You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடந்து இரண்டு நாட்களாக வயிற்றுப் போக்கு இருந்துள்ளது. இதையடுத்து கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என கருதி நேற்று மாலை முதல்வர் இல்லத்தில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் முடிவுகள் இன்று மாலை வெளியானது. அதில் முதல்வர் ரங்கசாமிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் புதுச்சேரியில் இருந்து உடனடியாக சென்னை அழைத்துச் செல்லப்பட்ட புதுச்சேரி முதல்வரை, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பதவியேற்பு நிகழ்ச்சி
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை புதுச்சேரி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற அவ்விழாவில் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே பதவியேற்பு விழாவிற்கு வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் நெருக்கமாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் ஒருவருக்குப் பரிசோதனையின் போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவரும் பதவியேற்பு விழாவிற்கு முன்பாக சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காகச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிகரித்து வந்த காரணத்தினால் கடந்த மாதம் 11ஆம் தேதி முதல் கொரோனா தளர்வுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய கடைகள் மட்டும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த ஒரு வாரக் காலமாக நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் சராசரியாக 1500க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள் ஒன்றுக்கு 18-ஐ கடந்துவிட்டது. கடந்த 24மணி நேரத்தில் 26 நபர்கள் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்