவர்களின் புனித பூமி அல்ல. அவரது புனித பூமி அரேபியாவில் உள்ளது. அவர்களின் நம்பிக்கைகள், அவர்களின் மதத் தலைவர்கள், எண்ணங்கள் இந்த மண்ணின் உற்பத்தி அல்ல. எனவே, அவர்களின் பெயர்கள் மற்றும் அணுகுமுறைகள் அந்நியமாகிப் போகின்றன." என்று குறிப்பிட்டுள்ளார்.
சாவர்க்கரின் இந்த வாதத்திற்குப்பதிலாக, வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் (2), பகத்சிங் ஒரு நாத்திகர் என்றும் அவருக்கு எங்கும் புனித பூமி இல்லை என்றும் கூறுகிறார். இர்ஃபான் ஹபீப், "தேசியத்தையும் மதத்தையும் கலக்க முடியாது. மதம் என்பது முற்றிலும் மாறுபட்ட விஷயம். ஒருவரின் தேசியம் மதத்தால் பாதிக்கப்படுவதில்லை." என்று கருதுகிறார்.
இது முஸ்லிம்களைப் பற்றிய சாவர்க்கரின் கருத்து மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியின் ரசிகரான சர் ஜதுநாத் சர்க்காரும் இதே போன்ற கருத்தைத் தான் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
முகலாயர் காலம் பற்றி ஜதுநாத் சர்கார் எழுதியது, இப்போது பாஜகவின் காலத்திற்குச் சரியாகப் பொருந்துகிறது என்று ஹர்பன்ஸ் முகியா கூறுகிறார்.
ஜதுநாத் சர்கார் 1928 இல் சென்னையில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார், அந்த உரை, 'யுகந்தோறும் இந்தியா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதில், ஜதுநாத், முஸ்லீம் ஆட்சியை அந்நிய ஆட்சி என்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட ஆட்சி என்றும் குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில், "முந்தைய தாக்குதல்களில் இருந்து ஒரு வகையில் இந்தியாவில் முஸ்லிம்களின் வெற்றி முற்றிலும் வேறுபட்டது. முஸ்லீம்கள் இந்திய மக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள், இங்குள்ள மக்கள் அவர்களைத் தங்களவர்களாக ஏற்க முடியவில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும்; பின்னர் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றாக வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் கலக்க முடியவில்லை. முஸ்லிம்கள் இன்றும் மக்காவை நோக்கித்தான் தொழுகை நடத்துகிறார்கள்.
1200 முதல் 1580 வரை (அக்பரின் ஆட்சிக்கு முன்) முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்திய நிலத்தில் ஒரு இராணுவ முகாம் போல வாழ்ந்ததாக சர்கார் எழுதியுள்ளார்.
பேராசிரியர் ஹர்பன்ஸ் முகியா மற்றும் பேராசிரியர் ஹேரம்ப் சதுர்வேதி ஆகியோர் சர் ஜதுநாத் சர்க்காரின் இந்த அறிக்கையை நியாயமற்றது என்று புறந்தள்ளுகின்றனர். ஹர்பன்ஸ் முகியா, "பாபர் மற்றும் ஹுமாயூன் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள். அக்பர் உமர்கோட்டில் ஒரு ராஜபுத்திர மன்னரின் வீட்டில் பிறந்தார். அக்பர் இந்தியாவை விட்டு வெளியே செல்லவில்லை. அக்பருக்குப் பிறகு அனைத்து முகலாய ஆட்சியாளர்களும் இந்தியாவில் பிறந்தவர்கள். அவர்களும் இந்தியாவுக்கு வெளியே செல்லவில்லை." என்று கூறுகிறார்.
பக்தி மற்றும் சூஃபி இயக்கத்தால் மதம் எனும் சுவர் தகர்க்கப்பட்டதாக ஹேரம்ப் சதுர்வேதி கூறுகிறார். முஸ்லீம் கவிஞர்கள் கிருஷ்ணரின் பக்தி கவிதைகளை எழுதுகிறார்கள், முஸ்லிம்களின் திருமணங்கள் ராஜ்புத் வீடுகளில் நடக்கின்றன. இதை விட என்ன ஒன்றிணைந்து வாழ்வது? என்று கேள்வி எழுப்புகிறார் ஹேரம்ப் சதுர்வேதி.
முகலாய ஆட்சியாளர்கள் இந்துக்களைத் துன்புறுத்தியது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images
பலர் இடைக்கால முஸ்லீம் ஆட்சியாளர்களைப் படையெடுப்பாளர்கள் என்று அழைக்கிறார்கள். வரலாற்று அறிஞரும், நூலாசிரியருமான பார்வதி சர்மா, அதிகாரத்திற்காக இன்னொரு தேசத்தைத் தாக்குவது புதிய விஷயம் அல்ல என்று கூறுகிறார்.
பார்வதி கூறுகையில், "மௌரியர்களின் ஆட்சி ஆப்கானிஸ்தான் வரை இருந்தது. அப்படிப் பார்த்தால், அவர்களும் படையெடுப்பாளர்கள்தாம். அதிகாரத்தின் விரிவாக்கம் என்ற ஆசைக்கும் எந்தக் குறிப்பிட்ட மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை." என்று கருத்து தெரிவிக்கிறார்.
முஸ்லீம் ஆட்சியாளர்கள் மீது கொடூர குற்றம் சாட்டப்படும்போது, முதலில் வருவது ஜஸியா வரி. ஜஸியா வரி அக்பரால் நீக்கப்பட்டது. 1679 இல் ஔரங்கசீப்பால் மீண்டும் விதிக்கப்பட்டது. இது முஸ்லிமல்லாதவர்களுக்கு விதிக்கப்பட்ட வரி.
ஔரங்கசீப்பின் இந்த நடவடிக்கை அவரது மத வெறியின் சான்றாகக் கருதப்படுகிறது. ஔரங்கசீப்பின் இந்த முடிவு ராஜபுத்திரர்களையும் மராட்டியர்களையும் ஆத்திரமூட்டியது. முகலாயர் ஆட்சிக்கு இந்துக்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பு காரணமாக, ஔரங்கசீப் ஜசியா வரியை விதித்தார், இது ஒரு அரசியல் நடவடிக்கை என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
வரலாற்றாசிரியர் சதீஷ் சந்திரா, ஜஸியா வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்குப் பின்னால் அக்கால அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களும் காரணமாயின என்று எழுதியுள்ளார். பல சமகால வரலாற்றாசிரியர்கள் ஜஸியா வரியை மீண்டும் விதித்ததற்குத் தத்தம் சொந்த கருத்தை அளித்துள்ளனர்.
சதீஷ் சந்திரா, "ஔரங்கசீப்பின் ஆட்சியின் அதிகாரப்பூர்வ வரலாற்றாசிரியராகக் கருதப்படும் முகமது சாகி முஸ்தாய்த் கானின் கூற்றுப்படி, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இஸ்லாமிய சட்டத்தை பரப்ப வேண்டும் மற்றும் காஃபிர்களை அதற்கேற்ப நடத்த வேண்டும் என்று ஒரு ஆணையை வைத்திருந்தனர். இந்த வழிகாட்டுதலின் கீழ், ஔரங்கசீப், ஏப்ரல் 2, 1679 முதல், குர்ஆனைப் பின்பற்றி, காஃபிர்களிடமிருந்து ஜஸியா வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்." என்று பதிவு செய்கிறார்.
சதீஷ் சந்திரா, "ஷரியாவை அறிந்த ஔரங்கசீப், ஆட்சிக்கு வந்த 22 ஆண்டுகள் கழித்து, ஏன் ஜஸியா வரியை விதித்தார் என்ற கேள்விக்குப் பதிலில்லை. இந்தியாவிற்கு வருகை தந்த சமகால ஐரோப்பிய பயணிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முகவர்கள் ஜஸியா பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர்.
சூரத்தில் உள்ள ஆங்கிலத் தொழிற்சாலையின் தலைவரான தாமஸ் ரோல் 1679 இல் "ஔரங்கசீப்பின் வெற்றுக் கருவூலத்தை நிரப்புவதற்காக மட்டுமல்லாமல், ஏழைகளை இஸ்லாத்திற்கு மாற கட்டாயப்படுத்தவும் இது விதிக்கப்பட்டது" என்று எழுதினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் ஔரங்கசீப் ஏழை இந்துக்களை முஸ்லிம்களாக ஆக்குவதற்காக ஜஸியா வரியை விதித்தார் என்பதை சதீஷ் சந்திரா ஏற்கவில்லை. அவர் கூறுகிறார், "நாட்டின் பெரும்பகுதிகளில் 400 ஆண்டுகால முஸ்லீம் ஆட்சி இருந்தபோதிலும், இந்துக்கள் தங்கள் மதத்தில்தான் இருந்தனர். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஆட்சியாளர்கள் ஜஸியாவை வசூலித்தனர். ஜஸியாவை மீண்டும் அறிமுகப்படுத்துவது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என்பதை ஔரங்கசீப் அறிந்திருக்க வேண்டும். அதாவது ஏழை இந்துக்கள் முஸ்லிம்களாக மாற மாட்டார்கள்."
"இந்த வரி ஏழைகளுக்குத் துன்பமளித்தது என்பது உண்மை. ஆனால், வெகுஜன மதமாற்றத்திற்கு இது காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படி நடந்திருந்தால், முஸ்லிம் ஆட்சியாளர்களின் அரண்மனைகள் அதை ஒரு பெரிய வெற்றியாகப் பார்த்துப் பதிவு செய்திருக்கும்." என்பது சதீஷ் சந்திராவின் கருத்து.
மேலும் கூறும் சதீஷ் சந்திரா, "பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஔரங்கசீப் தனது ஆட்சியின் 13 வது ஆண்டில் நிதி ஆய்வு செய்தபோது, கடந்த 12 ஆண்டுகளில் வருமானத்தை விட அதிக செலவு இருப்பதைக் கண்டறிந்தார் என்பது உண்மைதான். இதன் விளைவாக, சுல்தான், பேகம் மற்றும் இளவரசர்களின் செலவுகளும் குறைக்கப்பட்டன. 1676 க்குப் பிறகு, தெற்கில் தொடர்ச்சியான போர் காரணமாக அரசாங்க கருவூலம் காலியாகிக்கொண்டிருந்தது. இது தவிர, வடகிழக்கில் எல்லைப் போருடன், சிசோடியா மற்றும் ரத்தோர்களிடையேயான மோதலும் நடந்து கொண்டிருந்தது. இந்தப் போர்களின் மூலம் ஔரங்கசீப்பின் பேரரசும் விரிவடையவில்லை நிதி ரீதியாகவும் பயனடையவில்லை." என்கிறார்.
இது தவிர, ஔரங்கசீப்பின் கருவூலத்தில் பல்வேறு வகையான உப வரிகளின் விலக்குகளாலும் குறைபாடு இருந்தது. இஸ்லாமிய சட்டம் அனுமதிக்காத செஸ் வரிகளை ஔரங்கசீப் நீக்கியதாகவும் பலர் வாதிடுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், ஷரியாவின் கீழ் ஜஸியாவை விதிக்க வேண்டியிருந்தது.
வரலாற்று அறிஞரும், மத தேசியம் பற்றி ஒரு புத்தகமும் எழுதிய ராம் புண்யானி கூறுகிறார், "மொத்த இடைக்காலத்தையும் ஔரங்கசீப் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது. ஔரங்கசீப் இந்துக்களிடமிருந்து ஜஸியாவை வசூலித்தது போல், முஸ்லீம்களிடமிருந்தும் ஜகாத்தை வசூலித்தார். ஜஸியா 1.5 சதவீதம் மட்டுமே. ஜகாத் இதை விட அதிகமாக இருந்தது. ஜஸியா ஒரு தனிப்பட்ட வரி, தவிர, குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. முன்னதாக அக்பர் ஜாசியாவை ஒழித்தார்."
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICHR) இணைந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் உமேஷ் அசோக் கதம், இடைக்காலத்தில் முஸ்லீம் ஆட்சியாளர்களால் இந்துக்கள் ஒடுக்கப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார். அந்த பாரபட்சமான ஆட்சிக்கு ஜஸியா ஒரு உதாரணம் என்றும் கூறுகிறார்.
அவர், "இந்தியாவில் இஸ்லாம் மற்றும் கிறித்துவத்தின் வருகை ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது. இடைக்காலம் என்பது டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்களின் வரலாறு மட்டுமல்ல. 8 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை, இந்துக்களின் சுதேச அரசுகளும் இருந்தன, அவர்கள் நன்றாக ஆட்சி செய்தனர். முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்தியர்களின் மொழியை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, பாரசீக மொழியை அனைவருக்கும் திணித்தனர். முஸ்லீம் ஆட்சியாளர்கள் முஸ்லிமல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. இந்து சமஸ்தானங்களைக் கைப்பற்றுவது முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு ஜிஹாத்." என்கிறார்.
இருப்பினும், சுதந்திர இந்தியாவில் கூட, ஆங்கில மொழி பலரால் காலனி மொழி என்று அழைக்கப்படுகிறது, மேலும் நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு இது புரியாதபோது அனைத்து வேலைகளும் இந்த மொழியில் செய்யப்படுகின்றன. பேராசிரியர் உமேஷ் கதம் கூறுகையில், இடைக்காலத்தில் முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்துக்களை முஸ்லீம்கள் ஆக கட்டாயப்படுத்தினர் என்கிறார்.
மதமாற்றம்

பட மூலாதாரம், Getty Images
முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்துக்களை கட்டாயமாக முஸ்லிம்களாக மாற்றினார்களா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பேராசிரியர் ஹேரம்ப் சதுர்வேதி, "மதமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பேரரசர் அசோகர் காலத்தில் கூட மதமாற்றம் நடந்தது. ஏராளமான இந்துக்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்." என்கிறார்.
"இடைக்காலத்திலும், மாற்றம் மூன்று வழிகளில் நடந்தது. ஒன்று, மக்கள் தங்கள் நிலத்தைக் காப்பாற்றத் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர், இரண்டாவதாக அவர்கள் சூஃபிகளால் கவரப்பட்டுத் தாமாகவே முஸ்லிம்களாக மாறினர், மூன்றாவதாக போரில் தோற்ற பிறகு, மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற முஸ்லிம்களாக மாறினர். முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, அவர்களுடன் மதமும் வந்தது, அவர்களின் அரசியலில் மத விரிவாக்கம் பற்றிய விஷயம் இருந்தது. ஆட்சியாளரின் மதத்தின் செல்வாக்கிலிருந்து அங்குள்ள மக்களைக் காப்பாற்ற முடியாது."
பேராசிரியர் சதுர்வேதி கூறுகிறார், "கிறிஸ்தவ மிஷனரிகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் வந்து மதமாற்றங்களும் செய்தனர். கிறிஸ்தவர்களும் இங்கு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இந்திய மக்கள்தொகையில் அவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாக இருந்திருக்கும்."
முகலாயர் காலத்தில் ஔரங்கசீப்பை மிகவும் கொடுங்கோன்மையான ஆட்சியாளராக வரலாற்றாசிரியர்களில் ஒரு பகுதியினர் கருதுகின்றனர். ஆர்.சி.மஜும்தார் ஒரு தேசியவாத வரலாற்றாசிரியர் என்று அறியப்படுகிறார். பாரதிய வித்யா பவன் 'முகலாய சாம்ராஜ்யம்' என்ற புத்தகத்தை வெளியிட்டது. இந்தப் புத்தகம் முழு முகலாயர் காலத்தில் பல்வேறு ஆசிரியர்களின் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அதை ஆர்சி மஜும்தார் தான் திருத்தினார்.
ஆர்.சி.மஜும்தார் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், "அக்பரைத் தவிர அனைத்து முகலாய ஆட்சியாளர்களும் இழிவானவர்களாகவும் மதவெறியர்களாகவும் இருந்தார்கள். அக்பர் இந்துக்களுடனான நல்லுறவை அதிகரித்தார். இந்துக்களுக்கு எதிரான பல விஷயங்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இஸ்லாமிய சட்டங்கள் இந்துக்கள் மீது திணிக்கப்பட்டன. அவர்களின் சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தும் முஸ்லிம்களை விட குறைவாக இருந்தது. டெல்லி சுல்தான் போன்ற முகலாயர்களால் இந்துக்களுக்கு அநீதி தொடரப்பட்டது. ஆனால் ஔரங்கசீப் காலத்தில் அது அதிகமாகிவிட்டது. ஔரங்கசீப் வேண்டுமென்றே இந்து கோவில்களையும் சிலைகளையும் அழித்தார். இந்த உண்மைகள், நம் தலைவர்களில் சிலருக்குப் பிடிக்காது. ஆனால் வரலாற்றாசிரியரின் ஒரே குறிக்கோள், பிடித்த விஷயமோ பிடிக்காத விஷயமோ, உண்மையைச் சொல்வதுதான்." என்று எழுதினார்.
ஆர்.சி.மஜும்தார், 'இந்திய தேசிய காங்கிரசின் மேற்பார்வையில் ஒரு வரலாறு எழுதப்பட்டது, இது முஸ்லீம் ஆட்சியாளர்கள் கோவில்களை இடித்தனர் என்பதை நம்பத் தயாராக இல்லை. இந்த வரலாற்றில் முஸ்லீம் ஆட்சியாளர்கள் மிகவும் மத சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்று சொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஔரங்கசீப் பற்றிய ஜாதுநாத் சர்க்காரின் ஆராய்ச்சியை சிலர் நிராகரித்து, ஔரங்கசீப்பை நல்லவராகக் காட்ட முயற்சிக்கின்றனர். சுவாரஸ்யமாக, சர் வில்லியம் இர்வின் மீண்டும் இஸ்லாத்தின் திருத்தப்பட்ட கலைக்களஞ்சியத்தில் ஔரங்கசீப் பற்றி ஒரு கட்டுரையை எழுதினார். அதில், ஔரங்கசீப் மீது கோவில் இடிக்கப்பட்ட குற்றச்சாட்டு சர்ச்சைக்குரியது என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நியூ ஜெர்சியிலுள்ள ரக்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வரலாற்றுப் பேராசிரியரான ஆட்ரி ட்ரஸ்கே 'அவுரங்கசீப்: தி மேன் அண்ட் தி மித்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர், ஔரங்கசீப்பிடம் சில விஷயங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தன, ஆனால் பெரும்பாலும் மக்கள் அவற்றை கருப்பு அல்லது வெள்ளை வண்ணம் தீட்டுகிறார்கள். அதில் அந்த விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகின்றன" என்று எழுதியுள்ளார்.
ட்ரூஷ்கே கூறுகிறார், "நாம் இப்போது 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். நாம் வரலாற்றை நிகழ்காலத்தின் படி பார்க்கிறோம், அது சரியல்ல. வரலாற்றை நிகழ்கால சூழலில் பார்க்கும்போது, நாம் அதைத் தவறாகவே மதிப்பீடு செய்வோம். இந்து-முஸ்லீம் மோதலின் கண்ணாடியில் பார்ப்பது சரியாக இருக்காது. சிலர் ஔரங்கசீப்பை சொந்த நலன்களுக்காகப் பந்தாடுகிறார்கள். மேலும் இது இந்தியாவில் முஸ்லீம் எதிர்ப்பு சிந்தனையை மேலும் அதிகரிக்க உதவுகிறது."
மேலும் அவர், "ஔரங்கசீப் தற்போது இந்துக்களை வெறுத்த ஒரு இஸ்லாமிய ஆட்சியாளராகப் பார்க்கப்படுகிறார், ஆனால் ஔரங்கசீப்பின் வரலாறு மாறுபட்டது. இந்துக்கள் மற்றும் ஜெயின்களின் கோவில்களை அழிப்பது, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு ஜிஸ்யா வரி விதிப்பது போன்றவை இன்றும் அருவருக்கத்தக்கதாகப் பார்க்கப்படுகின்றன."என்று கூறுகிறார்.
"அது மட்டுமல்லாமல், ஔரங்கசீப் பல இந்து மற்றும் ஜெயின் கோவில்களைப் பாதுகாத்தார் மற்றும் முகலாய அரசவையில் இந்துக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தார். ஔரங்கசீப்பை ஒரு இஸ்லாமிய வெறியராகப் பார்க்கும் எவரும் அவர் இந்துக்களையும் ஜெயின்களையும் பாதுகாத்தார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மத ரீதியான பார்வையில் அவரைப் பார்ப்பது சரியாக இருக்காது. அவருக்கு ஆட்சி மீதான பற்று இருந்தது. அதற்காக அவர் சில நடவடிக்கைகளை எடுத்தார். அதற்கு இந்துக்கள் மீதானவெறுப்பு காரணமன்று" என்றும் ட்ரூஷ்கே கூறுகிறார்.
இந்தி இலக்கிய வரலாற்றை எழுதிய ஆச்சார்யா ராம்சந்திர சுக்லாவும், இடைக்காலத்தில் இந்துக்களிடையே பெரும் விரக்தி நிலவியதாக நம்பினார், இதன் காரணமாக பக்தி இயக்கம் தொடங்கியது. ஆச்சார்யா சுக்லா தனது கோஸ்வாமி துளசிதாஸ் புத்தகத்தில், "முஸ்லீம் சாம்ராஜ்யம் நாட்டில் முழுமையாக நிறுவப்பட்டவுடன், வீரத்திற்கு இந்நாட்டில் இடமில்லாமல் போனது. நாட்டின் கவனம் அதன் முயற்சி மற்றும் வலிமையிலிருந்து கடவுளின் பக்திக்கு மாறியது. நாட்டில் விரக்தியின் காலம், அதில் கடவுளைத் தவிர வேறு ஆதரவு இல்லை." என்று எழுதினார்.
இருப்பினும், இந்தி இலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட விமர்சகர், ஹசாரி பிரசாத் த்விவேதி, ஆச்சார்யா சுக்லாவின் இந்த வாதத்தை நிராகரித்து, அவ்வாறு இருந்திருந்தால், முஸ்லீம் ஆட்சியாளர்கள் வந்ததால், பக்தி காலம் தொடங்கியிருதால், வடக்கிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும், தெற்கிலிருந்து அல்ல என்று கூறுகிறார். இஸ்லாமிய ஆக்கிரமிப்பு முதலில் வடக்கே தான் தொடங்கியது. பக்தி இயக்கம் தெற்கிலிருந்து தொடங்கியது.
மோதி அரசு வரலாற்றை 'திருத்தும்' பணியில் ஈடுபட்டுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
அலகாபாத் 'பிரயாக்ராஜ்' என மாற்றப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலையின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. முகல்சராய் நிலையம் தீன் தயாள் உபாத்யாய் நிலையம் என மறுபெயரிடப்பட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர், ஹைதராபாத் நகரத்தின் பெயரை மாற்றுவது பற்றிப் பேசுகிறார். ஹல்திகாட்டி போரில் ராணா பிரதாப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த பெயர்கள் முஸ்லீம் படையெடுப்பாளர்களால் வழங்கப்பட்டவை என்றும் அவற்றை மாற்ற வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். வரலாற்று புத்தகங்களை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க பாஜக அரசுகள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. யோகி ஆதித்யநாத் முகலாயர்கள் இந்தியர்களின் ஹீரோக்களாக இருக்க முடியாது, அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் எங்கள் பாரம்பரியம் அல்ல என்று கூறியுள்ளார்.
பேராசிரியர் உமேஷ் அசோக் கதம் கூறுகையில், "சரியான வரலாற்றைக் கொண்டு வரத் தான் வேண்டும். இடைக்காலத்தின் வரலாறு சரியாக எழுதப்படவில்லை என்று கூறுகிறார். இடைக்காலம் டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்களின் ஆட்சியாக மட்டுமே பார்க்கப்படுகிறது, ஆனால் உண்மை அது அன்று. எழுதப்பட்ட இடைக்காலத்தின் வரலாறு, பாரசீக மற்றும் அரபு இலக்கியங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதேசமயம் அந்த நேரத்தில் இந்திய மொழிகளில் எழுதப்பட்டவை புறக்கணிக்கப்பட்டன. மோடி அரசு வரலாற்றைச் சரிசெய்கிறது. நகரங்கள் மற்றும் சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டால், அது மக்களின் அபிலாஷை. ஒரு பிரபலமான தலைவர் மக்களின் அபிலாஷைகளுக்காக மட்டுமே வேலை செய்கிறார்." என்கிறார்.
பேராசிரியர் உமேஷ் கதம், "அடிமைத்தனத்தின் சின்னங்களை நாம் நிராகரிக்க வேண்டும். சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி, செங்கோட்டையில் இருந்து ஏன் ஏற்றப்படுகிறது நான் குழந்தைப் பருவத்திலிருந்தே சிந்தித்திருக்கிறேன். அது எனக்குச் சரியாகப் படவில்லை," என்கிறார்.
பேராசிரியர் உமேஷ் கதம், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். அந்த அமைப்பு இப்போது வரலாற்றைச் சீர்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாகவும் இடைக்கால வரலாற்றை சரிசெய்யும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மொகலாய மன்னர் ஷாஜஹானால் செங்கோட்டை கட்டப்பட்டது. பேராசிரியர் உமேஷ் கதம் இந்த கட்டடமும் அடிமை இந்தியாவின் அடையாளமாக இருப்பதாக உணர்கிறார். பேராசிரியர் உமேஷ் கதம் கூறுகையில், இந்திய வரலாற்றில், இடதுசாரிகள் உண்மைகளை புறக்கணித்து எழுதியுள்ளனர், இதை சரிசெய்ய வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் வரலாற்றை 'தன்னிச்சையாக' திருத்த முடியுமா?
ஜார்ஜ் ஆர்வெல் தனது 1984 நாவலில், நிகழ்காலத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவர் கடந்த காலத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார் என்று எழுதினார்.
அதாவது நிகழ்காலத்தில் உங்களுக்கு ஒரு தேவை இருப்பதால், இறந்த காலத்தை நீங்கள் உங்கள் போக்குக்கு வளைத்துக் கொள்கிறீர்கள். இந்தப் போக்கு குறித்து, ஜெர்மன் தத்துவஞானி ஜார்ஜ் ஹெகல், "வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரே விஷயம் வரலாற்றிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.
இடைக்கால வரலாற்றில் மோதி அரசு ஏன் அதிருப்தி அடைந்துள்ளது? அதை மாற்றுவது பற்றி ஏன் பேசுகிறது?
பார்வதி ஷர்மா, "வரலாறு என்பது எந்த பழிவாங்கும் விஷயமல்ல, ஆனால் ஆளும் வர்க்கம் வரலாற்றை தங்கள் வழியில் விளக்குகிறது, இதனால் பெரும்பான்மைவாதம் தொடர்ந்து உரம் பெறுகிறது. நாம் துருவமுனைப்பு அரசியல் செய்ய வேண்டும் என்றால், இது போன்ற கதைகள் அவசியம்.. இதில் உண்மையான பிரச்னைகள் மறைக்கப்பட்டுள்ளன. முழு இடைக்காலத்தையும் பார்த்தால், ஜாலியன்வாலா பாக் போன்ற கொடூரங்கள் வேறெங்கும் இருக்காது. ஆனால் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் மக்களின் மனதில், பிரிட்டிஷார் மீது பெரிய வெறுப்பு இல்லை. வெறுப்பு என்பது முஸ்லிம்களிடம் தான். பிரிட்டிஷார் இங்கு இருக்கவில்லை.
அதனால் எங்கள் அரசியலுக்கு அவர்கள் மீதான வெறுப்பு பயன்படாது. முஸ்லிம்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் பிரிட்டிஷ் காலத்திலிருந்து மட்டுமல்ல, இடைக்காலத்திலிருந்தே பெரும்பான்மை அரசியலுக்கு வலு சேர்த்துள்ளனர். பாபர் மசூதிக்கு பதிலாக ராமர் கோயிலை அமைப்பதன் மூலம் சரித்திரம் திருத்தப்படும் என நினைத்தால் அது தவறு, இதன் காரணமாக அவர்களின் அரசியல் வேண்டுமானால் தொடரலாம்," என்கிறார்.
பிற செய்திகள்:
- ஆர்யன் கானுக்கு அக்டோபர் 7வரை காவல் - பாலிவுட்டை உலுக்கும் போதைப்பொருள் கலாசாரம்
- 'அண்ணாத்த' ரஜினி உருக்கம்: "எஸ்பிபி 45 வருடங்களாக எனது குரலாகவே வாழ்ந்தவர்"
- உலக தலைவர்களின் ரகசிய சொத்து விவரங்களை அம்பலப்படுத்தும் புலனாய்வு - விரிவான தகவல்கள்
- நீலகிரியின் டி23 புலி - கமலின் கோரிக்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
- ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












