கொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம்

(இன்று 06.05.2021 வியாழக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபரை ஊருக்கு வெளியே தங்க வைத்ததால் அவர் சிகிச்சை ஏதும் எடுத்துக் கொள்ள முடியாமல் நிலை குலைந்து உயிரிழந்ததாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார்.

அப்போது அவரது உறவினர்கள் உள்பட யாரும் அவரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. மேலும் ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒதுக்குப்புறத்தில் அவர்களை தங்குமாறு கிராமத்தினர் தெரிவிக்க, ஊருக்கு வெளியே அவரது குடும்பத்தினர் ஒரு குடிசை போட்டு தங்கினர். ஆனால் அவர் தனது உடல்நிலையைப் பராமரிக்க தேவையான எந்த வசதியும் செய்யவில்லை.

மேலும் மருத்துவ சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்ளாத நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமானது. மூச்சுத்திணறல் காரணமாக நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரது மகள் அவருக்கு தண்ணீர் கொடுப்பதற்காக அருகே சென்றபோது, தனது மகளுக்கும் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவரது தாய் அவரை தடுத்து நிறுத்தினார்.

இருப்பினும் தந்தையின் துடிப்பை பார்க்க முடியாத மகள் இறுதியாக தண்ணீரை தந்தையின் வாயில் ஊற்றிய நிலையில் சில நிமிடங்களிலேயே குடும்பத்தினர் கண்ணெதிரே கூலித்தொழிலாளி துடிதுடித்து உயிரிழந்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு ரேஷன் உணவுப் பொருள்களை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் "பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சிரமங்களைத் தணிப்பதற்கு இது உதவும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நபா் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம், 79.88 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தத் திட்டப்படி சுமார் 80 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்படும். இவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,332.92 கோடி செலவாகும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை: கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமம் - அலஹாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த வழக்கு ஒன்றில், மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நேரத்தில் கொடுக்காமல் இருப்பது ஒரு இன படுகொலைக்கு சமமான குற்றம் என அலஹாபாத் உயர் நீதிமன்றம் கூறியதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுகாரணமாக நாளுக்கு நாள் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு பொது நலன் வழக்குகள் (பிஐஎல்) தொடுக்கப்பட்ட நிலையில் அலஹாபாத் நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது "கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த செய்திகளை படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நேரத்தில் கொடுக்காமல் இருப்பது கிரிமினல் குற்றமாகக் கருதுகிறோம்.

அது ஒரு இன படுகொலைக்கு சமமான குற்றமாகும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு எதிராக உடனடியாக மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

மராத்தா இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது - உச்ச நீதிமன்றம்

ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று (மே 06, புதன்கிழமை) மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்பளித்துள்ளதாக தி இந்துவில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

அசோக் பூஷன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்பு, 50 சதவீதம் என்கிற உச்ச வரம்பைக் கடந்து மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்க எந்த ஒரு பிரத்யேக காரணங்களோ, அசாதாரண சூழலோ இல்லை என கூறியுள்ளது.

மராத்தா இடஒதுக்கீட்டுக்கு காரணமாக இருந்த நீதிபதி என் ஜி கெய்க்வாட் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையையும் உச்ச நீதிமன்றம் புறந்தள்ளி இருக்கிறது. அதோடு சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான சட்டம் 2018-க்கு ஆதரவான மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்பையும் உச்ச நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளது.

கடந்த ஜூன் 2019-ல் நீதிபதி கெய்வாட் ஆணையத்தின் அறிக்கையை கருத்தில் கொண்டு, மும்பை உயர் நீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீட்டு அளவை 16 சதவீதத்தில் இருந்து, கல்வியில் 12 சதவீதமாகவும், வேலைவாய்ப்புகளில் 13 சதவீதமாகவும் குறைத்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் மராத்தா சமூகத்தினருக்கு தனியே ஒரு இடஒதுக்கீட்டை வழங்குவது சட்டப்பிரிவு 14 (சமத்துவத்துக்கான உரிமை) மற்றும் சட்டப் பிரிவு 21 (சட்ட செயல்முறைகள்) எதிரானது என கூறியுள்ளது.

மிக முக்கியமாக 50 சதவீதம் இட ஒதுக்கீட்டு உச்ச வரம்பை வரையறுக்கும், 1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்திரா சாஹ்னி வழக்கு தீர்பை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :