ஹவுசிங் லோன், பைக் லோன் வாங்குவதில் என்ன சிக்கல்? அதற்கு மாற்று வழி என்ன? - ஆனந்த் சீனிவாசன் தரும் ஆலோசனை

தனிநபர் கடன், வீட்டுக் கடன், கடன் வாங்கி முதலீடு, கிரெடிட் கார்டு என கடன்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவருகின்றன. இந்த நிலையில், கடன்களை வாங்கலாமா, எப்படி நிர்வகிக்கலாம் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனிடம் பேசினார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

அந்தப் பேட்டியிலிருந்து.

கே. ஒருவர் எதற்காக கடன்களை வாங்கலாம், வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?

கடன் வாங்குவதே தவறு. இரண்டு விதமாக நாம் செலவு செய்வோம். ஒன்று உணவு போன்ற அத்தியாசிய செலவுக்காக. மற்றொன்று முதலீட்டுக்காக. இந்த இரண்டுக்காகவும் கடன் வாங்குவது தவறு. 2010வரை, கடன் வாங்கி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சற்று லாபகரமாக இருந்தது. ஆனால், 2012 வாக்கில் ரியல் எஸ்டேட் முழுமையாக முடங்கிவிட்டது. இந்த நிலையில் கடன் வாங்கி வீடு வாங்குவதே தவறு.

நீங்கள் செல்போன் வாங்க விரும்புகிறீர்கள். ஆனால், பணம் இல்லை. உடனே கடன் வாங்கி அதை வாங்கிவிடுகிறீர்கள். அதில் ஏதோ ஒரு நிறைவு கிடைக்கிறது. ஆனால், கடன் வாங்குவதற்குப் பதிலாக, பணத்தை சேமித்து, அதில் போனை வாங்கினீர்கள் என்றால் பல மடங்கு நிறைவு கிடைக்கும். ஆகவே, பணத்தைச் சேமித்து பொருட்களை வாங்க வேண்டுமே தவிர, கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது.

கே. ஒருவர் தனக்கு மிகத் தேவையான இரு சக்கர வாகனத்தை வாங்க கடன் வாங்கி, அதனைப் பயன்படுத்திக்கொண்டே அந்தக் கடனைத் திருப்பி செலுத்தலாம் அல்லவா?

ப. தேவையே இல்லை. அவர் அதற்குப் பதிலாக, பணத்தை சேமித்து, பிறகு வண்டி வாங்குவதுதான் சரியானது. அதுவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், நடுவில் என்ன தேவை வரும் எனத் தெரியாது.

உதாரணமாக, 3 ஆண்டுகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதைப் போல கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால், அதற்கு நடுவில் வேலை போய்விட்டால் என்ன செய்வது? அதை மீறி வேலையில் இருக்க வேண்டுமென்றால், அந்த வேலைக்கு அடிமையாகிவிடுகிறீர்கள் அல்லவா?

நீங்கள், 30,000 ரூபாய் சம்பளம் வாங்கினால் 3 லட்ச ரூபாய் கடன் வாங்குமளவுக்கு கிரெடிட் கார்டு கிடைக்கிறது. கல்லூரிவரை பணத்தை பெரிதாக செலவழித்து பழக்கமில்லாதவர்கள், அந்த மூன்று லட்சத்தையும் செலவழித்துவிடுவார்கள். பிறகு, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்த அளவு பணத்தைச் செலுத்த முடியுமோ, அந்த அளவுதான் திரும்பிச் செலுத்துவார்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், 60 சதவீதம் வட்டி செலுத்த வேண்டிவரும். இதுபோல பலர் சிரமப்படுகிறார்கள். ஆகவே, பணத்தைச் சேர்ந்து பொருளை வாங்க வேண்டியதுதானே..

கே. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை துணிச்சலாக 'விலங்கு போன்ற உள்ளுணர்வுடன்'உடன் செயல்படுவதுதான் சரி என்பார்கள். நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே...

ப. தவறு. நான் ஆரம்பித்த எந்தத் தொழிலிலுமே நான் முதலீடு செய்ததில்லை. அதுதான் 'Animal instinct' என்று சொல்லப்படும் விலங்கின உள்ளுணர்வு அதுதான். இப்போது வெற்றிகரமாக உள்ள எந்த நிறுவனமுமே நிறுவனரின் பணத்தில் துவங்கப்பட்டதில்லை. வேறு முதலீட்டாளர்களை வைத்துத்தான் துவங்கப்பட்டது. உங்கள் திட்டம் சிறப்பாக இருந்தால், பணம் செலவழிக்க ஆட்கள் வருவார்கள்.

கே. வண்டி போன்ற சிறிய செலவுகளை பணத்தைச் சேர்த்து வாங்கிவிடலாம். ஆனால், வீடு போன்ற பெரிய முதலீடுகளைச் செய்யும்போது முழுப் பணத்தையும் சேமித்து வாங்க முடியுமா?

ப. முதலில், வீடு எதற்காக வாங்க வேண்டும்? இது முதலீடே கிடையாது. முதலீடு என்றால் நீங்கள் போட்ட பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிறகு அது வளர வேண்டும். இதுதான் முதலீட்டிற்கான இரண்டு சோதனை.

எனக்குத் தெரிந்த ஒருவர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நான்கரை கோடி ரூபாய்க்கு ஒரு பங்களாவை வாங்கினார். இப்போது அதே போன்ற பங்களா மூன்றரைக் கோடிக்குக் கிடைக்கிறது. இப்போது என்ன செய்வது?

நகரின் சில பகுதிகளில் விலை ஏறியிருக்கலாம். அது தாயக்கட்டையில் தாயம் விழுவதைப் போல. நிச்சயமாக நடக்குமென சொல்ல முடியாது. ஆகவே, வீடுகளை வாங்குவது முதலீடு எனச் சொல்லக்கூடாது.

கே. பலருக்கும் வீடு என்பது கனவாக இருக்கிறது. அம்மாதிரி சூழலில் கடன் வாங்கி வீடே வாங்கக்கூடாது என்று சொல்ல முடியுமா?

ப. நான் வாங்க மாட்டேன். நீங்கள் கடன் வாங்கி வீடு வாங்கலாம். எப்போது என்றால், நீங்கள் வாங்கும் கடனுக்குச் செலுத்தும் தவணையும் வீட்டு வாடகையும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்குமென்றால் அப்போது வாங்கலாம். அதற்கு மாறாக, நகரிலிருந்து வெகுதூரத்தில் வீட்டை வாங்கி குடியேறுவது தவறு. நகருக்குள் வந்து செல்வதிலேயே பாதி நேரம் போய்விடும். அதில் ஒரு லாபமும் இல்லை.

கே. அப்படியானால், 80 லட்சம் மதிப்புள்ள வீட்டிற்கு 60 லட்சத்தை சேர்த்து வைத்து கட்டிவிட்டு, மீதமுள்ள 20 லட்சத்தை கடனாக வாங்கலாமா?

ப. அப்படியல்ல. 60 லட்சத்திற்கு வட்டி யார் கொடுப்பது? நீங்கள் வீட்டை முதலீடு என்று கருதினால், அதிலிருந்து லாபம் வர வேண்டுமல்லவா? இந்த அறுபது லட்சத்தை அரசுக்குக் கடனாகக் கொடுத்தால்கூட, ஆண்டுக்கு 4 லட்சம் வட்டி கிடைக்கும்.

இன்று சென்னையில் பல வீடுகள் விற்காமல் கிடக்கின்றன. சென்னையில் உள்ள அனைவருக்கும் வீடு அளிக்குமளவுக்கு வீடுகள் இருக்கின்றன. நீங்கள் 10 -15 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் கையில் கிடைக்கும்.

கே. கடன் வாங்கி முதலீடுகள் செய்யலாமா?

ப. ஒரு வர்த்தகர் அதனைச் செய்யலாம். சாதாரண மனிதர்கள் செய்யக்கூடாது. வரும் காலம் தங்கத்திற்கு மோசமான காலமாக இருக்கும். நான் நீண்ட காலமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம் என சொல்லிவருகிறேன். அதற்காக, இப்போது நீங்கள் கடன் வாங்கி தங்கத்தில் முதலீடு செய்தால் சிரமம்தான். ஆகவே, எந்த நேரத்தில் முதலீடு செய்கிறோம் என்பது மிக முக்கியம். இது போன்ற சிக்கல்கள் இருக்கும்போது சாதாரண மனிதர்கள் கடன் வாங்கி முதலீடுகளைச் செய்யக்கூடாது.

கடன் வாங்குவது தொடர்பான ஆனந்த் சீனிவாசனின் முழுமையான பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :