ஆர்யனுக்கு அக்டோபர் 7வரை காவல் - பாலிவுட்டில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இக்பால் பர்வேஸ்
- பதவி, திரைப்பட செய்தியாளர், பிபிசி இந்திக்காக, மும்பை
போதைப்பொருள் விவகாரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வாளர்களுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திரைப்பட உலகில் மீண்டும் போதை மருந்துகள் கலாசாரம் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை எந்த பிரபல நட்சத்திரமும் போதை மருந்து விவகார்ததில் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனாலும் பாலிவுட்டின் சிறந்த நட்சத்திரமாக அறியப்படும் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் பெயர் சமீபத்திய சிக்கலில் தொடர்புபடுத்தப்பட்டு அவர் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.
கடந்த 2ஆம் தேதி நள்ளிரவில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையினர் மும்பையில் ஒரு சொகுசு கப்பலில் சோதனை நடத்தியது. அப்போது அதில் இருந்த ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை அதிகாரிகள் பிடித்தனர். அதைத்தொடர்ந்து இதில் ஆரியன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஒரு நாள் என்சிபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
கப்பலில் போதைப்பொருள் இருந்ததாகவும் அதை பறிமுதல் செய்ததாகவும் கூறிய அதிகாரிகள், சம்பவ நேரத்தில் ஆர்யன் தரப்பில் இருந்து போதைப்பொருளை பறிமுதல் செய்யவில்லை என்றும் கூறினர். ஆனால், அதற்காக அவரை இந்த வழக்கில் இருந்து ஒதுக்கிவிட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பிபிசி மராத்தி செய்தியாளர் மயங்க் பாகவத், ஆர்யன் கானின் வழக்கறிஞர் பேசியபோது, அவரும் ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.
மும்பை 'குரூஸ் பார்ட்டி' வழக்கில் ஆர்யன் கான் ஜாமீனில் தன்னை விடுதலை செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், ஆர்யன் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்ற சில உரையாடல்கள் அவருக்கும் போதைப்பொருள் பயன்படுத்தும் கும்பலுக்கும் இடையிலான தொடர்புக்கு ஆதாரம் என்று தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை கூறுகிறது. ஆனால், வெளிநாட்டில் படித்தவரான ஆர்யன் எந்த வகையிலும் போதைப்பொருள் பயன்பாடு அல்லது விநியோகத்தில் தொடர்பு கொண்டவர் அல்ல என்று கூறுகிறார். இந்த விவகாரத்தில் ஆர்யனின் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு உத்தரவிடப்படும்வரை அவர் தொடர்புடைய எந்தவொரு வாட்ஸ் அப் செயலி உரையாடல்களும் வெளியிடப்படக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்றும் ஆர்யனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, ஆர்யன் கைதுசெய்யப்பட்டபோது, அவருடன் இருந்த அர்பாஸ், மும்முன் தமேச்சா ,ஆர்யன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரது விசாரணை காவலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

பட மூலாதாரம், SUJIT JAISWAL
ஆர்யனுக்கு முன் பாலிவுட்டை உலுக்கிய போதைப்பொருட்கள் சர்ச்சை
திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணை, போதைப்பொருளின் இருண்ட உலகத்தை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அந்த வழக்கில், முதலில் ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் பின்னர் ரியாவும் அடுத்தடுத்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அதே வழக்கில் போதைப்பொருள் தடுப்புத்துறை மேலும் ஆறு பேரை கைது செய்தது. சிபிஐ விசாரணையில் உள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில், ரியா சக்ரவர்த்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், FB/RheaChakrabortyOfficial
சுஷாந்த் ராஜ்புத் மரணம் அடைந்த சில மாதங்களுக்கு என்சிபியின் விசாரணையுடன், திரைப்படத் துறையிலும் இந்த விஷயத்தைப் பற்றி நிறைய விவாதங்கள் நடந்தன.
நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி எம்.பி எழுப்பிய குரல்
மாநிலங்களவையில் பேசிய முன்னாள் திரைப்பட நடிகையான ஜெயா பச்சன், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களை களங்கப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி ரவி கிஷண் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பாலிவுட்டில் போதைப்பொருள் பழக்கம் 90சதவீதம் இருப்பதாக திரைப்பட நடிகை ஒருவரே கூறுவதை பார்த்து நான் வெட்கப்படுகிறேன்,," என்று பேசினார்.
மறுபுறம் கங்கனா ரனாவத்தின் சர்ச்சை கருத்துக்கு எதிர்வினையாற்றிய நடிகை ரவீனா டாண்டன், பொதுவான கருத்தாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையதல்ல என்று கூறினார்.

கங்கனாவின் குற்றச்சாட்டுகள்
முன்னதாக, பாலிவுட்டின் 99% போதைக்கு அடிமையானவர் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டினார்,
இந்த கருத்துகள் தொடர்பாக மும்பை காவல்துறையும் கங்கனாவிடம் விசாரணை நடத்தியது. ஏனெனில் கங்கனாவின் நெருங்கிய நண்பராக முன்பு இருந்த அத்யயன் சுமன் 2016இல் அளித்த பேட்டியொன்றில், கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறியிருந்தார். ஆனால், 2020இல் அவர் நான் உணர்ச்சிவசப்ட்டு அவ்வாறு பேசியிருந்தேன். என்னை இந்த சர்ச்சையில் சிக்க வைக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொண்டார்.
இத்தைய சூழலில்தான் தாமும் ஒரு காலத்தில் போதைக்கு அடிமையாகியிருந்ததாக கங்கனா ரனாவத்தே ஒரு காணொளியில் பேசியது ஓராண்டுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது.
இந்த சர்ச்சை பிரபலங்களின் கருத்துகளைத் தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகள் மீது தங்களுடைய துறை ஒரு கண் வைத்துள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை துணை இயக்குநர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா கூறியிருந்தார்,
"நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம். சிலரின் பெயர்கள் விசாரணையில் வந்துள்ளன. அந்த பெயர்கள் பற்றி ஊடகங்களில் என்ன கூறப்பட்டாலும் அது வெறும் ஊகம் தான். விசாரணையில், சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள், எனவே அவர்களின் பெயர்களை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது," என்று மலோஹோத்ரா தெரிவித்தார்.
கேபிஎஸ் மல்ஹோத்ராவின் கூற்றுப்படி, போதைப்பொருள் விற்பனையாளர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரைப்பட நடிகர்கள் என பலரும் அவர்களின் விசாரணை வளையத்தில் இருந்தனர்.
பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விஷயத்தில் மெளனம் காத்தனர், பலர் தொடர்பு கொண்ட பின்னரும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க மறுத்தனர்.

பட மூலாதாரம், Iqbal Perwez/BBC
மனம் திறந்த ஷெர்லின் சோப்ரா
இந்த நிலையில், பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நடிகை ஷெர்லின் சோப்ரா பேட்டியொன்றில் கூறி மீண்டும் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கினார்.
"ஆரம்பத்தில், சில திரைப்படத் தயாரிப்பாளர்கள் விருந்துகளுக்கு அழைத்தார்கள். பிறகு அங்கு செல்வது நெட்வொர்க்கிங் மூலம் பிற தொடர்புகளை வளர்த்துக் கொள்வது என வாய்ப்புகள் அமையும். நான் அப்படி சில பாலிவுட் நிகழ்ச்சிகளைப் பார்த்துள்ளேன். குறைந்த நெட்வொர்க்கிங் மற்றும் அதிக போதை தொடர்புகள் நிறைந்த உலகம் அது. இதனால் நான் அத்தகைய விருந்துகளுக்கு செல்வதை நிறுத்தினேன்," என்று ஷெரின் கூறினார்.
என்சிபி துணை இயக்குநர் கேபிஎஸ் மல்ஹோத்ரா, கடந்த காலங்களிலும் தங்களுடைய துறைக்கு பல போதைப்பொருள் புகார்கள் வந்தததாக தெரிவித்தார்.
ஆனால், இதுபோன்ற விசாரணைகளில் முடிவு எப்படியிருக்கும் என்பதை வெளியே தெரியவே தெரியாது என்கிறார் ஷெரிலின்.
"என்சிபி விசாரணையில், விற்பனையாளர்கள், வியாபாரிகளின் பெயர்கள் நிச்சயம் தெரியவரும், ஆனால் இவர்களில் சிலரது பெயர் வெளியே தெரியாது அல்லது தொடர்புடையவர்கள் தப்பி விடுவார்கள். விஷயம் அமைதியானவுடன், இந்த மக்கள் வெளியே வந்து தங்கள் வேலையில் தொடருவார்கள்," என்றார் ஷெர்லின்.
பாலிவுட்டின் புகழ்பெற்ற போதைப்பொருள் வழக்கு
வழக்கமாக இதுபோன்ற போதைப்பொருள் வழக்குகளில், தீவிர விசாரணையிலும் அதிகாரபூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படாது. பாலிவுட்டில் இப்படி சில போதைப்பொருள் வழக்குகள் பல முறை விவாதப்பொருளாகியிருக்கின்றன.
திரைப்பட உலகின் சில பிரபலங்கள் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது, அதே நேரத்தில் பல பிரபலங்கள் போதை மறுவாழ்வில் சிகிச்சை பெற்றனர்.

பட மூலாதாரம், Sanjay Dutt/Instagram
நடிகர் சஞ்சய் தத் போதை மருந்துகளை எடுத்துக்கொண்ட விவகாரம், பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் வழக்கு. அவரது தந்தை சுனில் தத் அவரை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார், அதன் பிறகு சஞ்சய் தத் பாலிவுட்டில் மீண்டும் வந்தார். சஞ்சய் தத்தின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்ட 'சஞ்சு' படத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதீக் பாபர்
ராஜ் பப்பர் மற்றும் ஸ்மிதா பாட்டீலின் மகன் பிரதீக் பாப்பரும் 13 வயதில் இருந்தே போதை மருந்து உட்கொள்ள ஆரம்பித்ததாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவர் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் போதைப்பொருட்களிலிருந்து விடுபட்ட போதிலும், போதைப்பொருட்களுடன் சிகிச்சையளிக்கப்பட்டார். அதன் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டவர் திரும்புவது அவரதவர் அதிர்ஷ்டமே என்று பிரதீக் பாபர் கூறினார்.
ஃபர்தீன் கான்
ஃபெரோஸ் கானின் மகன் பர்தீன் கான் 2001ஆம் ஆண்டு மும்பை காவல்துறையினரால் போதைப்பொருளுடன் பிடிபட்டார். ஃபர்தீன் கானின் வழக்கு நீதிமன்றத்தை சென்றடைந்தது, அங்கு அவர் மறுவாழ்வு மையத்தில் இருந்து சிகிச்சை பெற ஏற்றுக்கொண்டார், இதன் காரணமாக அவருக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.
டிஜே அகீல்
பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் கானின் மருமகன் டிஜே அகீல் 2007 ஆம் ஆண்டு துபாயில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால் அவர் பின்னர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
புகழ்பெற்ற நடிகர் விஜய் ராஜ் 2005இல் போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டில் துபாயில் கைது செய்யப்பட்டார். ஆனாலும் அவரால் நிரபராதி என நிரூபித்து வெளியே வர முடிந்தது.

பட மூலாதாரம், Rahul Mahajan/FB
ராகுல் மகாஜன்
ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெரிய தலைவராக இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனின் பெயரும் போதைப்பொருளுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு செல்ல நேர்ந்தது. அதிகப்படியான போதைப்பொருள் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.
மும்பையில் பார்ட்டிகளின் வகைகள் என்ன?
மும்பையில் திரைப்பட நட்சத்திரங்களின் பல வகையான விருந்துகளும் உள்ளன, அங்கு பல்வேறு வகையான பொழுதுபோக்குகள் உள்ளன.
சில சமயங்களில் திரைப்படங்களின் வெற்றி என்ற பெயரிலும் சில சமயங்களில் முஹூர்த்தாவின் பெயரிலும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஊடகங்கள் முன்னிலையில்தான் பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களுடைய பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடுகிறார்கள், அதனால் ஊடகங்கள் இருக்கும் நிகழ்வுகளில் பெரும்பாலும் இதுபோன்ற போதைப்பொருள் பயன்பாடு வெளிப்படையாக இருக்காது.
உண்மையில், திரைப்பட நட்சத்திரங்கள் சில நேரங்களில் தனியார் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள், அங்கு ஊடகங்கள் அழைக்கப்படுவதில்லை. இது தவிர, டிஸ்கோக்கள் மற்றும் பப்களின் கொண்டாட்டங்கள் என பல நிகழ்ச்சிகள் உள்ளன. ரேவ் பார்ட்டிகள் பேர் போனது மும்பை நகரம். அத்தகைய ரேவ் பார்ட்டிகளில் போதைப்பொருள் கலாசாரம் அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது வெளிப்படுத்தப்படவில்லை. சில நேரங்களில் அவை ஊடக வெளிச்சத்துக்கு வந்து மறைகின்றன.
பிற செய்திகள்:
- மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு
- உலக தலைவர்களின் ரகசிய சொத்து விவரங்களை அம்பலப்படுத்தும் புலனாய்வு - விரிவான தகவல்கள்
- பிங் - 'மைக்ரோசாஃப்ட் தேடுபொறியில் போய் கூகுள் என்றே தேடுகிறார்கள்'
- இத்தாலியில் கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்: 8 பேர் பலி
- மும்பை சொகுசுக் கப்பலில் போதை விருந்து? ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது
- உ.பி-யில் பாஜக அமைச்சரின் கார் அணிவகுப்பு மோதியதால் விவசாயிகள் இறந்ததாக குற்றச்சாட்டு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












