உச்ச நீதிமன்றம் பாராட்டிய 'மும்பை மாடல்' - ஆக்சிஜன் தேவையை சமாளிப்பது எப்படி - கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மயங்க் பகவத்
- பதவி, பிபிசி மராத்தி
இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் நெருக்கடியை சமாளிப்பதற்காக மும்பை மாநகராட்சியை இந்திய உச்ச நீதிமன்றம் பாராட்டியுள்ளது.
அத்துடன் டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் மும்பை மாநகராட்சி என்ன செய்து உயிர்களை காப்பாற்றியது என்று அவர்களை கவனித்து கற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது .
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவையே வாட்டி வரும் சூழ்நிலையில் டெல்லி மற்றும் பிற பகுதிகளைப் போல மும்பை மாநகரத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
மும்பை மாடல் ஆக்சிஜன் மேலாண்மை என்றால் என்ன
'மும்பை மாடல்' என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள 2020ஆம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும்.
சென்ற ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மும்பையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மருத்துவமனைகளில் அதிகரித்தது.
மும்பை மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் பி. வேல்ராசுவிடம் ஆக்சிஜன் விநியோகத்தை நிர்வாகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
"வழக்கமாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் தேவைப்படும். கொரோனா காலத்தில் ஆக்சிஜன் தேவை இரண்டு மடங்கு அதிகரித்ததைக் கண்டறிந்தோம்," என்கிறார் அவர்.
ப்ரிஹண் மும்பை மாநகராட்சி ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சி என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
13 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை சேமித்து வைக்கும் நிலையம் ஒன்றை ப்ரிஹண் மும்பை மாநகராட்சி நிறுவியது.
"21 ஆக்சிஜன் டேங்குகளை நிறுவினோம். இதன்மூலம் மும்பை நகருக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகம் தடைபடாமல் இருந்தது. தங்களுக்கு வந்து சேர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர்கள் தாமதமானாலும் இந்த மையத்தில் இருந்து மருத்துவமனைகள் ஆக்சிஜனை பெற்றுக் கொண்டன," என்று கூறுகிறார் வேல்ராசு.
2021 மார்ச் மாதம் மீண்டும் மும்பையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக செயற்கை ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.
கொரோனா முதல் அலையின்போது 200 முதல் 210 மெட்ரிக் டன் வரையிலான செயற்கை ஆக்சிஜன் நாளொன்றுக்கு தேவைப்பட்டது. ஆனால் இரண்டாம் அலையின் போது இது 280 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
மும்பை மாநகராட்சியால் நிறுவப்பட்ட இந்த ஆக்சிஜன் டேங்குகள் அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு பேருதவியாக இருந்தது.
கொரோனா முதல் அலையிலிருந்து பெற்ற அனுபவங்கள்
மும்பை மாநகராட்சி அதிகாரிகள் முதல் அலை நிகழ்ந்த காலகத்தில் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்தனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை என்று வரும் பொழுது அதில் ஆக்சிஜன் மிகவும் முக்கியமானதாக இருந்தது.
ஆக்சிஜன் தேவையைக் கண்டறியவும் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் சரியான நேரத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை மேற்கொள்ளவும் குழு ஒன்றை மாநகராட்சி அதிகாரிகள் அமைத்தனர்.
"ஆக்சிஜன் விநியோகத்தை சரியாக மேலாண்மை செய்ய குழு ஒன்றை நாங்கள் அமைத்தோம். வார்டு மட்டத்திலான அதிகாரிகள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் உடன் சரியான ஒருங்கிணைப்பு மேற்கொள்ள 6 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்."
"ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு வார்டுக்கும் ஆக்சிஜன் மேளாண்மைக்காக இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்," என்கிறார் வேல்ராசு.
மாநிலத்துக்கு வெளியே இருந்து வந்த ஆக்சிஜன் வழங்கல்களை இந்தக் குழு கண்காணித்தது.
டேங்கர்கள் எத்தனை மணிக்கு வந்து சேரும், எங்கு செல்லும் எந்த மருத்துவமனையில் அந்த ஆக்சிஜன் விநியோகிக்கப்படும் என்பதெல்லாம் குறித்து நான் கண்காணித்து வந்தேன்.
ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் செயற்கை ஆக்சிஜன் தேவை என்று மருத்துவமனைகளில் இருந்து அவசர உதவி அழைப்புகள் வர தொடங்கினேன்.
சரியான நேரத்தில் ஆக்சிஜன் டேங்கர்களை வந்து சேர்வதை உறுதி செய்வோம். அவை தாமதமாக வந்து சேர்ந்தால் அதனால் உண்டாகும் இழப்புகளை தாங்க முடியாது என்று கூறுகிறார் வேல்ராசு.
தவிர்க்கப்பட்ட மிகப்பெரிய சோகம்
ஏப்ரல் 17ஆம் தேதி ஒரு மிகப்பெரிய நெருக்கடி தவிர்க்கப்பட்டது. மும்பையில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் கையிருப்பாக இந்த செயற்கை ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே போனது.
தேவை அதிகரித்ததன் காரணமாக தட்டுப்பாடு உண்டானது. அதன் காரணமாக 168 கோவிட் தொற்றாளர்கள் ஜம்போ கோவிட் மையத்திற்கு இடம் மாற்றப்பட்டனர்.
சரியான நேரத்தில் ஆக்சிஜன் விநியோகஸ்தர்களுக்கு ஆக்சிஜன் வந்து சேராததால் நெருக்கடி உண்டானது. ஆனால் இந்த பிரச்னையை இரண்டு நாட்களில் தீர்த்து விட்டோம் என்கிறார் வேல்ராசு.
200 இடங்களில் 200 வண்டிகள்
திடீரென அதிகரித்த செயற்கை ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் சிறிய மருத்துவமனைகள் பெரும் பிரச்னையை சந்தித்தன.
200 ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் 200 வாகனங்களை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைத்தனர். எந்த இடத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அவற்றில் ஒரு வாகனம் உடனே அந்த மருத்துவமனைக்கு விரைந்து செல்லும்.
நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 13 முதல் 14 மணி நேரம் தொடர்ச்சியாக விநியோகம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இது மட்டுமல்லாமல் செயற்கை ஆக்சிஜனை எவ்வாறு சிறப்பாக கையாள்வது என்பது குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கை ஆக்சிஜன் வீணாவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள்
மும்பையில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் எதுவும் கிடையாது. வெளியிலிருந்து வரும் வழங்கல்களை நம்பியே மும்பை மாநகராட்சி உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும் மும்பை மாநகராட்சி தற்போது நகர எல்லைக்குள்ளேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

மும்பையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஜம்போ கோவிட் மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று கூறுகிறார் வேல்ராசு.
இதன்படி மும்பையில் உள்ள 12 வெவ்வேறு மருத்துவமனைகளில் 16 ஆக்சிஜன் தயாரிப்பு மையங்களை நிறுவ மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 45 மெட்ரிக் டன்னாக இருக்கும்.
வென்டிலேட்டர் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிக படுத்தப்பட்டுள்ளன.
"மார்ச் மாத இறுதியில் ஐசியூ படுகைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 1200-லிருந்து 3000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது," என்று கூறுகிறார் கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி.
ஏற்கனவே 100 வென்டிலேட்டர்கள் வாங்கி முடிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 100 வழங்குவதற்கான நடவடிக்கைகளில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வந்தோம் .அதனால் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்ட போது கூட எங்களால் படுக்கைகள் தட்டுப்பாடின்றி செயல்பட முடிந்தது என்று கூறுகிறார் சுரேஷ்.
தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் 30 ஆயிரத்துக்கும் மேலான படுக்கைகள் உள்ளன. அவற்றில் 12 ஆயிரம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி பொருத்தப்பட்டுள்ளது.
வார்டுக்கு ஒரு கட்டுப்பாட்டு அறை
கொரோனா முதல் அலையின்போது நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கீடு செய்ய ஒரு கட்டுப்பாட்டு அறை மட்டுமே இருந்ததால் அதிகமாக குழப்பம் நிலவியது.
கட்டுப்பாட்டு அறை சரியாக இயங்கவில்லை என்று சமூக ஊடகங்களிலும் குற்றம்சாட்டப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இதன் காரணமாக இந்த முறை ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது ஒரு மையத்திற்கு நாளொன்றுக்கு 500க்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
உதவி மற்றும் படுக்கை வசதி கோரி மக்கள் எங்களை அழைக்கிறார்கள் என்று கூறுகிறார் சுரேஷ்.
படுக்கைகள் கிடைக்கப் பெறுவதில் தாமதம் நிலவினாலும் படுக்கைகள் இல்லாமல் ஒருவர் உயிரிழந்தார் என்று செய்திகள் இப்போது வருவதில்லை.
மருந்து மேலாண்மை கொரோனா இரண்டாவது அலை காலகட்டத்தில் ரெம்டிசிவிர், டோசிலிசுமாப் போன்ற மருந்துகளுக்கான தேவை மிகவும் அதிகரித்தது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், உற்றார், உறவினர்கள் மூலம் இந்த மருந்துகளை பெற முயற்சித்தனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் குழப்பம் நிலவியது.
இப்போது இரண்டு லட்சம் ரெம்டிசிவிர் மருந்தை பெறுவதற்கான ஏலம் கோரப்பட்டுள்ளது. வாரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் வீதம் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போதைய தேவை வாரத்துக்கு 15 முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே என்கிறார் சுரேஷ்.
பிற செய்திகள்:
- இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவிய 137 ராக்கெட்டுகள்: காசா தாக்குதலுக்கு பதிலடி
- எம்.பி பதவி: தரைவார்த்த அ.தி.மு.க; தி.மு.கவுக்கு ஜாக்பாட் - யாருக்கு வாய்ப்பு?
- குடும்பம், குழந்தையை கவனிக்காமல் கொரோனாவுடன் போரிடும் செவிலியர்களின் கதைகள்
- தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க புதிய சிகிச்சை நெறிமுறை
- சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்
- பிகாரை தொடர்ந்து உ.பி காஸிபூர் நதிக்கரையிலும் ஒதுங்கிய சடலங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












