`தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஆக்சிஜன் தாருங்கள்`: மோதிக்கு முதல்வர் ஸ்டாலினின் முதல் கடிதம்

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பு குறைந்து வருவதால் உடனடியாக கூடுதல் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல க்ரையோஜெனிக் கன்டெய்னர்களை வழங்க வேண்டுமென்றும் பிரதமர் நரேந்திர மோதியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலாந்தாய்வு செய்தார். இதற்குப் பிறகு கூடுதலாக ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் ஸ்டாலின்.

பட மூலாதாரம், Getty Images
"தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுவருகிறோம். தமிழ்நாட்டில் தினமும் 440 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் ஆக்சிஜன் தேவை மேலும் 400 டன் அதிகரித்து மொத்தத் தேவை 840 டன்னாக உயரக்கூடும். ஆனால், தேசிய ஆக்ஸிஜன் திட்டப்படி தமிழ்நாட்டிற்கு 220 டன் ஆக்சிஜன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையுடன் மாநில அரசின் அதிகாரிகள் மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் பேச்சு வார்த்தை நடத்தியதில், தமிழ்நாட்டிற்கு 476 டன் ஆக்சிஜனை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இது தொடர்பான உத்தரவு வெளியிடப்படவில்லை என்பதால், மருத்துவமனைகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பு அளவு வெகுவாகக் குறைந்துவரும் நிலையில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பின்வரும் அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன:
- கேரளாவின் கஞ்சிக்கோட்டில் உள்ள ஐநாக்ஸ் தொழிற்சாலையிலிருந்து அடுத்த நான்கு நாட்களுக்கு 40 டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும்.
- திருப்பெரும்புதூரில் உள்ள ப்ராக்ஸ்ஏர் ஆலையிலிருந்து 60 டன் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதில் 20 டன் இரண்டு நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும்.
- இடைக்காலத்தில் நிலைமையை சமாளிக்க ரூர்கேலாவில் உள்ள செய்ல் ஆலையிலிருந்து 120 டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும்.
இதற்கான உத்தரவுகள் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள ஆக்சிஜனின் அளவு மிக சிக்கலான நிலையில் உள்ளது. பிரதமர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மாற்றப்பட்ட அளவின்படி ஆக்சிஜனை வழங்க உத்தரவிட வேண்டும். அதேபோல, தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜனை கொண்டுவர 20 க்ரையோஜெனிக் கன்டெய்னர்களையும் வழங்கி உத்தரவிட வேண்டும்" என தன்னுடைய கடிதத்தில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், ஆக்சிஜன் கையிருப்பு குறைந்துவருவதால் சனிக்கிழமைக்குப் பிறகு நிலைமை மோசமாகக்கூடும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
பிற செய்திகள் :
- மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், பால் விலை குறைப்பு
- `மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்?’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன்
- தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம்
- `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












