700 கிராம் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து சாதனை

700 கிராம் எடை மட்டுமே கொண்ட கைக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை

பட மூலாதாரம், Katie Rollings

பிறந்து 27 நாட்களேயான, 700 கிராம் பெண் குழந்தை ஒன்றுக்கு அகமதாபாத்தில் வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

இந்த அளவுக்குக் குறைவான எடை உள்ள ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை நடத்தப்பட்டிருப்பது அனேகமாக இதுதான் குஜராத்திலேயே முதன்முறையாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

"இது ஆபத்துக்கள் நிறைந்த ஒரு அறுவை சிகிச்சையாக இருந்தது. குறை மாதத்தில் பிறந்த எடை குறைவான குழந்தை இது. சிம்ஸ் மருத்துவமனையிலோ மாநிலத்தின் வேறு எந்த மருத்துவமனையிலோ இப்படிப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை. குழந்தை இறக்க நேரிடலாம் என்பதுதான் பெரிய ஆபத்தாக இருந்தது. சிறுநீரகங்களின் நிலையை சொல்லும் கிரியேட்டினின் அளவும் மோசமாக இருந்தது. எனவே, சிறுநீரகம் செயலிழக்கும் ஆபத்தும் இருந்தது," என்று கூறுகிறார் இதில் ஈடுபட்ட குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை வல்லுநர் மருத்துவர் திவ்யேஷ் சதாதிவாலா.

"குழந்தை பிறந்து 25 நாட்கள் ஆன நிலையில் இங்கு கொண்டுவந்தோம். கெராலுவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவள் சிகிச்சை பெற்று வந்தாள். அங்கு உள்ள மருத்துவர்களுக்கு , குழந்தைக்கு இதயப் பிரச்சனைகள் இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது.

அவர்கள் கேட்டுக்கொண்டதை ஏற்று நான் கெராலுவில் குழந்தையை பார்க்கச் சென்றேன். இருதயத்தை சோதிக்கும் பரிசோதனையில் அவளுக்குக் கூடுதலாக ஒரு இரத்தக்குழாய் இருந்தது தெரிய வந்தது. குழந்தை பிறந்ததற்குப் பின் இந்தப் பிரச்சனை பொதுவாக சரியாகிவிடும். ஆனால் இது குறைமாதக் குழந்தை என்பதால் சிக்கல் நீடித்தது. ரத்தக் குழாயை உடனடியாக நிறுத்த வேண்டியிருந்தது. பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் பேசி, குழந்தையை அன்றைக்கே இங்கு கொண்டு வந்தோம்.அவளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஆக்சிஜன் தரவேண்டியிருந்தது. இரண்டு நாட்களில் நிலைமை சீரான பிறகு அறுவை சிகிச்சை செய்தோம்."

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகில் எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு இதுபோன்ற நோய்கள் வருவது அரிது என்கிறார்கள் மருத்துவர்கள்.

"இதை நாங்கள் பேட்டண்ட் டக்டஸ் ஆர்டீரியோசஸ் என்று அழைப்போம். பொதுவாக இந்தப் பிரச்சனை, குழந்தை கருவிலிருக்கும்போதே சரியாகிவிடும் என்பதால் இந்த அறுவை சிகிச்சை அரிதாகவே தேவைப்படும். மருத்துவர் திவ்யேஷ் கூறியதுபோல, இந்த இரத்தக்குழாய் செயல்படாமல் இருப்பதற்காக அவர்கள் ஒரு சிறு ஸ்ப்ரிங்கைக் கூட வைத்துப் பார்த்தார்கள். ஆனால் இரத்தக்குழாயின் அளவுப் பெரிதாக இருந்தது. ஆகவே நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இவ்வளவு குறைவான எடையுள்ள குழந்தைக்கு அறுவை சிகிச்சை என்பது அபூர்வமானது. அந்த வகையில் உலகில் மிக சொற்பமான அறுவை சிகிச்சைகளே இதுவரை நடந்துள்ளன" என இருதய அறுவை சிகிச்சை வல்லுநர் மருத்துவர் தவால் நாயக் தெரிவித்தார்.

700 கிராம் எடை மட்டுமே கொண்ட கைக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை

பட மூலாதாரம், Cavan Images

அறுவை சிகிச்சைக்கு முன்பு, இது ஆபத்தானது என்பதால், வல்லுநர்கள் குழு மூலமாக தவறுகளைத் தவிர்ப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன.

அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் எங்கள் குழுவுடன் அமர்ந்து செயல்திட்டத்தை விவாதித்தேன். தேவைப்படுகிற எல்லாம் போதுமான அளவில் இருக்கிறதா என்று சரிபார்த்தோம். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 மணிநேரமும் இருந்தோம். அறுவை சிகிச்சை அறையிலிருந்து குழந்தை வருவதற்கு முன்பே படுக்கை சூடாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை உடல் சூடு குறைவதால் ஏற்படும் ஹைப்போதெர்மியாவைத் தடுப்பதற்கான ஏற்பாடு இது. அறுவை சிகிச்சையின்போதுகூட குழந்தையின் வெப்பநிலையை சரியாக வைப்பதற்காக ஏ.சி. போடவில்லை என்கிறார் மருத்துவர் திவ்யேஷ் சதாதிவாலா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :