நரேந்திர மோதியின் புதிய தடுப்பூசிக் கொள்கை உண்மையிலேயே பலனளிக்குமா?

கொரோனா தடுப்பூசி செலுத்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா ஒரு புதிய தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தின் முதல் நாளிலேயே சுமார் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்கி மாநிலங்களுக்கு வழங்க முயற்சிப்பதாகத் தெரிகிறது இப்புதிய கொள்கை.

உலகிலேயே இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர்களில் ஒன்று. ஆனால் அதன் சொந்த தடுப்பூசி இயக்கமே மெல்லத்தான் நகர்கிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில், இந்தியாவில் இதுவரை சுமார் ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் இந்தியாவின் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது.

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்த, ஜூன் 21 முதல் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோதி இம்மாத தொடக்கத்தில் அறிவித்தார்.

அப்புதிய கொள்கையின் முதல் நாளில் இந்தியாவின் தடுப்பூசி திட்டம் செயல்படும் வேகத்தைக் குறிப்பிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார் நரேந்திர மோதி.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

புதிய தடுப்பூசிக் கொள்கை என்ன மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது?

பிரதமர் மோதியின் அறிவிப்பு அவர் தொலைக்காட்சியில் தேசத்துக்கு உரையாற்றிக் கொண்டிருந்த போது வந்தது, அதில் அவர் இந்தியாவின் தடுப்பூசி திட்டங்களின் வரலாறு மற்றும் தடுப்பூசிகளின் போக்குவரத்து குறித்து பேசினார்.

முந்தைய கொரோனா தடுப்பூசி கொள்கையின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் பாதி மத்திய அரசிடம் சென்றது, மீதமுள்ளவை மட்டுமே மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.

18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிகளைப் பெற திறந்த வெளிச் சந்தையில் மாநிலங்கள் போட்டியிட்ட போதிலும், மாநில அரசின் தடுப்பூசி மையங்களில் மக்களால் இலவசமாக தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள முடிந்தது.

இதற்கிடையில், மத்திய அரசு முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தியது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Reuters

புதிய தடுப்பூசிக் கொள்கையின் கீழ் மத்திய அரசு இப்போது தயாரிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் 75 சதவீத உற்பத்தியை வாங்கிக் கொள்ளும்.

மாநில அரசுகள் உற்பத்தியாளர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கான தடுப்பூசி டோஸ்களைப் பெறுவதற்கு பதிலாக, மத்திய அரசிடமிருந்து டோஸ்களை இலவசமாக பெற்றுக் கொள்ளும்.

மீதமுள்ள 25 சதவீத தடுப்பூசிகள் முன்பைப் போலவே தனியார் மருத்துவமனைகளால் கொள்முதல் செய்யப்பட ஒதுக்கப்பட்டுள்ளன.

தனியாருக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் இலவசம் அல்ல, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பணம் செலுத்த வேண்டும்.

மூன்று அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயித்து இருக்கிறது. கோவிஷீல்டுக்கு 780 ரூபாய், ஸ்புட்னிக் V-க்கு 1,145 ரூபாய், கோவேக்சினுக்கு 1,410 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இவை அனைத்தும் ஒரு டோஸுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொள்கை நடைமுறையில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?

கொரோனா தடுப்பூசி செலுத்தல்

பட மூலாதாரம், Getty Images

மாநிலங்களின் மக்கள் தொகை, அம்மாநிலத்தில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோயின் நிலை, தடுப்பூசி நடவடிக்கைகள், தடுப்பூசி வீணடிக்கப்படுவது போன்றவைகளின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கும்.

மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலைக்கு மாநில அரசுகள் தடுப்பூசி டோஸ்கள் வாங்க வேண்டிய சூழல் தற்போது நீங்கி இருக்கிறது.

இந்த நடவடிக்கை தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது.

முந்தைய தடுப்பூசிக் கொள்கை குறித்து இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இது "தன்னிச்சையானது" மற்றும் "பகுத்தறிவற்றது" என விமர்சித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையால், மத்திய அரசை விட மாநில அரசுகள் தடுப்பூசி டோஸ்களுக்கு அதிக பணம் செலுத்த வைப்பதன் பின்னணியில் உள்ள காரணத்தை அது கேள்விக்குள்ளாக்கியது.

மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி டோஸ்களை திறந்த வெளிச் சந்தையில் கொள்முதல் செய்ய வேண்டியிருந்ததால், பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற ஏழ்மையான சில மாநிலங்களின் நிதிச் சுமை கணிசமாக அதிகரித்தது.

"இது சரியான திசையில் ஒரு படியாகும், மேலும் கொள்முதல் தொடர்பான சில சவால்களை இது நெறிப்படுத்தும்" என்கிறார் மருத்துவர் லஹாரியா.

சாதாரண மக்களுக்கு இதனால் என்ன பயன்?

கொரோனா தடுப்பூசி செலுத்தல்

பட மூலாதாரம், Getty Images

அரசின் தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கு எந்த வித கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை என்பதால் "இந்த அறிவிப்பு குடிமக்களுக்கு பெரிதாக எந்த மாற்றத்தையும் கொடுக்காது" என சுகாதார கொள்கை நிபுணர் மருத்துவர் சந்திரகாந்த் லஹாரியா கூறுகிறார்.

இந்த புதிய கொள்கை உண்மையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா தனது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியது போன்றது.

இதை மோதியே ஒப்புக் கொண்டார், "பழைய முறை, மே 1க்கு முன்பு நடைமுறையில் உள்ளது, மீண்டும் செயல்படுத்தப்படும்" என கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் அதிகரிப்பு மற்றும் இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் தடுமாறும் போது ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிக் கொள்கை மாற்றப்பட்டது.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது மற்ற தடுப்பூசி தயாரிப்பாளர்களை இந்திய சந்தையில் நுழைய ஊக்குவிக்கும் மற்றும் விநியோகத்தை அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது.

ஆனால் அது எதிர்பார்த்தது போல செயல்படவில்லை, மேலும் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.

தடுப்பூசி இயக்கத்தின் நிலை என்ன?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தல்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கியது முதல் (ஜனவரி முதல்) இந்தியாவில் 27.6 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இது தகுதியானவர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவு.

இந்தியாவில் வயது வந்தோர் மக்கள் தொகை சுமார் 95 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் தொடக்கத்தில் தடுப்பூசி இயக்கம் வேகமெடுக்கத் தொடங்கியது. ஏப்ரல் தொடக்க நாட்களில் நாள் ஒன்றுக்கு 36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அந்த எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானது.

ஆனால் அந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்தது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்கள் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிறுத்தி வைத்தன. பற்றாக்குறையைத் தவிர்க்க கடந்த ஆண்டு போதுமான தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய இந்தியா தவறிவிட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என இந்திய அரசு உறுதியளித்துள்ளது, இப்போது தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தில், இந்த இலக்கை அடைவது மிகவும் சிரமம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :