You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா சடலங்களுக்கு மத்தியில் சிகிச்சை: புதுச்சேரியில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், நட்ராஜ் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லை என்றும் அங்கு சடலத்திற்கு மத்தியில் சிகிச்சை நடப்பதாகவும் கூறி வெளியான வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. அங்கு களத்தில் என்ன நடக்கிறது?
புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக தினமும் சராசரியாக 2,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். நாள் ஒன்றுக்கு 30 பேர் வரை உயிரிழக்கின்றனர். இதன் காரணமாக புதுச்சேரி மயானத்தில் 24 மணி நேரமும் உயிரிழந்தவர்களின் சடலத்தை எரிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மயானத்தில் வெளியே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சி அப்பகுதியில் செல்பவர்களை கண் கலங்க வைக்கிறது.
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு முழுவதுமாக கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லை என்று இங்கே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு இந்த மருத்துவமனையில், நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மேலும் சடலத்திற்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு கதிர்காமம் மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொரோனா சிகிச்சை அளிக்கும் வார்டில் நோயாளிகள் பலர் படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்திருப்பதையும், நோயாளிகள் மத்தியில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலம் மூடப்பட்டு இருப்பதையும் நேரடியாக கண்பது போன்ற வீடியோ வெளியாகியது.
இது பற்றி பேசிய சுயேச்சை எம்எல்ஏ நேரு, "நான் நேரில் சென்று பார்த்தபோது நோயாளிகள் மத்தியில் இறந்தவரின் சடலத்தை கட்டி வைத்திருந்தனர். மற்றொரு சடலத்தை நான் பார்த்த பிறகே கட்டத் தொடங்கினர். இதைப் பார்த்ததிலிருந்து சாப்பிடக்கூட முடியவில்லை," என்றார்.
"மருத்துவமனையில் நோயாளிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். அரசும் கவனம் செலுத்தவில்லை. சடலங்களுக்கு நடவே நோயாளிகள் சிகிச்சை பெறும் சூழல் நிலவுகிறது. மருத்துவமனையில் சாதனங்களும், ஆக்ஸிஜன் படுக்கைகளும் போதிய அளவில் இல்லை," என குறிப்பிட்டார் நேரு.
புதுச்சேரி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கடுமையாக முன்வைக்க இந்த வீடியோ காரணமானது.
குறிப்பாக இந்த வீடியோ வெளியான மறுநாள், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கதிர்காமம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, நோயாளிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவமனை நிலவரம் குறித்து விளக்கமளித்த தமிழிசை, "யாருடைய நற்சான்றிதழை வாங்குவதற்கும் நான் பணி செய்யவில்லை. மனசாட்சிப்படி மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே இருக்கிறேன். இங்கே பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை. மக்களுக்காக உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்," என்றார்.
"தினமும் ஆக்ஸிஜன் படுக்கை எண்ணிக்கையை எந்த அளவுக்கு அதிரிக்க முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தி வருகிறோம். நோயாளிகளை நாற்காலியில் உட்கார வைத்து சிகிச்சை தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மூச்சு வாங்கும்போது நோயாளிகளை நாற்காலியில் அமர வைத்துத் தான் சிகிச்சை அளிப்பார்கள்.
இறந்தவர்களின் சடலங்கள் மத்தியிலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதாக தகவல் எழுந்தது. நோயாளிகள் இறக்கின்ற வரைக்கும் அவர் நம் சகோதர சகோதரிகள் தான். தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலத்தைப் பொட்டலம் கட்டி வைப்பதாக கூறுகின்றனர். அது தவறான வார்த்தை. அவர்களின் உடலை வெளியே கொண்டு வந்தால் தொற்று பரவும். அதனால் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி உடலை பாதுகாப்பு கவசத்தோடு தான் வெளியே கொண்டு செல்ல வேண்டும்," என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
"புதுச்சேரியில் எங்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. படுக்கை இல்லாத காரணத்தால் நோயாளிகளை தரையில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். படுக்கை இல்லை என்று நோயாளிகளைத் திருப்பி அனுப்புவதில்லை. இருப்பினும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக படுக்கை வசதிகளை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்."
"இந்த தருணத்தில் செவிலியர்கள் எவ்வளவு சிரமப்பட்டுப் பணி செய்கிறார்கள் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ கட்டமைப்பை முன்பே சரி செய்திருக்க வேண்டும். அதனைச் சரி செய்யாததால், இப்போது சரி செய்கிறோம். நம்பிக்கையோடு இருங்கள் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசு செய்து வருகிறது," என தெரிவித்தார் தமிழிசை.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக சிலர் படங்களை எடுத்து அதனை வைரலாக்குகின்றனர். நல்லதைப் பதிவிடுங்கள். நாம் நினைத்ததைவிடத் தொற்று வேகமாக பரவி வருவதாக கூறினார், தமிழிசை சௌந்தரராஜன்.
முன்னதாக கடந்த வாரத்துக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார். தற்போது அவர் மருத்துவர் ஆலோசனைப்படி அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு பல்வேறு முயற்சிகளை செய்தாலும் பொது இடங்களில் மக்கள் கட்டுப்பாட்டை மீறுவதால் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அருள்தாஸன் கூறுகையில், "இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதைக் காண முடிகிறது. புதுச்சேரி பொறுத்தவரை சிறிய மாநிலம் என்பதால் தொற்று பரவல் அதிகமாக உள்ளது," என்றார்.
"இங்கே யாரும் அவர்களைப் பற்றியும், குடும்பத்தினரைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. வெளியே சென்று நோயைத் தொற்றிக்கொண்டு வீட்டில் இருப்பவர்களிடமும் பரப்பி விடுகின்றனர். இந்த நோயினால் ஒரே வீட்டில் இரண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சில குடும்பத்தில் குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவிக்கின்ற பரிதாபம் நடந்துள்ளது."
"அரசின் நடவடிக்கைகளால் மட்டும் இதனைக் கட்டுப்படுத்தி விட முடியாது. மக்களும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே இதனை முழுவதுமாக கட்டுப்படுத்திட முடியும். இது ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடும்பத்தில் ஒருவரை இழப்பது அனைத்து தரப்பினருக்கும் வலியைத் தர கூடியது. அதை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்," என்கிறார் சமூக ஆர்வலர் அருள்தாஸன்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு 'கொரோனா வார் ரூம்' - அவசர உதவி பெறுவது எப்படி? எவ்வாறு செயல்படுகிறது?
- இஸ்ரேல் - பாலத்தீன மோதலைத் தடுக்க செளதி கடைப்பிடிக்கும் உத்தி என்ன?
- தமிழக சிறைகளில் கொரோனா அதிகரிக்கிறதா? - கள நிலவரம் என்ன?
- கி.ரா என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை
- கொரோனா தடுப்பை விட கைதுக்கு முன்னுரிமை தந்ததா டெல்லி காவல்துறை?
- `லிவ்-இன்' ஜோடி பாதுகாப்பு கோரி வழக்கு: பஞ்சாப் உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- இஸ்ரேல்-காசா மோதல்: சண்டை நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்
- கி.ரா. மறைவு- "பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட படைப்பாளி" திரையுலக பிரபலங்கள் உருக்கம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :