You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆக்சிஜன் கொள்ளளவை ஒரே ஆண்டில் அதிகரித்த மதுரை: எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நாடு முழுவதும் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் திணறிவரும் நிலையில்,மதுரை அரசு தலைமை மருத்துமனையில் ஆக்சிஜன் சேமிப்பு வசதி அதிகரிக்கப்பட்டு, ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நடந்தது எப்படி?
மதுரையில் உள்ள அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை இந்தியாவின் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்று. 2,500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் செயல்படும் இந்த மருத்துமனை, இந்தியாவில் 24 மணி நேரமும் அனைத்து பிரிவுகளிலும் மூன்றாம் நிலை மருத்துவ வசதி கிடைக்கும் வெகுசில மருத்துவமனைகளில் ஒன்று.
2020ஆம் ஆண்டில் கொரோனா உச்சகட்டத்தில் இருந்த ஜூலை மாதத்தில் இந்த மருத்துவமனையில் 6,000 லிட்டர் திரவ ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கான கொள்கலன் மட்டுமே இருந்தது.
அதன் மூலம் 400 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மருத்துவமனையில் 20,000 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜனை சேமித்து வைக்கக்கூடிய கொள்கலன் நிறுவப்பட்டிருக்கிறது. 400 படுக்கைகளுக்கு மட்டும் கொடுப்பட்டிருந்த இணைப்பு, மேலும் 700 படுக்கைகளுக்குத் தரப்பட்டு மொத்தம் 1,100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்பட்டிருக்கிறது.
இது தவிர, மதுரையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் தோப்பூரில் அமைந்திருக்கும் அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனையிலும் புதிதாக திரவ ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு பணிகளும் கொரோனாவின் முதல் அலை சற்று ஓய்ந்திருந்த காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன.
"கொரோனாவின் முதல் அலை பரவ ஆரம்பித்தபோது, கடுமையான நோய்த் தொற்றுடன் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜாகிர் ஹுசைன். ஏப்ரல் முதல் மே மாதத்தின் நடுப்பகுதி வரை அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு 70 சதவீதம் அளவுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அவர் சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 45 நாட்கள் அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட மொத்த ஆக்சிஜன் அளவு, சுமார் 45 லட்சம் லிட்டர். 45 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலம் பெற்றார். கொரோனா தாக்கினால் என்ன சிகிச்சை அளிப்பது என்று முழுமையான நெறிமுறைகள்கூட உருவாகாத காலகட்டத்தில் இது நடந்தது.
அந்தத் தருணத்தில்தான் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தோம்" என்கிறார் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன்.
அந்தத் தருணத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக மதுரை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார் டாக்டர் சந்திரமோகன். அவரும், மாவட்ட ஆட்சித் தலைவர் வினய், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் கலந்தாலோசித்து, உடனடியாக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்கலன் அளவை அதிகரிப்பது என முடிவுசெய்தனர்.
இதில் மூன்று பணிகள் இருந்தன. ஒன்று கொள்கலனை நிறுவுவது. அடுத்ததாக படுக்கைகளுக்கு குழாய் மூலம் இணைப்புக் கொடுப்பது. அடுத்ததாக ஆக்சிஜன் செல்லும் அளவைக் கண்காணிக்கும் ஃப்ளோ மானிட்டர்களை நிறுவுவது. இந்த மூன்றுக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட்டது. டெண்டர் பணிகள் முடிந்த பிறகு, இதற்கான பொருட்கள், ஆட்கள் ஆகியவை பாண்டிச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து வர வேண்டியிருந்தது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் இதில் தீவிர கவனம் செலுத்தியதால், ஒட்டுமொத்தப் பணிகளும் மூன்றரை மாதத்திற்குள் முடிந்தன. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் ராஜாஜி மருத்துவமனையில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலன் நிறுவப்பட்டுவிட்டது. படுக்கைகளுக்கும் இணைப்புக் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 1,542 படுக்கைகளில் 848 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையவை.
மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை தவிர, தோப்பூரில் இருந்த அரசு நெஞ்சக மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டுமென்றால், டி - சிலிண்டர் எனப்படும் ஆளுயர ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம்தான் அவை அளிக்கப்பட்டுவந்தன. அதனால், முப்பது படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் வசதி இருந்தது.
"அந்தத் தருணத்தில் தோப்பூரிலும் ஆக்சிஜன் வசதியை நிரந்தரமாக ஏற்படுத்த முடிவுசெய்தோம். அதன்படி, இங்கிருந்த காச நோயாளிகள் ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தோப்பூர் மருத்துவமனை முழுமையான கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. பிறகு, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் பொருத்தப்பட்டது" என்கிறார் தோப்பூர் அரசு நெஞ்சக மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலரான காந்திமதிநாதன்.
இந்தக் கலன் பொருத்தப்பட்ட பிறகு இங்கு மொத்தமுள்ள 260 படுக்கைகளில் 140 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.
"முதன் முதலில் கொரோனா தாக்கியபோது, மதுரையைப் பொறுத்தவரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் வசதி ஏதும் இல்லை. மக்கள் அனைவருமே அரசு மருத்துவமனையைத்தான் நம்பியிருக்க வேண்டும். அந்தத் தருணத்தில்தான் படுக்கைகளின் எண்ணிக்கையையும் ஆக்சிஜன் அளிக்கும் வசதியையும் அதிகரிக்க வேண்டுமென முடிவெடுத்தோம்" என்கிறார் மதுரைக்கான கொரோனா கட்டுப்பாடு சிறப்பு அதிகாரியான சந்திரமோகன்.
கொரோனா நோயாளிகளைக் காப்பதில் ஆக்சிஜன் மிக முக்கியமானது; அதன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதை அந்தத் தருணத்திலேயே உணர்ந்து செயல்பட்டோம் என்கிறார் சந்திரமோகன்.
தமிழ்நாட்டில் இப்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், ஆக்சிஜன் வசதிகளுடன் புதிதாக 12,500 புதிய படுக்கை வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. அதில் மதுரைக்கென 250 படுக்கைகளே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. "காரணம், ஏற்கனவே இங்கு போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்தியிருப்பதுதான். இப்போது இந்தியாவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் போது எங்களால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதற்குக் காரணம், முதல் அலையின் போது எடுத்துக்கொண்ட சிறப்பு நடவடிக்கையும் அதற்காக உழைத்த மனிதர்களும்தான்" என்கிறார் சு. வெங்கடேசன்.
மதுரையைப் பொறுத்தவரை ஏப்ரல் 27ஆம் தேதி நிலவரப்படி, 4,073 பேர் கொரோனாவுக்காக சிகிச்சைபெற்று வருகின்றன. இதுவரை அந்த மாவட்டத்தில் 29,005 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 502 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- கொரோனா ஆக்சிஜன்: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- கொரோனா தடுப்பூசி: 18-45 வயதுடையவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் பதிவு
- ஸ்புட்னிக் V, கோவிஷீல்ட், கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
- "வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது"
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: