தந்தை சொன்ன ஒற்றை சொல்... 5௦ ஆண்டுகளாக வழிபோக்கர்களின் தாகம் தணிக்கும் சேலம் விவசாயி

- எழுதியவர், ஏ.எம். சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கணவாய் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேலு. நாமக்கல் மாவட்டம் மேலப்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை பழனிசாமி 75 ஆண்டுகளுக்கு முன் கணவாய் மேடு பகுதியில் விவசாய நிலம் வாங்கி குடும்பத்தோடு குடியேறினார்.
அப்போது அவர் குடியிருந்த பகுதி வழியாக மக்கள் செல்வர். ஆனால் அந்த காலத்தில் சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் கணவாய் மேடு பகுதியை கால்நடையாக கடந்து செல்லும் வழிப்போக்கர்கள் சாலையோரத்தில் உள்ள விவசாயி பழனிசாமியின் தோட்டத்திற்கு வந்து தண்ணீர் வாங்கி குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டு, சற்று நேரம் மரத்தடி நிழலில் அமர்ந்து இளைப்பாறிச் சென்றனர்.
இதனை தினந்தோறும் பார்த்து வந்த, அப்போது சிறுவனாக இருந்த தங்கவேல் வழிப்போக்கர்கள் தாகம் தீர்க்க சாலையோரத்தில் உள்ள தங்களது நிலத்தில் மரத்தடி நிழலில் ஒரு மண்பானையில் தண்ணீர் வைத்துள்ளார். அவ்வழியாக செல்வோர் இந்த பானைத் தண்ணீரை குடித்து தாகம் தீர்த்துக் கொண்டனர். இதனை கண்ட அவரது தந்தை பழனிசாமி ‘நான் இல்லையென்றால் கூட நீ ஒருநாளும் தவறாமல் பானையில் தண்ணீர் வைத்து மக்களின் தாகம் தீர்க்க வேண்டும்’ என்று தங்கவேலுவிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, அதே இடத்தில் மண்பானையில் தண்ணீர் வைத்து வருகிறார் தங்கவேலு. தற்போது 70 வயதை கடந்த முதியவரான தங்கவேல், பானை வைத்து உள்ள இடத்தை சுற்றி வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி ஓய்வு எடுப்பதற்கு வசதியாக தரைமட்ட திண்ணையும் அமைத்துள்ளார்.

இது குறித்து பிபிசி தமிழுக்காக தங்கவேலுவிடம் பேசினோம் "5௦ ஆண்டுகளுக்கு மேல் இருக்கும், அப்போது பேருந்து வசதி எல்லாம் கிடையாது. இங்கே சாலை எல்லாம் இல்லை, நடைபாதை மட்டும் தான் இருக்கும்.
அப்போது இந்த வழியாக வரும் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, என் தந்தை, இந்த பானையில் தண்ணீர் கொண்டு வந்து வைக்கச் சொல்வார், நானும் வைப்பேன். அதை அவர்கள் தாகம் தீர குடிப்பார்கள், வெயில் நேரமாக இருந்தால் மரத்தடியில் சற்று நேரம் ஓய்வு எடுப்பார்கள்.
ஒரு நாள் என் தந்தை இறக்கும் தருவாயில் என்னை கூப்பிட்டு ஒரு வார்த்தை கூறினார். எனக்குப் பிறகும் இந்த தண்ணீர் வழங்கும் தர்மத்தை மறக்காதே தொடர்ந்து மக்களுக்கு செய்யும் இந்த சேவையை பின்பற்றி கொண்டே இரு என்றார்.
அவர் சொன்ன காலத்தில் இருந்து இதுவரை நான் செய்து கொண்டே தான் வருகிறேன். கோடை காலங்களில் நடந்து வருபவர்கள், இருசக்கர வாகனம், காரில் வருோர் என பலரும் இங்கு நின்று நீர் அருந்திச் செல்வர்.

ஏதாவது விசேஷம் என்று நான் வெளியூர் சென்றால் கூட என் மனைவியிடம் தண்ணீர் வைக்குமாறு கூறிவிட்டு தான் செல்வேன். இப்படி 5௦ ஆண்டுகளுக்கு மேல் ஒரு நாள் கூட இடைவிடாமல் இதை செய்து வருகிறேன்.
“70 வயதிலும் இதுபோன்ற சேவை செய்கிறாரே என மக்கள் வாழ்த்துவது கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஒருவர் அந்த பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதை பார்க்கும் போது இறந்து போன என் தந்தையே என்னுடன் உள்ளது போல எனக்கு ஓர் உணர்வு வரும்" என்றார்
தங்கவேலு வைத்திருக்கும் குடிநீர் பானையைப் பயன்படுத்தும் சாலை ஓர வியாபாரி பாவா என்பவரிடம் பேசினோம் "நான் 6 ஆண்டுகளுக்கு முன் சேந்தமங்களம் கோயில் திருவிழாவின் போது கோயில் முன்பு கடை போடுவதற்காக இந்த வழியாக வந்தேன்."
"அப்போது சாலை ஓரத்தில் இருந்த பானையை பற்றி கேட்டேன் அங்கிருந்தவர்கள் பல ஆண்டுகளாக இப்படி ஒரு பெரியவர் தண்ணீர் வைப்பதாகக் கூறினார்கள். ஆறு ஆண்டுகள் கழித்து இன்றும் இந்த வழியாக வந்தேன், பானையில் இருந்த தண்ணீரை தாகம் தீர குடித்தேன், இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனை பார்ப்பது அரிது," என அவரை வாழ்த்தினார் பாவா.
பிற செய்திகள்:
- CSK vs RR: ராயுடு விட்ட அந்த ஒரு கேட்ச்... ருத்ர தாண்டவமாடிய சிவம், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- 'நாங்களும் முஸ்லிம் நாடுதான்' - தாலிபன்களிடம் கத்தார் கோபம்
- டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி: மும்பையின் ப்ளே-ஆஃப் கனவுக்கு அடிமேல் அடி
- ராஜீவ் காந்தி படுகொலையும் போலீஸ் தொப்பியும்: ஓய்வுபெறும் நாளில் கலங்கவைத்த ஐ.பி.எஸ் அதிகாரி
- நவ்ஜோத் சிங் சித்து: அரசியல், கிரிக்கெட் என அனைத்திலும் சர்ச்சை நாயகன்
- சமந்தா விவாகரத்து: 'நாக சைதன்யாவும் நானும் இனி கணவன் - மனைவி இல்லை'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












