தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்: "கண்முன்னே 6 பேர் மரணம்; மருத்துவர்களின் அலட்சியம்" - என்ன நடக்கிறது இஎஸ்ஐ மருத்துவமனைகளில்?

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சில அரசு மருத்துவர்கள் கையாளும்விதம் அதிர்ச்சி அளிப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் மீதுதான் அதிகப்படியான புகார்கள் எழுந்துள்ளன. என்ன நடக்கிறது?

கோவை மாவட்டம், இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) மாவட்டத் தலைவராக இருக்கிறார். சமூக செயற்பாட்டாளராகவும் நன்கு அறியப்பட்டவர்.

இவர் கடந்த 24ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறாகக் குறிப்பிட்டிருந்தார்: `கடந்த 19.5.2021 அன்று தொற்று கண்டறியப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையின் வழிகாட்டல்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன். கடந்த 22.5.2021 அன்று இரவு 8.30 மணியளவில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. 108 வாகனம் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எனக்கு இரவு 12.30 மணிக்கு ஆஸ்பத்திரியில் அனுமதி கிடைத்தது. அன்று இரவு முழுவதும் எவ்வித சிகிச்சையும் கிடைக்காமல் கடுமையான இருமலுடன் தவித்து வந்தேன். என்னை ஏன் என்று கேட்கக்கூட ஆள் இல்லாமல் விடிந்தது.

கண்முன்னே 6 பேர் மரணம்!

மறுநாள் காலை 10 மணிக்கு சி.டி ஸ்கேன் எடுப்பதற்கு அனுப்பட்டேன். 10.30 மணிக்கு பரிசோதனைக்காக ரத்தம் எடுத்தார்கள். அதன் பிறகு நேரம் ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படாததால் மிகுந்த மனஅழுத்தம் ஏற்பட்டது. நான் அங்கு இருக்கின்றபோதே என் கண்முன்னே 6 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள். இஎஸ்ஐ மருத்துவமனைகளின் செயல்பாட்டில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். அங்கு நான் பெற்ற துன்பம், மருத்துவமனையை நம்பிச் செல்லும் மக்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார்.

ஜேம்ஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கொரோனா முதல் அலையின்போதும் தொற்றால் பாதிக்கப்பட்டேன். அன்றைய காலகட்டத்தில் இதே இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளையும் அறைகளையும் நன்றாகப் பராமரித்தார்கள். மருத்துவர்கள் சுழற்சி முறையில் நோயாளிகளை நன்கு கவனித்துக் கொண்டார்கள். ஆனால், இரண்டாவது அலையில் இஎஸ்ஐ மருத்துவமனையின் சிகிச்சை முறையில் வித்தியாசத்தை பார்க்க நேரிட்டது. இத்தனைக்கும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கார்த்திக், ஆறுமுகம் ஆகியோரின் பரிந்துரையில் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அப்படிப்பட்ட எனக்கே உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை" என்கிறார்.

எழுதி வாங்கினார்கள்!

தொடர்ந்து இருமல் அதிகரித்ததால், சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேசியவர், ``மருத்துவமனையில் இரவு 12.30 மணியளவில் படுக்கை கிடைக்கும் வரையில் கடுமையான இருமலால் அவதிப்பட்டேன். இதன்பிறகு மூன்றாவது மாடிக்கு என்னை அழைத்துச் சென்று படுக்கையை காட்டினர். அங்கும் விடிய விடிய இருமிக் கொண்டிருந்தேன். அப்போதும் என்ன வேண்டும் எனக் கேட்பதற்கு யாரும் இல்லை. எப்படியோ விடிந்துவிட்டது. இதன்பிறகு படுக்கையில் இருந்து எழுந்து பாத்ரூம் சென்றால், அங்கு தென்பட்ட சுகாதாரமின்மையால் வாந்தி வந்துவிட்டது. அவ்வளவு தொற்று நோயாளிகள் உள்ள இடத்தில் சுகாதாரமின்மையை பார்த்து அதிர்ச்சியே ஏற்பட்டது. அதன்பிறகு 10 மணிக்கு சி.டி. ஸ்கேன் எடுத்துக் கொடுத்தேன். அன்று மாலை வரையில் இருமலுக்கான மருந்தைக்கூட யாரும் கொடுக்கவில்லை. நேரத்துக்கு உணவு மட்டும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

நோயாளிகள் மூச்சுவிட சிரமப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். மாலை நேரம் ஆனதும் என்னால் அங்கு இருக்கவே முடியவில்லை. உடனே மருத்துவர்களிடம், `என்னை டிஸ்சார்ஜ் செய்துவிடுங்கள். இங்கிருந்தால் மனஅழுத்தம் அதிகரித்துவிடும்' என்றேன். அதற்கு அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊடக நண்பர்கள் மூலம் உதவி கோரினேன். அங்கிருந்தவரையில் 15 மணிநேரம் கழிப்பறைகூட செல்ல முடியாமல் அவதிப்பட்டேன். இதன்பிறகு, `எது நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு' என எழுதி வாங்கிக் கொண்டு 23ஆம் தேதி இரவு என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து வீட்டுக்கு வந்த பிறகே கழிவறை சென்றேன். தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். இப்படியொரு துயரத்தை வாழ்நாளில் கண்டதில்லை" என்கிறார்.

காலில் விழுந்த தந்தை!

மேலும், ``அரசு ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த பணிகளைப் பார்க்க முடியவில்லை. அங்கு 1,500 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் போதுமான அளவுக்கு மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் இல்லை. நான் இருந்த வார்டில் 150 படுக்கைகள் இருந்தன. அங்கு ஷிப்ட்டுக்கு 2 மருத்துவர்கள் உள்ளனர். இரண்டே இரண்டு சுகாதாரப் பணியாளர்கள்தான் உள்ளனர். இந்த எண்ணிக்கை, அங்குள்ள நோயாளிகளின் உயிரைக் காக்க போதுமானதாக இல்லை. என் கண் முன்னால் 18 வயதுள்ள இளைஞரின் தந்தை ஒருவர், `என் மகனை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என மருத்துவரின் காலில் விழுந்தார். அதற்கு, `உங்க மகனைப் போல் நாங்கள் நிறைய பேரை பார்க்க வேண்டியிருக்கிறது' என அந்த மருத்துவர் பதில் அளித்தார்.

இங்கு அனைத்தையும் விரைந்து முடிவெடுக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. தொழிலாளர்களுக்கான மருத்துவமனையாக இருந்தாலும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிவிட்டார்கள். எம்.பியின் பரிந்துரையோடு சென்ற எனக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க முடியவில்லை. கடந்த முதல் அலையின்போது நோயாளிகளுக்கு உதவியாளர் என்ற பெயரில் யாரையும் நியமிக்கவில்லை. தற்போது ஓர் உதவியாளர் உடன் இருக்கிறார். இதனால் தேவையற்ற நெருக்கடி ஏற்படுகிறது.

அலட்சியத்தால் நேரும் மரணங்கள்!

இந்த விவகாரத்தில் நோயாளிகளுக்கான படுக்கைகளை அதிகரிப்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. சரியான மருத்துவ சிகிச்சையும் நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கும் அமைப்பையும் முறைப்படுத்தவில்லை என்றால் உயிர்ப் பலிகளைத் தவிர்க்க முடியாது. ஓர் உயிர் போய்விட்டால், அதனை யாராலும் திருப்பித் தர முடியாது. அந்தக் குடும்பத்தின் வேதனையில் யாராலும் பங்கேற்க முடியாது. அதனை உணர்ந்து மனிதாபிமானத்தோடு மருத்துவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் வேண்டுகோளாக வைக்கிறேன்" என்கிறார்.

``கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் இயந்திரங்களில் 60 சதவிகிதம்தான் வேலை செய்கிறது. எனது நெருங்கிய உறவினர் ஆக்சிஜன் உதவியோடு இருந்த நாள்களில் நானே 4 முறை இயந்திரத்தை மாற்றி வைத்தேன். சில இயந்திரங்களில் கம்ப்ரஸர் வேலை பார்க்காமல் உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாளே, நோயாளிக்கு ஸ்டீராய்டு கொடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். நோயாளியின் நுரையீரல் கடுமையாக பாதிக்கும் அளவுக்குத்தான் அங்குள்ள சூழல்கள் உள்ளன. நோயாளிக்கு என்ன மருந்து கொடுக்கப்படுகிறது என்பதும் சொல்லப்படுவதில்லை. இதுதொடர்பாக, மருத்துவர்களிடம் பேசினால் உரிய பதில் கிடைப்பதில்லை. அங்கு ஏற்படும் மரணங்களில் பாதியளவு இவர்களின் அலட்சியங்களால்தான் ஏற்படுகிறது" என்கிறார் கோவை டி.வி.எஸ் நகரைச் சேர்ந்த அமுதரசு. இவரது நெருங்கிய உறவினர் ஒருவர், அண்மையில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்து விட்டார்.

சென்னைக்கு அடுத்து கோவை!

அதேநேரம், கொரோனா பரவலைப் பொறுத்தவரையில் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. மே 24 ஆம் தேதி சென்னையில் 4,985 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் 4,277 ஆக கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தொற்றும் உயிர்ப் பலியும் அதிகரிப்பதால் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

``வேலைப்பளு அதிகமாக இருப்பதால்தான் அரசு மருத்துவர்களிடையே அலட்சியம் ஏற்படுகிறது. விடுப்பே வழங்காமல் தொடர்ந்து வேலை பார்க்கும்போது அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கே உடல்நலமில்லாமல் போகும்போது பரிசோதனை செய்து கொள்வதற்குக்கூட நேரம் இருப்பதில்லை" என ஆதங்கப்படுகிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். இவர் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளராக இருக்கிறார்.

பணிச்சுமையால் மனஅழுத்தம்!

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், ``கொரோனா மரணங்கள் குறைவாக நிகழ்ந்த காலகட்டத்தில் ஒவ்வொரு இறப்புக்கும் மருத்துவர்கள் காரணங்களைக் கூறி வந்தனர். அதிகப்படியான மரணங்கள் ஏற்படத் தொடங்கியதும், பணிச்சுமை அதிகரித்துவிட்டது. மக்களும், `கொரோனா என்றாலே மரணம் வரும்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். `கொரோனா மரணங்களை ஆய்வு செய்வோம்' என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களும் ஓரளவுக்குத்தான் ஆய்வு செய்து வருகின்றனர். பல இடங்களில் தொற்றாளர்களின் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மருத்துவப் பணியாளர்களில் போதாமை ஏற்படுகிறது.

தற்போது 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள், 2,000 தொழில்நுட்ப வல்லுநர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இந்த நியமனங்கள் விரைவாக நடந்தால்தான் மக்கள் காலதாமதம் இல்லாமல் சிகிச்சை பெற முடியும். இதன் காரணமாக, இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். லேசான தொற்றுள்ளவர்களை மோசமான நிலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியமானது. இதன்மூலம் அரசுக்கு ஏற்படும் செலவீனத்தைக் குறைக்க முடியும். இதற்கு மருத்துவ உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்" என்கிறார்.

குறை சொல்கிறவர்கள் நேரில் வரட்டும்!

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மீது தொடர் புகார்கள் வருகிறதே?' என இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``எங்கள் மீது குறை சொல்கின்றவர்களை உரிய பாதுகாப்பு உடைகளுடன் உள்ளே அழைத்துச் சென்று காட்டுவதற்குத் தயாராக இருக்கிறேன். இதற்கு யார் தயாராக இருந்தாலும் அவர்கள் என்னிடம் நேரில் வந்து பேசட்டும். வெளியில் இருந்து குற்றம் சுமத்துவது எளிதானது. எங்களைப் பற்றி 5 சதவிகிதம் பேர்தான் குறை சொல்கிறார்கள். மற்ற 95 சதவிகிதம் பேர் நல்லபடியாக குணமடைந்து வீட்டுக்குச் செல்கிறார்கள். இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. எங்களின் சிகிச்சை முறை மிகச் சிறப்பாக உள்ளது. அதனால்தான் பலரும், `இஎஸ்ஐ மருத்துவமனைக்குத்தான் செல்வேன்' என உறுதியாகக் கூறுகிறார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது?" என்கிறார்.

மேலும், ``இங்கு சிகிச்சை பெற்றுச் செல்லும் 95 சதவிகிதம் பேர் சொல்வதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். குற்றங்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் எங்களால் வேலை பார்க்க முடியாது. எங்கள் கடமையை சிறப்பாகச் செய்து நல்ல பெயர் எடுத்துள்ளோம். செவிலியர்கள் தினத்தில் நான் அவர்களின் கால்களில் விழுந்த சம்பவம், உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. அங்கு நான் விழவில்லை. என்னுடைய பதவிதான் விழுந்தது. எங்கள் மீது குறை சொல்கிறவர்களின் நோக்கத்தைக் கவனியுங்கள். எங்களைப் பொறுத்தவரையில், நோயாளிகளின் உடல்நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறோம்" என்கிறார்.

``சென்னை கே.கே.நகர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள தொழிலாளர் நல ஈட்டுறுதி மருத்துவமனைகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோவையில் 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா முதல் தொற்றின்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இஎஸ்ஐ மருத்துவமனைகளை எல்லாம் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றிவிட்டனர். கோவை இஎஸ்ஐயில் அண்மையில் 131 சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளாக மாற்றினர். இருப்பினும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உரிய சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது" என்கின்றனர் இஎஸ்ஐ மருத்துவர்கள் சிலர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :