You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லை; திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் - தொடரும் அவலம்
டெல்லியில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்க இடமில்லாததால் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் டெல்லி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பிவிட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை ஒருநாளில் மட்டும் டெல்லியில் 380 பேர் உயிரிழந்தனர்.
இந்திய அளவில் கடந்த சில நாள்களிலேய பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை ஒரே நாளில் 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
செவ்வாய்க்கிழமையன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 3,23,144-ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 1.7 கோடியை நெருங்கிவிட்டது. இவர்களில் 1.92 லட்சம் பேர் உயிரிழந்து விட்டனர்.
ஆனால் அரசின் புள்ளி விவரங்களைவிட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
என்டிடிவி நடத்திய ஒரு புலனாய்வில் டெல்லியில் கடந்த வாரம் வரை அரசு அளித்த புள்ளி விவரங்களைவிட 1,150 பேர் அதிகமாக இறந்திருப்பதாகத் தெரியவந்தது. நாட்டின் வேறு பகுதிகளிள் நடத்தப்பட்ட புலனாய்வுகளிலும் இதுபோன்று எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இரவும் பகலுமாக சுடுகாடுகளில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். விறகுகளை அடுக்குவது போன்ற வேலைகளை இறந்தவர்களின் உறவினர்களே செய்ய வேண்டியிருக்கிறது.
சுடுகாடுகளில் உடல்களை எரிப்பதற்கு நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது. உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். வரும் நாள்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுவதால் தற்காலிகத் தகன மேடைகளை அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
வாகன நிறுத்துமிடங்கள், பூங்காங்கள், காலி மைதானங்கள் போன்றவற்றில் தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
டெல்லியின் சராய் காலே கான் மயானத்தில் 27 புதிய தகன மேடைகள் கட்டப்பட்டுள்ளன. அருகில் உள்ள பூங்காவில் மேலும் 80 தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
யமுனை நதிக்கரையில் கூடுதலாக தகன மேடைகளை அமைக்க முடியுமா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
22 தகன மேடைகளைக் கொண்டிருந்த இந்த மயானத்தில் இரவும் பகலும் வேலை செய்ய வேண்டியிருப்பதாக "தி ஹிந்து" நாளிதழிடம் ஊழியர் ஒருவர் கூறியிருக்கிறார்.
கிழக்கு டெல்லியில் உள்ள காஜிப்பூர் மயானத்தை ஒட்டிய வாகன நிறுத்துமிடத்தில் கூடுதலாக 20 தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக உடல்கள் வந்ததால் கூடுதல் தகன மேடைகள் அமைக்க வேண்டியிருந்ததாக அதிகாரி ஒருவர் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழிடம் தெரிவித்துள்ளார். மூன்று முதல் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும், ஒரு உடலை எரிப்பதற்கு ஆறு மணி நேரம் ஆவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிற மயானங்களிலும் நிலைமை மோசமாகவே உள்ளது. சில மயானங்களில் கூடுதல் தகன மேடைகளை அமைப்பதற்கு இடமில்லை என பாதிக்கப்பட்டோருக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதுடன் உடல்களை எரிப்பதற்கும் உதவும் முழு வளர்ச்சிக்கான மையம் என்ற அமைப்பை நடத்தும் சுனில் குமார் அலெடியா கூறினார்.
2 கோடி பேர் வசிக்கும் டெல்லியில் மருத்துவமனைகள் நிரம்பி, ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மயானங்களில் நெருக்கடி தொடரக்கூடும் என்றே கருதப்படுகிறது.
ஆக்சிஜன் தீர்ந்து போனதால் நகரில் உள்ள இரு மருத்துவமனைகளில் நோயாளிகள் இறந்துவிட்டனர். போதிய எண்ணிக்கையில் ஆம்புலன்களும் இல்லை. மருத்துவமனைகளில் படுக்கை கிடைத்தால்கூட பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்து வருகிறார்கள். ஆம்புலன்ஸுக்கு காத்திருந்தே பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆக்சிஜன் தர முடியுமா, தீவிர சிகிச்சைப் பிரிவில் இடம் கிடைக்குமா, மருந்துகள் எங்கே வாங்கலாம் என்பன போன்ற கோரிக்கைள் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கின்றன. நகரின் பரிசோதனைக் கூடங்களும் திணறிக் கொண்டிருக்கின்றன.
பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்திருக்கின்றன. ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சேகரிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை அளிக்கின்றன.
வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் சேகரிக்கும் இயந்திரங்களை இந்தியாவுக்கு வழங்கும் பணியை பிரிட்டன் தொடங்கியிருக்கிறது. ஆக்சிஜன் வழங்கப் போவதாக பிரான்ஸ் அறிவித்திருக்கிறது. பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உதவி செய்ய இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முழுமையாக உதவி செய்ய உறுதியளித்திருக்கிறார். கோவிஷீல்ட் தடுப்பு மருந்து தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அகற்றியிருக்கிறது. மருத்துவப் பொருள்களையும், பாதுகாப்பு உபகரணங்களையும் அனுப்பியிருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமுக்கு திரவ ஆக்சிஜனை வழங்குவதற்கு அண்டை நாடான பூடான் உறுதியளித்துள்ளது.
இந்தியாவுடன் பதற்றமான உறவைக் கொண்டிருக்கும் பாகிஸ்தானும் மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்திருக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்த எடி அறக்கட்டளை 50 ஆம்புலன்ஸ்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா ஆக்சிஜன்: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- கொரோனா தடுப்பூசி: 18-45 வயதுடையவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் பதிவு
- ஸ்புட்னிக் V, கோவிஷீல்ட், கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
- "வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது"
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: