புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்: பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15ஆவது சட்டபேரவைக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 மற்றும் பாஜக 6 தொகுதிகளிலும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவராக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதற்காக ஆட்சியமைக்க உரிமை கோரும் கடித்ததை கடந்த மே 3ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், ரங்கசாமி வழங்கினார்.

இதையடுத்து கொரோனா‌ நோய்த் தொற்று சூழல் காரணமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின்‌ 15வது சட்டபேரவைக்கான முதல்வர் பதவியை இன்று பிற்பகல் சரியாக 1.20 மணிக்கு ரங்கசாமி ஏற்றார்.

அவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் இதுவரை இறுதி செய்யப்படாத காரணத்தினால், அமைச்சர்களுகான பதவி மற்றொரு நாளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதவி ஏற்பு விழாவில், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதில் இசை வாத்திய காவல்கள், காவலர்கள் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விருந்தினர்கள் உட்பட 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பதவியேற்பு நிகழ்வு மிகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் நடைபெற்றது.

பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி

முதல்வர் பதவியேற்பை அடுத்து, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.‌

ரங்கசாமி தலைமையிலான யூனியன் பிரதேச அமைச்சரவையில் பாஜகவுக்கு துணை முதல்வர் உள்பட 3 அமைச்சர் பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அப்போது கிஷன் ரெட்டி தெரிவித்தார். "புதுச்சேரியில் முதல் முறையாகத் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது பாஜக தலைமைக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளனர்.

மேலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்கள் வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் உள்ளிட்ட இந்த 6 அமைச்சர்களும் சில நாள்களில் பதவியேற்பார்கள்.

மக்களுக்குத் தேவையானதை மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றுவோம். அடுத்தாக தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும். அதற்கான தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறோம்," என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

யார் துணை முதல்வர்?

புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நமச்சிவாயம் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கடந்த காலத்தில் முதல்வர் மற்றும் 5 அமைச்சர்கள் பதவி வகித்துவந்தனர். தற்போது முதல் முறையாகத் துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் 5 அமைச்சர்கள் பதவி வகிக்க உள்ளனர்.

உத்தரவுகளில் கையெழுத்து

ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்ற பின்னர் சட்டபேரவைக்கு வந்த முதல்வர் ரங்கசாமிக்கு காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையினை செலுத்தினர். இதன் பின்பு புதிதாக முதல்வர் பொறுப்பேற்று கொண்ட ரங்கசாமி 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் மற்றும் விதவைகள் உதவித் தொகை வழங்குவது, நிலுவையில் உள்ள இலவச அரிசிக்கான 2 மாத பணம் வழங்குவது, மாணவர்களுக்கான சென்டாக் கல்வி உதவித்தொகை வழங்குவது ஆகியவை அடங்கும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :