கொரோனாவை ஒழிக்க சிவப்பு எறும்பு சட்னி கட்டாயமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

பட மூலாதாரம், Getty Images
(இன்று 11.09.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்).
கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி கொடுக்க உத்தரவிட முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறியதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட்டு வருகின்றனர். இந்த சிவப்பு எறும்புகள் உடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதைத் தேங்காய் சட்னி போல பயன்படுத்துகிறனர்.
அண்மையில், ஒடிசாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்தாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், விக்ரம் நாத் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு பாரம்பரிய மருந்துகள் நிறைய உள்ளன. இவற்றையெல்லாம் கொரோனாவிற்கு மருந்தாக பயன்படுத்த முடியாது.
இந்த எறும்பு சட்னியை நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் இந்த எறும்பு சட்னியை நாங்கள் கொடுக்க உத்தரவிட முடியாது.
மேலும் ஒடிசா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த மனுதாரர் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கூறி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்ததாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.
காவிமயமாக்கல்: கண்ணூா் பல்கலைக்கழகம் மறுப்பு

பட மூலாதாரம், Getty Images
கண்ணூா் பல்கலைக்கழகத்தில் ஆா்எஸ்எஸ் கருத்துகள் கொண்ட பாடங்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக மாணவா்கள் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு அப்பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் கோபிநாத் ரவீந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
பல்கலைக்கழகம் காவியமயமாக்கப்படுகிறது என்ற மாணவா்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது வழக்கமான நடைமுறை. இதுபோன்று, புது தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜேஎன்யு) பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்து மகா சபா தலைவா் வி.டி.சா்க்காா் குறித்து ஜேஎன்யு பல்கல்லைக்கழக பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், சா்ச்சைக்குரிய இந்த பாடத்திட்டம் தொடா்பாக ஆராய இரண்டு போ் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்குள் அந்த குழுவின் ஆய்வறிக்கையை சமா்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு, இந்த விவகாரம் தொடா்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என அவர் கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் குடமுழுக்கு- தனிக்குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டு கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த உத்தரவிடக்கோரி, பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், நீதிபதிகள் இன்று (செப். 10) அளித்த தீர்ப்பின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு:
"தெய்வங்கள் உள்நாட்டு மொழிகளை புரிந்து கொள்ளாது என்று கூறமுடியாது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏராளமான பக்தி இலக்கியங்களை படைத்துள்ளனர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பக்தி இயக்கங்களை தமிழ்நாட்டில் வளர்த்துள்ளனர்.
இவர்கள் தமிழில் ஏராளமான பாடல்களை சிவனைப் போற்றி பாடியுள்ளனர். மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நாயன்மார்களும் ஏராளமான சிவாலயங்களை கட்டியுள்ளனர். 12 ஆழ்வார்களால் பெருமாளுக்கு 108 திவ்யதேசங்கள் அருளப்பட்டன.
மனுதாரர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என கோரியுள்ளார். இது இந்த கோயிலுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கோயில்களுக்கும் பொருந்தும். எனவே, அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், பட்டினத்தார் மற்றும் சித்தர்கள் பலரால் இயற்றப்பட்ட பழமையான துதிப்பாடல்களை கண்டறிந்து தொழுதிடும் வகையில், தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
இக்குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும். கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான குழு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட வேண்டும். பழமையான தமிழ் துதிப்பாடல்கள் எதுவும் கண்டறியப்பட்டால், அவற்றையும் சேர்த்து குடமுழுக்கு விழாவின் போது பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்". என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- போரில் கால்வாயைத் திறந்த இந்தியா - அதிர்ந்து போன பாகிஸ்தான் பீரங்கிப் படை
- டிக்கிலோனா: திரை விமர்சனம்
- 7 மாதங்களுக்குப் பின் உரையாடிய பைடன் - ஷி ஜின்பிங்: என்ன பேசினார்கள்?
- நடிகர் வடிவேலு: "நண்பன் விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது"
- டென்னிஸ் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள எம்மா ரடுகானு: யார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












