சிஏஏ சட்டத்தை எதிர்த்து ஸ்டாலின் அரசு தீர்மானம் நிறைவேற்றியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க வெளிநடப்பு செய்தது.
இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்தும் அதனைத் திரும்பப் பெற வேண்டுமென்று கோரியும் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், "1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி, குடியுரிமை பெற 'மதம்' ஒரு அடிப்படையாக இல்லை. ஆனால், இன்றைய மத்திய அரசு கொண்டுவந்த திருத்தத்தில், மதத்தை ஒரு அடிப்படையாக மாற்றுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை 'மதசார்பற்ற அரசு' என்கிறது. அதன்படி பார்க்கும்போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அதனால்தான் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளது. இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019, {Citizenship (Amendment) Act, 2019} என்று பெயர் சூட்டப்பட்டது.
பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. இஸ்லாமியர் இதில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளனர். இது மக்களை மத ரீதியாகப் பிரிக்கிறது என்பதால், இந்தச் சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது.
இந்தச் சட்டமானது, நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு, குறிப்பாக மதச்சார்பற்ற தன்மைக்கு, முற்றிலும் எதிரானதாகும் என்ற காரணத்தினாலும், அது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல என்பதாலும் எதிர்ப்பைத் தெரிவித்தோம். இச்சட்டத்தினை எதிர்க்கும் வகையில், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, அதனை எதிர்த்து இந்த மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், அக்கோரிக்கை முந்தைய அரசால் ஏற்கப்படவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும், மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வது ஆகாது. இது ஏற்கெனவே துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கிப் பார்ப்பதாகும். அரசியல்ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானது ஆகும்.
அதிலும் குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்தவர்களெல்லாம் வரலாம் என்றால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்? இதுதான் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.
இதனால்தான் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம்.
இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவர்கள், இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்களது உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது.
ஒன்றிய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதை விட, வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டி உள்ளது.
இந்தியாவின் சுதந்திரம் என்பது, அனைவரும் சேர்ந்து போராடியதால் கிடைத்தது. இத்தகைய உன்னதமான நல்லிணக்க மரபிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில், இந்திய மக்களிடையே பேதத்தைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது; ரத்து செய்யப்பட வேண்டியது என நாம் கருதுகிறோம்.
மேலும், இச்சட்டத்தின் நீட்சியாக தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register) தயாரிக்கும் பணியினையும், அதனடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) தயாரிப்பதையும் ஒன்றிய அரசு முழுவதுமாகக் கைவிடவேண்டும் எனவும் நாம் கருதுகிறோம்.

பட மூலாதாரம், Getty Images
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை இம்மாமன்றம் வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தினை நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, இது தொடர்பான தீர்மானத்தை அவையில் மு.க. ஸ்டாலின் வாசித்தார்.
"ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019, இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், நம் நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று இப்பேரவை கருதுகிறது.
மக்களாட்சித் தத்துவத்தின்படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
எனவே, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019ஐ ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது" என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானம் அவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்பாகவே, நேரமில்லா நேரத்தின்போது தங்களைப் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.
இந்தத் தீர்மானத்திற்கு பா.ஜ.க எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தது. அவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், "அந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல" என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய குடியுரிமை சட்டம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் 2019இல் இ்ந்திய அரசு கொண்டு வந்த திருத்தச்சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தலால் தப்பி வந்த ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், சமணர்கள், பெளத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க, புதிய சட்டம் வகை செய்கிறது.
இந்த மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியாவில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால், அவர் தனது பிறப்புத்தேதியை நிரூபணம் செய்யாமல் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
ட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைக்கு ஆளாகாதவாறு, அவர்களுக்கு இந்த சட்டம் பாதுகாப்பு வழங்கும்.
முக்கியமானதாக, 2014, டிசம்பர் 31-ஆம் தேதி அன்றோ அதற்கு முன்பாகவோ, இந்தியாவுக்கு வந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள். சட்டத்திருத்தத்துக்கு முன்புவரை, குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம் இந்தியாவில் 11 ஆண்டுகள் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
1955-இல் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த தகுதி வரம்பு, தற்போதைய சட்டத்திருத்தத்தின் மூலம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எவ்வாறு நியாயப்படுத்துகிறது?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத்தின்பெயரால் அவற்றில் சிறுபான்மையினராக கருதப்படும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பாரசீகர்கள் துன்புறுத்தப்படுவதால் அவர்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு தஞ்சம் அடைய வருவதாகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வெகு குறைவு என்றும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தை அறிமுகப்படுத்திப் பேசியபோது குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் ஏன் சர்ச்சையானது?
இந்திய அரசியலமைப்பின் 14-ஆவது விதியின்படி, சமத்துவம் வலியுறுத்தப்படுகிறது. அந்த விதியை தற்போதைய அரசின் நடவடிக்கை மீறுவதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.
மேலும், மதத்தின் பெயரால் குடியுரிமை பெற சட்டவிரோத குடியேறிகள் தகுதி பெற வைக்கப்படுவதாக அதை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை அஸ்ஸாமில் வாழும் பலர் ஏன் எதிர்க்கிறார்கள்?
இந்தியாவிலேயே குடியுரிமை சட்டத்திருத்தத்தை அதிகமாக எதிர்க்கும் மாநிலங்களில் அஸ்ஸாமும், மேகாலயாவும் குறிப்பிடத்தக்கவை. பல தசாப்தங்களாகவே, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்த மாநிலங்களுக்குள் ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளதாக சர்ச்சை உள்ளது.
இதனால் அங்கு பூர்விமகமாக வாழும் பூர்வகுடி பழங்குடியினர், சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரீதியில் பல பாதிப்புகளை எதிர்கொள்வதாக நம்புகிறார்கள். முஸ்லிம்களை தவிர மற்ற மதங்களை சேர்ந்த குடியேறிகளுக்கு, தற்போதைய சட்டத்திருத்தம் சட்டபூர்வ குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி அளிப்பதாக அங்கு வாழும் மக்கள் கருதுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












