You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ:
ஸ்டாண்ஃபோர்டில் 1960களில் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதற்குப் பெயர் மார்ஷ்மெலோ சோதனை எனப் பெயர். மார்ஷ்மெலோ என்பது அமெரிக்காவில் ஒரு மிட்டாய்.
மிகச் சிறிய வயது குழந்தைகளுக்கு முன்பாக அந்த இனிப்பை வைத்தார்கள். அந்த அறையில் யாருமே இருக்க மாட்டார்கள். ஐந்து நிமிடம் அந்த இனிப்பைத் தொடாமல் இருந்தால் இரண்டு மார்ஷ்மெலோ தருவதாகச் சொல்வார்கள். எவ்வளவு குழந்தைகளால் ஐந்து நிமிடம் பொறுமையாக இருக்க முடியும் என்று பார்த்தார்கள்.
அப்படி தாமதமாக இனிப்பைச் சாப்பிடத் தயாராக இருந்த குழந்தைகள் பிற்காலத்தில் சிறப்பாக இருந்தார்கள்.
இப்போது ஒரு பொருளை வாங்க வேண்டுமென்பது, இது போன்ற ஒரு ஆசைதான். அந்த ஆசையை, விருப்பத்தை தள்ளிப்போட முடிந்தால் சிறப்பானதாக இருக்கும். ஒரு டிவியை 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டு, 2 ஆண்டுகள் தவணை கட்ட தயாராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்குப் பதிலாக, ஒரு ஆண்டில் அதற்கான பணத்தை சேமித்து, பிறகு டிவி வாங்குங்கள். எந்த கடன் தொல்லையும் இல்லாமல், சிறப்பாக அந்த டிவியை அனுபவிக்கலாம். வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு இருக்கும்.
1991க்கு முன்பாக பெரும்பாலானவர்கள் இப்படித்தான் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் இந்த நுகர்வுப் போக்கு வந்தது. அது தவறல்ல, ஆனால், பணத்தை சேர்த்து வைத்து வாங்குவது நல்லது.
செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு கான்செப்ட் இருக்கிறது. சிறு வயதில் வீட்டில் ஒவ்வொரு செலவுக்குமான பணத்தை கண்ணாடி பாட்டில்களில் வைப்பார்கள். அந்தச் செலவுக்கான பணம் தீர்ந்துவிட்டால், அதேபோன்ற செலவை அடுத்த மாதம்தான் செய்ய முடியும். இந்த பாணியை பின்பற்றினால் செலவை வெகுவாகக் கட்டுபடுத்த முடியும்.
இதனால்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்தக்கூடாது என்கிறேன். சரியாக ஐம்பதாவது நாளில் பணத்தைக் கட்டிவிடுவதாக சிலர் சொல்வார்கள். பத்து வருடம் ஒழுங்காகக் கட்டியவர்கூட 11வது வருடம் மிக மோசமாக மாட்டிக்கொள்வார்.
தற்போது நிறைய சம்பாதிப்பவர்கள், நிறைய செலவழிக்கலாமா எனக் கேட்கிறார்கள். உலகில் டாக்டர், பட்டயக் கணக்காளர், வழக்கறிஞர்கள் போன்ற இரண்டு - மூன்று தொழிலில் இருப்பவர்கள்தான் கடைசிவரை சம்பாதிக்க முடியும்.
மற்றவர்களுக்கு வேலை பார்ப்பது ஒரு கட்டத்தில் நின்று விடும். அதற்குப் பிறகும் 20-30 ஆண்டுகள் உயிரோடு இருப்பார்கள். அப்போது என்ன செய்வது? ஆகவே நிறைய சேமிக்க வேண்டும். உண்மையில், நிறைய சம்பாதிப்பவர்கள், நிறைய சேமிக்க வேண்டும்.
கடன் அட்டைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். கையில் காசு இருந்தால் பொருளை வாங்குவோம். இல்லாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டும். நீங்கள் சரியான நாளில் பணத்தை திரும்பச் செலுத்தாவிட்டால், அந்த கடன் வலையிலிருந்து வெளியில் வரவே முடியாது. ஏனென்றால், இதில் 60 சதவீதம் வட்டி இருக்கும்.
அவசர செலவுக்காக கடன் அட்டையை வைத்திருப்பதாகச் சொல்வது தவறு. அவசர செலவுக்கு வீட்டில் உள்ள தங்கத்தை அடகு வைத்து அந்தச் செலவைச் சமாளிக்கலாம் என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
இது தவிர, செலவு செய்வது குறித்து இன்னும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள:
பிற செய்திகள்:
- 30,000 அடி உயரத்தில் விமானத்தில் பிறந்த குழந்தை - பிரசவம் பார்த்தது யார்?
- தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
- கொரோனா எங்கு தோன்றியது? பல துருவங்களாக பிரிந்து நிற்கும் அமெரிக்க உளவுத் துறை
- உலகின் வடகோடியில் உள்ள தீவு: வழி மாறிச் சென்றவர்கள் கண்டுபிடித்த சுவாரசியம்
- “இம்சை அரசன் படத்தை ஒத்துக் கொண்டது என் கெட்ட நேரம்”- நடிகர் வடிவேலு பேட்டி
- மீண்டும் திறந்த திரையரங்குகள் மீண்டுவர எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்