அவசரமாக நாடாளுமன்றம் செல்லும் ஆசையில் கட்சி தாவினாரா கன்னையா குமார்?

ராகுல்

பட மூலாதாரம், Twitter/@INCIndia

    • எழுதியவர், வாத்சல்ய ராய்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிஹாரின் பெகுசராய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் போட்டியிட்டவருமான கன்னையா குமார் செவ்வாயன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் காங்கிரஸில் சேர்ந்தார் அவர். குஜராத் தலித் தலைவரும் எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசில் சேர்ந்தார்.

நாட்டைக் காப்பாற்றுவதற்காகத்தான் காங்கிரசில் இணைகிறேன் என்று கன்னையா குமார் கூறினார். மகாத்மா காந்தி மற்றும் பகத்சிங்கின் கனவை காங்கிரசால் மட்டுமே நனவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

"உங்கள் எதிரியைத் தேர்ந்தெடுங்கள், நண்பர்கள் தானாகவே உருவாகிவிடுவார்கள். நாங்கள் நாட்டின் மிகப் பெரிய ஜனநாயகக் கட்சியில் சேர விரும்புகிறோம், ஏனென்றால் காங்கிரஸ் காப்பாற்றப்படாவிட்டால் தேசம் காப்பாற்றப்படாது." என்று அவர் கூறினார்.

மகாத்மா காந்தியின் கருத்துகளை காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

கன்னையா குமார் காங்கிரஸில் சேரலாம் என்பது குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கடந்த சில நாட்களாகப் பரவி வந்தன. அவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு காங்கிரஸில் சேருவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் திங்களன்று தெரிவித்திருந்தன.

ஆனால், செவ்வாய்க்கிழமை அதே நேரத்தில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்குச் சற்று நேரத்தில், கன்னையா குமார் காங்கிரஸில் சேருவதற்கான அறிவிப்பு வெளியானது.

'சித்தாந்தம் ஒரு பொருட்டன்று'

காங்கிரஸ் தலைவர்கள் கன்னையா குமாரைக் கட்சியில் இணைப்பதன் மூலம் கட்சி வலுப்பெறும் என்று கூறுகின்றனர். இதற்கிடையில், கன்னையா குமார் ஒரு "சந்தர்ப்பவாதி" என்று சிபிஐ குற்றம் சாட்டியது, அவருக்கு எந்தவிதமான மக்கள் ஆதரவும் இல்லை, அவர் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. எனவே அவரால் காங்கிரஸுக்கு எந்த நன்மையும் விளையாது என்றும் சிபிஐ கூறுகிறது.

மூத்த சிபிஐ தலைவர் அதுல் குமார் அஞ்சான் பிபிசி செய்தியாளர் மோகன்லால் சர்மாவிடம், கன்னையா குமார் ராஜ்யசபா உறுப்பினராகும் அவசரத்தில் கட்சி மாறியுள்ளார் என்று கூறினார்.

அதுல் குமார் அஞ்சான், "அவர் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இடம் பெறும் அவசரத்தில் செயல்படுகிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றிருப்பதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகும் அவருடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறுகிறார்.

கன்னையா குமார்.

பட மூலாதாரம், DEBAJYOTI CHAKRABORTY/NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, கன்னையா குமார்.

சிபிஐயில் சித்தாந்தம் முக்கியம், ஆனால் கன்னையா குமாருக்கு சித்தாந்தம் முக்கியமில்லை என்று அதுல் குமார் அஞ்சான் கூறினார். கன்னையா குமார் நீண்ட காலமாக ஒரு புதிய கட்சியைத் தேடிக்கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார்.

"அவருடைய சிந்தனை தெளிவாக இருந்தால், அவர் ஏன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு போகிறார்? முன்பு அவர் JDU க்குச் செல்ல இருந்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு அவரைப் பற்றி ஒரு பெரிய விவாதம் நடந்தது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரையும் அவர் சந்தித்தார்." என்கிறார் அதுல் குமார்.

'சிபிஐ கட்சிக்குத் தகவல் தரவில்லை'

அவர் காங்கிரஸில் சேரும் தனது எண்ணம் குறித்து சிபிஐ கட்சிக்குத் தகவல் அளிக்கவில்லை என்றும் அதுல் குமார் அஞ்சான் கூறுகிறார்.

"மூன்று நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை, அவர் (கன்னையா) கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அதற்கு முன்பே, தேசிய நிர்வாகிகள் கூட்டம் செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்தது. அந்தச் சந்திப்பில், அவர் எனக்கு அருகில் தான் அமர்ந்திருந்தார்." என்று அதுல் குமார் கூறுகிறார்.

காங்கிரஸ் மற்றும் பீகார் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் ஊர்மிலேஷ், காங்கிரசில் சேரும் கன்னையாவின் முடிவு அவருடைய நோக்கம் என்ன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் இந்த முடிவிற்கும் சித்தாந்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார்.

மேலும் அவர், "இந்தியாவில் சிபிஐ கட்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசியலில் ஈடுபடும் ஆர்வமுள்ள ஓர் இளம் தலைவர், தனக்கு நல்ல எதிர்காலம் தேவையென்றால், வேறு கட்சிக்குப் போக வேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் பக்கம் சென்றிருக்கிறார்" என்று கூறுகிறார்.

"அவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகத்தான், கடந்த முறை பெகுசராயில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தார். இதில் சித்தாந்தத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் சந்தர்ப்பவாதம்" என்றும் ஊர்மிலேஷ் கூறுகிறார்.

வட இந்தியாவில் சிபிஐயின் பலவீனமான நிலை காரணமாக, கன்னையா குமார் காங்கிரசில் சேர முடிவு செய்திருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

'சிபிஐ தான் அவரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது'

ஆனால், அதுல் குமார் அஞ்சான் இதற்கு உடன்படவில்லை. இன்று கனையா குமார் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் கட்சிக் கட்டமைப்பு தான் என்று அவர் கூறுகிறார்.

"அவருக்கு எந்த அமைப்பிலும் செயல்படும் திறன் இல்லை. எங்கள் அமைப்பின் காரணமாகவே அவர் மாணவர் சங்கத் தலைவரானார். அடுத்த முறை அந்த அமைப்பையே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார். எங்களில் ஒருவர் கூட தேர்தலில் போட்டியிடத் தகுதியானவராக இல்லை." என்கிறார் அதுல் குமார்.

கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி.

மேலும் அவர், "நாங்கள் அவரை பெகுசராயில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடச் செய்தோம். நாங்கள் இந்தத் தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றோம். முன்பு நாங்கள் 10-15 லட்சம் ரூபாய்க்குள் தேர்தலில் போட்டியிட்டோம். அவர் எங்கிருந்து கோடிக்கணக்கில் வசூலித்தார் என்பது தெரியாது. மக்களிடம் நிதியுதவி பெற்று மிகப் பெரிய அளவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், தேர்தலில் அவர் நான்கு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதுபோன்ற தோல்வியை நாங்கள் பார்த்ததேயில்லை. " என்று கூறுகிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் சிபிஐ வேட்பாளராகப் போட்டியிட்டார் கன்னையா குமார். அப்போது பாரதிய ஜனதா தலைவர் கிரிராஜ் சிங் பெகுசராயில் வெற்றி பெற்றார்.

"கன்னையா குமார் எந்த சமூகத்தினருக்காகவும் எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை. தொழிற்சங்கத்திலும் பணியாற்றவில்லை. விவசாயிகள் விவகாரத்திலும் எந்தச் செயல்பாடும் அவரிடம் இல்லை. மக்களவைத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பெகுசராயில், அவரின் வசிப்பிடமான பரௌனி தொகுதியில் நாங்கள் 54 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றோம்."

மூத்த பத்திரிகையாளர் ஊர்மிலேஷ் கூறுகையில், ஊடகங்கள் கொடுத்த அதிக முக்கியத்துவம் காரணமாக அவர் தன்னைத் தானே ஒரு தேசியத் தலைவராக எண்ணிக்கொள்ளத் தொடங்கினார் என்றார்.

"அவர் ஒரு தேசியத் தலைவர் என்று எண்ணும் அளவுக்கு அவருக்கு ஊடக வெளிச்சம் கிடைத்தது. ஒரு கல்லூரியின் மாணவர் தலைவர் அவர். அவ்வளவுதான். மக்கள் பணியோ அரசியல் செயல்பாடோ சமூகப் பணியோ எதிலும் அவருக்குப் பங்கு இல்லை. தனது பேச்சால் மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். மாணவர் சங்கத்தில் அவர் வெற்றி பெற்ற பிறகு, அவர் தனது தகுதிக்கு மீறிய பிரபலத்தைப் பெற்றுவிட்டார். அதனால் தன்னைத் தானே ஒரு பெரிய தலைவராக அவர் எண்ணிக்கொண்டார் என்று தான் நான் நினைக்கிறேன்" என்றார் அவர்.

அதுல் குமார் அஞ்சானும், கனையா குமார் எந்தப் போராட்டமும் செய்யவில்லை என்றும் கட்சிக்கும் எந்தச் சிறப்பு பங்களிப்பும் செய்யவில்லை என்றும் கூறினார்.

கன்னையா

பட மூலாதாரம், PARWAZ KHAN/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

படக்குறிப்பு, கன்னையா

"கன்னையா குமாருக்கு வெகு சுலபமாக எல்லாம் கிடைத்ததால் ஏற்பட்ட பலன் இது. அவர் எங்கு சென்றாலும் அவருக்கு விமான டிக்கெட்டுகளைக் கட்சி தன் செலவில் வழங்கியது. தன்னுடைய பாதுகாப்பு என்ற பெயரில் மூன்று, நான்கு பேரை அவருடன் அழைத்துச் செல்வார். கன்னையா குமார் வெளியேறியதால் சிபிஐ கட்சிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. மாறாக எங்கள் கட்சி இன்னும் வலுவடைந்தது. கட்சித் தலைவராக இருந்த ஸ்ரீபாத் அம்ரித் டாங்கே (எஸ்.ஏ.டாங்கே) கட்சியை விட்டுச் சென்றபோதுகூட கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றும் அதுல் குமார் அஞ்சான் கூறுகிறார்.

காங்கிரசுக்கு என்ன நன்மை?

ஆனால், கன்னையா குமாரின் வரவால், காங்கிரசுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா என்பது குறித்து, உர்மிலேஷ் கூறுகையில், காங்கிரஸ் வகுக்கவுள்ள வியூகத்தைப் பொருத்துத்தான் இதற்கான பதிலைக் கூற முடியும் என்று தெரிவித்தார்.

அவர், "2018 சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் பின்னர் அவர்கள் மத்தியப் பிரதேசத்தை இழந்தனர், ஏனென்றால் அவர்கள் சரியான நபர்களைக் கொண்டு சரியான வழியில் அரசு அமைக்கவில்லை. இதற்கு அக்கட்சியின் சித்தாந்த ரீதியான பலவீனம் காரணம். அக்கட்சியிடம் புதிய பார்வையோ சிந்தனையோ இல்லை" என்கிறார்.

ஊர்மிலேஷ் மேலும் கூறுகையில், "நாட்டின் பழமையான கட்சியில் புதுமை புகுத்தப்பட வேண்டும். அதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். ஆனால் எதைப் புகுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. வெளியிலிருந்து தலைவர்களைக் கட்சியில் இணைப்பதால் கட்சி வளராது. மக்கள் ஆதரவைப் பெற வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறாத தலைவர்கள் இருந்து என்ன பயன்? உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் நிலை என்ன என்று பாருங்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சிக்கல்" என்று கருத்து தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :