You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆக்சிஜன் கேட்டு ட்வீட் செய்ததற்காக இளைஞர் மீது வழக்கு
மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த தன் தாத்தாவுக்காக, ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் மீது, உத்தரப் பிரதேச போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக, மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தியைக் பரப்புவதாகக் கூறி, போலீசார் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கினால் அவர் சிறை கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது.
என்ன நடந்தது?
26 வயதாகும் ஷஷாங்க் யாதவ் தான் அந்த இளைஞர். இவர் கடந்த ஏப்ரல் 26 திங்கட்கிழமை இரவு 7.39 மணிக்கு, தன் ட்விட்டர் பக்கத்தில் "உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும்" என நடிகர் சோனு சோத் கணக்கை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். அதில் கொரோனா என்கிற வார்த்தையோ அல்லது தன் தாத்தா எந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற விவரங்களோ குறிப்பிடவில்லை.
அப்பதிவை, ஷஷாங்கின் நண்பர் ஒருவர் ரீ ட்விட் செய்தார். அதோடு 'தி ஒயர்' பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரை தொடர்பு கொள்கிறார். அப்பதிவு அப்படியே பரவி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கவனத்துக்குச் செல்கிறது.
மறுபுறம் ஷஷாங்கின் தாத்தா கடந்த ஏப்ரல் 26 திங்கட்கிழமை இரவே மாரடைப்பால் இறந்துவிட்டார். அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள். அவர் என்ன மாதிரியான சூழலில் உயிரிழந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
"நீங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்த எண்ணில் ஷஷாங்கை தொடர்பு கொள்ள மூன்று முறை முயற்சித்தேன் எந்த பதிலும் இல்லை. உதவி தேவைப்படுபவர்களைச் தேடிச் சென்று தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் அமேதி காவல் துறையினரிடம் கூறியுள்ளேன்" என அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தன் ட்விட்டர் கணக்கில் கடந்த ஏப்ரல் 27, செவ்வாய்கிழமை நன்பகல் 12.55 மணிக்கு பதிவிட்டிருக்கிறார்.
மாநில அரசின் கடுமையான நடவடிக்கை:
ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக போலி செய்திகளையோ, வதந்திகளையோ பரப்பினால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என பாஜகவின் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு, உத்தரப் பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவும் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் அமேதி நகர அதிகாரிகள், ஷஷாங்கின் தவறான ட்விட்டர் பதிவு, மற்றவர்களையும் அரசின் மீது குற்றம் சாட்ட வைத்திருக்கிறது என கடந்த செவ்வாய் கிழமை இரவு ஷஷாங்க் மீது குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
"தவறான தகவல்களைப் பரப்பும் குற்றச்சாட்டின் கீழ் ஷஷாங்க் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என அமேதி நகரின் மூத்த காவல் துறை அதிகாரி அர்பித் கபூர் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் எதார்த்தத்தில், சுகாதர அமைப்பு செயல்பட முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று. கொரோனா பிரச்சனையின் தீவிரத்தை அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறைத்து மதிப்பிடுவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் பேச்சு சுதந்திரம் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவை மிகவும் சீர்குலைந்து வருவதாக கூறுகிறார்கள் விமர்சகர்கள்.
கொரோனா பிரச்சனையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி கையாளும் விதம் தொடர்பான விமர்சனங்கள் சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றன.
அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ட்விட்டர் பதிவுகளை நீக்குமாறு சமீபத்தில் இந்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதுவும் மக்கள் மத்தியிலும், சர்வதேச அரங்கில் பெரும் விமர்சனங்களைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கோலம்
- கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை ஜீப்பில் ஏற்றிய டிஎஸ்பி: கடும் எதிர்ப்பு
- கொரோனா சிகிச்சை உபகரணங்கள்: ஐ.நா உதவியை நிராகரித்த இந்தியா
- பருவநிலை மாற்றம்: ஒரு சிறிய பச்சை கல் நமது எதிர்காலம் குறித்து விடுக்கும் எச்சரிக்கை
- யோகி ஆதித்யநாத்: "கொரோனா ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை" - பிறகு உயிரிழப்பு அதிகரிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: