பிங்: 'மைக்ரோசாஃப்ட் தேடுபொறியில் போய் கூகுள் என்றே தேடுகிறார்கள்' - Google vs Bing

Bing

பட மூலாதாரம், Getty Images

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணைய தேடு பொறியான பிங் (Bing) தேடு பொறியின் மிகப்பெரிய போட்டியாளர் கூகுள்தான் ஆனால் பிங்கில் போய் பெரும்பாலானவர்கள் தேடுவது 'Google' என்பதைத்தான் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.

சந்தையில் தமக்கு இருக்கும் ஆதிக்கத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கூகுள் நிறுவனத்திற்கு விதித்த 430 கோடி யூரோ (சுமார் 37,000 கோடி இந்திய ரூபாய்) அபராதத்தை எதிர்த்து கூகுள் நிறுவனம் செய்த மேல்முறையீட்டின் போது இந்த தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறன்பேசிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது. இதனால் கூகுள் தேடுபொறியை செல்பேசிகளில் 'டீஃபால்ட்' தேடுபொறியாக கூகுள் நிறுவனம் ஆக்கியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது.

ஆனால் தங்களது தேடுபொறிதான் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.

கூகுள் என்ற சொல்தான் பிங் தேடுபொறியில் மிகவும் அதிகமாக தேடப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம் என்று அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் அல்ஃபோன்சோ லாமாட்ரிட் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

"பயனர்கள் கட்டாயப் படுத்தப் படுவதால் கூகுள் தேடுபொறியை பயன்படுத்துவதில்லை; அதுதான் அவர்களின் தெரிவாகவே இருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பிற தேடு பொறிகளைவிட கூகுளை பயன்படுத்தவே 95 சதவிகித பயனர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது," என்று அல்ஃபோன்சோ லாமாட்ரிட் தெரிவித்துள்ளார்.

Google

பட மூலாதாரம், Getty Images

2018ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு எதிராக கூகுள் மேல்முறையீடு செய்ததில் பயனர்கள் தாங்களாகவே கூகுள் தேடுபொறியை பயன்படுத்துகிறார்கள் எனும் வாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

அந்த நேரத்தில், "ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயனர்களுக்கு குறைவான தெரிவுகளை அல்லாமல் அதிகமான தெரிவுகளை வழங்கியுள்ளது," என்று கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தமது வலைப்பூவில் எழுதியிருந்தார்.

"ஆண்ட்ராய்டு செல்பேசி உற்பத்தியாளர்களிடம் கூகுள் தேடல் செயலி மற்றும் கூகுளின் க்ரோம் ப்ரவுசர் ஆகியவற்றை தயாரிப்பின் பொழுதே இன்ஸ்டால் செய்ய வைத்த கூகுள் அதை மட்டுமே தயாரிப்பின் போது நிறுவப்பட்ட செயலியாக ஆக்குவதற்கு சிலருக்கு பணமும் அளித்தது. இதனால் ஒரு சதவிகித பயனர்கள் மட்டுமே பிற தேடு பொறிகளின் செயலியை தங்கள் செல்பேசியில் நிறுவினார்கள்," என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அப்போதைய சந்தைப் போட்டிகளுக்கான ஆணையர் மார்க்ரெட் வெஸ்டேகர் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :