பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை

பாலியல் தொல்லை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலியல் தொல்லை

பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி போடு ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). இவர் ஓர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனக்குச் சொந்தமான காலி இடத்தில் அறை அமைத்து இருந்துள்ளார்.

அப்பொழுது காலி இடத்திற்கு அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6 மற்றும் 7 வயதுள்ள 2 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை நடராஜ் ஆசை வார்த்தை கூறி 28.11.2016 மற்றும் 30.11.2016 ஆகிய இரண்டு நாட்கள் அழைத்து பாலியல் தொல்லை தந்தது மட்டும் இல்லாமல் இதை வெளியே யாரிடமும் கூறினால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

பாலியல் தொல்லை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலியல் தொல்லை

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, போலீசில் புகார் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.

சுமார் ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.தனசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் நடராஜுக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இது தவிர, பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு தலா ரூபாய் 14 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார் நீதிபதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :